தமிழ் மக்கள் கூட்டணி: முக்கிய பொறுப்புக்களில் யாரெல்லாம் இருப்பார்கள்?

©தமிழ்பக்கம்

கூட்டமைப்பை விட்டு இந்தா வெளியேறுகிறார், அந்தா வெளியேறுகிறார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஒருவழியாக தனது முடிவை அறிவித்து விட்டார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரை கடந்த ஒக்ரோபர் இறுதியில் அறிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியென்பது ஒரு கட்சியா, கூட்டணியா, கூட்டணிக்குள் யாரெல்லாம் இருப்பார்கள், முக்கிய பொறுப்புக்களை யார் வகிக்கப் போகிறார்கள், யார் வேட்பாளர்கள் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது.

இந்த கேள்விகளிற்கெல்லாம் பதில் என்ன என்பதை, அந்த அணிக்குள் நுழைந்து தேடினோம். அணியிலுள்ள முக்கியஸ்தர்கள், கூட்டணி பேச்சில் ஈடுபடுபவர்கள் என பலருடன் பேசி, இந்த தகவல்களை தமிழ் பக்கத்திற்காக திரட்டியுள்ளோம். அந்த அணியிலுள்ள முக்கியஸ்தர்களை கவனித்து, முக்கிய பொறுப்புக்களிற்கு யாரெல்லாம் வர வாய்ப்புள்ளது என்ற எமது கணிப்புக்களையும் இணைத்துள்ளோம்.

தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரை அறிவித்த போதே, அது ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து களமிறங்கும் கூட்டணியென விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். அதனால், அது கட்சியா அல்லது கூட்டணியா என்ற குழப்பம் யாருக்கும் தேவையில்லை. விக்னேஸ்வரனால் ஒரு கட்சியை உடனடியாக பதிவுசெய்ய முடியவில்லை. அதனால், தமிழ் மக்கள் கூட்டணிக்குள் ஒரு அணியாக விக்னேஸ்வரன் அணியும் இருக்கும்.

அந்த கூட்டணிக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இருப்பதும்- இல்லாமல் போவதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சமரசப்படுத்தி அதற்குள் கொண்டு வருவதிலேயே இருக்கிறது. அண்மைக்காலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆபத்தான அரசியலொன்றை செய்து வருகிறது. எல்லா இடத்திலிருந்தும் ஆட்களை உடைப்பதை மட்டுமே வேலையாக செய்து வருகிறார்கள். தமிழ் அரசியல் கட்சிகளையும், கூட்டுக்களையும் உடைக்க தென்னிலங்கை சக்திகள் பகீரதப்பிரயத்தனம் செய்து வந்த நிலையில், அவர்களின் விருப்பத்திற்கு தீனி போடுவதை போல, தமிழ் தேசிய அரசியலில் இருப்பவர்களை ஆனவரை கூறு போடுவதையே முன்னணி செய்து வருகிறது. அதனால், தமிழ் மக்கள் கூட்டணியிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

இதை தவிர, பொ. ஐங்கரநேசன் உருவாக்கிய தமிழ் தேசிய பசுமை இயக்கமும் கூட்டுக்குள் இருக்கும். இது தவிர சில பொது அமைப்புக்களும் கூட்டுக்குள் வருவார்கள் போலுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களுடனும் ஒப்பிட்டால் விக்னேஸ்வரனிற்கு யாழ்மாவட்டத்தில்தான் செல்வாக்கு அதிகம். மற்றைய மாவட்டங்களில் அவ்வளவு தொடர்பில்லை அவருக்கு. தமிழ் மக்கள் கூட்டணியென்பது அதிகமும் விக்னேஸ்வரனை நம்பியதே. இதனால் யாழ் மாவட்டம் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் அந்த அணி பலவீனமாகவே இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.

இந்த கூட்டணியின் செயலாளர் நாயகமாக க.வி.விக்னேஸ்வரனே இருக்கப் போகிறார். அதை பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார். சரி, விக்னேஸ்வரன் செயலாளர் என்றால், கட்சியின் தலைவர் ஒருவர் இருக்க வேண்டுமல்லவா. அவர் யார்?

தமிழ் மக்கள் கூட்டணி தலைவர்

கட்சியை கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ள செயலாளராக விக்னேஸ்வரன் இருந்தாலும், நடைமுறைகளின்படி  ஒரு தலைவர் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே, தலைவர் ஒருவரை கண்டுபிடிக்க வேண்டியது, விக்னேஸ்வரன் அணிக்கு அவசியம்.

இப்போது வரை தலைவர் ஒருவரை நியமித்ததாக தெரியவில்லை. ஆனால், இரண்டு பேருக்கு கட்சித் தலைவராகும் வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் முதலாவதாக இருப்பவர் பேராசிரியர் சிவநாதன். தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர். கற்றவரை கற்றவர் காமுறுவர் என்பார்கள். அரசியலுக்கு இது பொருத்தமில்லா விட்டாலும், விக்னேஸ்வரனிடம் அந்த இயல்பே அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அதனால், சிவநாதனில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

விக்னேஸ்வரன் கலந்துகொள்ள முடியாத கூட்டங்களில், தன் சார்பில் சிவநாதனிடமே அறிக்கைகளை கொடுத்து விட்டு, அவரே வாசித்துமிருக்கிறார். தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும், தனது அணிக்குள்ளும் பலர் இருந்தாலும், சிவநாதனில் அவர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது. அதனால், அவருக்குத்தான் அதிக வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுகிறