“நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், கடந்த 26ம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மீளமைப்பதற்கு ஆதரவளிப்போம்“.
கடந்த 29ம் திகதி, ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதம் இது.
இந்த கடிதமே, இரா.சம்பந்தனிற்கு ஒரு பொறியாக திரும்பவும் வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற நெருக்கடி தீர்ந்ததன் பின்னர், இந்த கடிதத்தால் சம்பந்தர் நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது.
அது என்ன நெருக்கடி?
முன்னகர முடியாமல் இருந்த இலங்கை அரசியலில், அண்மைநாட்களில் ஏற்பட்டுள்ள சிறிய அசைவிற்கு காரணமாக அமைந்த கடிதமும் இதுதான். நாடாளுமன்றத்திற்குள் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை நிறைவேற்றி போதாகட்டும், பின்னர் ஊடகங்களின் முன்னர் பேசிய போதாகட்டும், கூட்டமைப்பு சொல்லி வந்த விடயம்- நாம் எந்த பிரதமரையும் ஆதரிக்கவில்லை. அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டு, ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. அதை காப்பாற்றவே முயற்சிக்கிறோமே தவிர, எந்த ஆட்சியையும் அமைக்கவல்ல என.
நாம் யாரையும் ஆதரிக்கவில்லை, மஹிந்தவை எதிர்க்கிறோம் என கூட்டமைப்பு சொன்னது. அவர்களிடம் 14 ஆசனங்கள். ஜேவிபியும் சொன்னது. அவர்களிடம் 6 ஆசனங்கள். மஹிந்த அரசுக்கு எதிராக விழுந்த வாக்குகள் 123. எந்த பிரதமரையும் ஆதரிக்காத த.தே.கூ, ஜே.வி.பியின் 20 ஆசனங்கள் கழிந்தால், ஐ.தே.முன்னணியிடம் 103 ஆசனங்கள்தான். நாடாளுமன்ற பெரும்பான்மையை அவர்களாலும் நிரூபிக்க முடியாது. ஒரு வகையில் பார்த்தால், அப்போது- அதாவது நவம்பர் 29ம் திகதிக்கு முன்னர்- மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியின் முடிவிற்கு, அவர் தர்க்கரீதியான காரணமொன்றை வைத்திருந்திருக்ககூடும். மஹிந்தவிடம் மட்டுமல்ல, ரணிலிடமும் பெரும்பான்மையில்லையென அவர் வாதிட்டிருக்கலாம். இதனால்தான் அரசியல் நெருக்கடி நீடித்தது.
பிரச்சனையை சமாளிக்க, த.தே.கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவு ஐ.தே.முன்னணிக்கு தேவைப்பட்டது. அதைத்தான் நவம்பர் 29ம் திகதி கடிதம் மூலம் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியது.
இந்த கடிதம் சம்பந்தரின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் ஆபத்தையும் உருவாக்கியுள்ளது.
2015 நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், 16 ஆசனங்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்.
அப்போது நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அணி- நாற்பது வரையான எம்.பிக்கள்- தனித்து இயங்கினார்கள். தேசிய அரசின் பங்காளியான சு.கவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் போட்டியிட்டு எம்.பியானவர்கள். ஆனால் தனித்து இயங்கினார்கள். நாடாளுமன்றத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாமே என்றும், எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே தேவையென்றும் மஹிந்த அணி அடம்பிடித்தது.
சபாநாயகர் மறுத்து விட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணம்- மஹிந்த அணி நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கினாலும், அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பிக்கள். கை சின்னத்தில் போட்டியிட்டார்கள். சு.க இப்போது தேசிய அரசின் பங்காளி. ஆகவே அவர்களும் பங்காளிகள்தான். எதிர்க்கட்சி அல்ல என்றார்.
இந்த இடம்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சிக்கலாக இருக்கும். ஏனெனில், தேசிய அரசிலிருந்து சு.க வெளியேறி விட்டது. ஒருவேளை, ஐ.தே.முன்னணி அரசாங்கம் அமைந்தால், அந்த அரசியல் கூட்டமைப்பும் பங்காளியாகும். கூட்டமைப்பு அமைச்சு பதவி ஏற்காவிட்டாலும், உண்மையான அர்த்தத்தில் அரச பங்காளியாகவே இருக்கும்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொதுஜன ஐக்கிய முன்னணியோ, சு.கவோ கோரலாம்.
மஹிந்த அணி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரியபோது, அதை வழங்கமைக்கு சபாநாயகர் சொன்ன தர்க்கம், அப்போது கூட்டமைப்பிற்கு இடிக்கும்.
எப்படியான சுவாரஸ்யங்கள் நடக்கிறதென பார்க்க இன்னும் சில காலம் பொறுத்திருப்போம்.