‘ஒரு மணித்தியாலத்தில் கையெழுத்திட வலியுறுத்தினர்’- செல்வம்; ‘கட்சியை முடிவை மீறுகிறீர்கள்’-மத்தியகுழு: அனல்பறந்தது ரெலோ கூட்டத்தில்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்தியகுழு கூட்டத்தில் நேற்று அனல் பறந்துள்ளது. கட்சியையும், இனத்தையும் விற்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோரை கட்சியின் நேரடியாகவே குற்றம் சுமத்தினர். இதற்கு சப்பைக்கட்டு காரணங்களை இரண்டு எம்.பிகளும் சொல்ல, “இனிப்பு கொடுத்து சிறுபிள்ளைகளை சமாளிப்பதை போல இங்கு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்“ எனபெரும்பாலான உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

ரெலோவின் மத்தியகுழு கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நெருக்கடியையடுத்து, ஐக்கிய தேசிய  முன்னணியின் பிரதமர் தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் ரெலோவின் எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர்.

நாடாளுமன்றத்திற்குள் ஆதரிப்பதென்பது தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை. தனியே நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுக்க முடியாதென்றும், உடனடியாக கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றும் ரெலோவிற்குள் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று கட்சியின் மத்தியகுழு கூடியது. மத்தியகுழு கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ்பக்கத்துடன் பகிர்நது கொண்டனர்.

ரெலோவின் மத்தியகுழு உறுப்பினர்கள் 87 பேரில், 69 பேர் நேற்று கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் மீது மத்தியகுழு உறுப்பினர்கள் காரசாரமாக குற்றம் சுமத்த ஆரம்பித்தனர்.

“கட்சியின் தீர்மானத்தை மீறி தமிழரசுக்கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறீர்கள்“ என குற்றம் சுமத்தப்பட்டது.

ரெலோவின் உயர்பீடம் அண்மையில் கொழும்பில் கூடியபோது, எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக இருவரும் நடந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டது. உயர்பீட கூட்டத்தில்- “மஹிந்த ராஜபக்ச பிரதமைராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்பை மீறிய செயல். அதனால் அதை எதிர்ப்போம். நாடாளுமன்றத்தில்- நவம்பர்14ம் திகதி- வாக்கெடுப்பில் மஹிந்தவிற்கு எதிராக வாக்களிக்கலாம். ஆனால் யாராவது ஆதரவு கோரினால், அது பற்றி மீண்டும் கட்சிக்குள் விவாதித்தே முடிவெடுப்பது“ என அப்போது முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், இறுதியாக நடந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும், “யாராவது ஆதரவு கோரினால் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டியே முடிவெடுப்பது“ என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரண்டு முடிவுகளையும் மீறி, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கையொப்பமிட்டது தவறு என செல்வம், கோடீஸ்வரன் மீது சரமாரியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

“என்ன அடிப்படையில் ஆதரவாக கையொப்பமிட்டீர்கள்? பெற்றுக்கொண்ட உத்தரவாம் என்ன? அரசியல் தீர்வு தொடக்கம் அபிவிருத்தி பணிகள் வரை உங்களிற்கு ஏராளம் பொறுப்புக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றும் வாக்குறுதி எங்கே?“ என கேட்டனர்.

“விரைவில் ரணில் எழுத்துமூல வாக்குறுதி தருவார்“ என எம்.பிக்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

“அவர்கள் எழுத்துமூலம் வாக்குறுதி தராமலேயே நீங்கள் கையொப்பமிட்டு கொடுத்து விட்டீர்களா? நீங்கள் ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டு கையொப்பமிட்டீர்கள் என மக்கள் சந்தேகிப்பதில் என்ன தவறு?“ என விமர்சிக்கப்பட்டது.

“கட்சிக்கு தெரிவிக்காமல் எந்த அடிப்படையில் ஆட்சியமைக்க கையொப்பமிட்டீர்கள்?. கட்சி கட்டுக்கோப்பையும், கூட்டு பொறுப்பையும் மீறியுள்ளீர்கள். ரணில் எழுத்து மூலம் வாக்குறுதி தருவார் எனஎப்படி நம்பி, கையொப்பமிட்டீர்கள்? இதுவரை உங்களிற்கு எத்தனை வாக்குறுதி தந்தார்? அவற்றில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டதா? நாடாளுமன்றத்தில் ரணிலுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க முடிவெடுத்தது, ரணில் தந்த 10 அம்ச வாக்குறுதியால் என்றீர்கள். அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு அம்சத்தை சொல்லுங்கள்?“ என எம்.பிக்கள் இருவரையும் கிடுக்குப்பிடி பிடித்தனர்.

மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 69 உறுப்பினர்களில் சுமார் 60 உறுப்பினர்கள் இருவரையும் காட்டமாக விமர்சித்தனர். அதில் கட்சியின் செயலாளர் எம்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், விந்தன் கனகரட்னம், வினோ நோகராதலிங்கம் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். கடுமையான விமர்சனங்களால் எம்.பிக்கள் இருவரும் திணற ஆரம்பித்தனர்.

“கடந்த வரவு செலவு திட்டத்திற்கு நிபந்தனையடிப்படையிலேயே ஆதரவளிக்க வேண்டும் என கட்சிக்குள் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கட்சியின் தீர்மானத்தை மீறி கோடீஸ்வரன் ஆதரித்து வாக்களித்தார். செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பிற்கு செல்லாமல் விட்டுவிட்டு, பின்னர் வரவு செலவு திட்டம் வெற்றியடைந்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டார். உங்களிற்கு கட்சிக்குள் கூட்டுப்பொறுப்புள்ளது. அதை ஏன் நீங்கள் கடைப்பிடிக்கவில்லை? தமிழரசுக்கட்சி பிழையாக உங்களை வழிநடத்துகிறது“ என குற்றம்சுமத்தப்பட்டது.

நிலைமை எல்லைமீறி செல்லத் தொடங்க, “தன்னிச்சையாக- கட்சிக்குள் கலந்து பேசாமல்- முடிவெடுக்கவில்லை. நான் எல்லோருடனும் கலந்து பேசித்தான் முடிவெடுத்தேன்“ என கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

“யாருடன் கலந்து பேசினீர்கள்?“ என மத்தியகுழுவில் கேள்வியெழுப்பப்பட்டது.

“தலைமைக்குழுவில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன்“ என செல்வம் அடைக்கலநாதன் பதிலளித்தார். தம்முடன் அப்படியொரு கலந்துரையாடலை செல்வம் அடைக்கலநாதன் செய்யவேயில்லையென தலைமைக்குழு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் செல்வம் அடைக்கலநாதனின் தர்மசங்கடம் அதிகரித்தது.

“அரசியல்குழு உறுப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை சொல்லி, கலந்துரையாடுமாறு எனது செயலாளர் சுரேனிடமும் சொல்லியிருந்தேன்“ என பந்தை தட்டிவிட்டார் செல்வம். அப்படியான கலந்துரையாடலை நடத்தியதாக சுரேன் குறிப்பிட்டார். அரசியல்குழு உறுப்பினர்கள் பலர், தம்முடன் அப்படியொரு கலந்துரையாடலே நடத்தப்படவில்லையென மறுத்தனர்.

“உங்களிற்கெல்லாம் தொலைபேசி அழைப்பேற்படுத்தினேன். அது ஓவ் செய்யப்பட்டிருந்தது. அதனால்தான் பேச முடியாமல் போனது“ என சுரேன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதற்கு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில் வரும் அழைப்புக்களை காண்பிக்க அலேர்ட் சிஸ்டம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

இதற்குள் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. ஐதேக ஆட்சியமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பது தவறு, ரணிலை ஆதரிக்க கடிதம் கொடுத்ததாக மக்களிடம் விமர்சனங்கள் அதிகரிக்கிறதென உறுப்பினர்கள் குற்றம்சுமத்த, நிலைமையை சமாளிக்க- ஆட்சியின் பங்காளிகளாக இருக்கும் அர்த்தத்தில் கடிதம் வழங்கவில்லையென செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக மைத்திரிக்கு அனுப்பிய கடிதத்தை (14 எம்.பிக்களும் கையொப்பமிட்டு) வாசித்து விளக்கமளித்தார் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் சுரேன். கடிதத்தின் ஆங்கில வடிவத்தை மேலோட்டமாக படித்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறான வேறு அர்த்தம் வரும் விதத்தில் தமிழில் விளக்கமளித்தார். செயலாளர் சிறிகாந்தா உடனே சுதாகரித்து, ஆங்கில வடித்தை படிக்கும்படி கூறினார். அதற்கு தமிழில் பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இது மத்திய குழுவையே மேலும் கோபப்படுத்தியது. “எம்மை ஏமாற்ற முயல்கிறீர்களா?“ என அவர்கள் கொந்தளித்து, எதிர்வரும் 5ம் திகதி வாக்கெடுப்பு நடந்தால், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, அதில் முடிவுகள் எடுக்காவிட்டால், ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரித்து வாக்களிக்க கூடாதென வலியுறுத்தினர்.

நெருக்கடி அதிகரிக்க, “எமக்கு யோசிக்க போதிய அவகாசம் தரப்படவில்லை. ஒரு மணித்தியாலத்திற்குள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமென தமிழரசுக்கட்சி தலைவர்கள் நெருக்கடி தந்தார்கள். அதனால் உங்களுடனெல்லாம் ஆலோசிக்க முடியவில்லை“ என செல்வம் அடைக்கலநாதன் தன்னிலை விளக்கமளித்தார்.

அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. “இனநலனுடன் தொடர்புபட்ட விடயம். யாரை ஆட்சிக்கு கொண்டு வருவதென்பது எமது அரசியலில் முக்கியமான ஒரு நகர்வு. அதைப்பற்றி ஆலோசிக்க நேரம் தரவில்லை, கையெழுத்திட வற்புறுத்தினார்கள் என எப்படி சமாதானம் சொல்லலாம். நாங்கள் என்ன சின்னப்பிள்ளைகளா? இனிப்பு கொடுத்து சிறுபிள்ளைகளை சமாளிப்பதை போல இங்கு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்“ என கொந்தளித்தனர்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டாமல், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதென மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியதையடுத்து, அங்கிருந்தபடியே தமிழரசுக்கட்சியின் தலைவரை் மாவை சேனாதிராசா, பேச்சாளர் சுமந்திரனிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட செல்வம் அடைக்கலநாதன், மத்திய குழுவின் முடிவை தெரியப்படுத்தினார். ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டாமல் ஆதரவளிக்க முடியாது (!) என்பதையும் தெரிவித்தார்.

இதையடுத்து நாளை மறுநாள் (04) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூடவுள்ளது. வாக்களிப்பிற்கு முந்தைய நாளில் கூடும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ரெலோ தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.

யார் பிரதமர் என்பதல்ல, எமக்கு நிபந்தனைகளே முக்கியம்.

1.வடக்கு கிழக்கு இணைப்பு.

2.13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல்.

3.நிபந்தனையின்றி அரசியல்கைதிகள் உடனடியாக விடுவித்தல்.

4.காணி விடுவிப்பு

5.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கல்

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் தரப்பையே ஆதரிப்பதென ரெலோ முடிவெடுத்துள்ளது.

5ம் திகதி வாக்கெடுப்பு. ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிப்பதாக கையொப்பமிட்டு கொடுத்து விட்டார்கள் இரண்டு எம்.பிக்களும். ஆனால் 4ம் திகதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தற்போதைய இரண்டு பிரதமர் போட்டியாளர்களையும் மிரள வைக்கும்- அதேநேரம், ஈழத்தமிழர்கள் சார்பில் நிச்சயம் வலியுறுத்தப்பட வேண்டிய, அடிப்படையான- கோரிக்கைகளுடன் ரெலோ பிரமுகர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு போகிறார்கள்.

என்ன நடக்கும்?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here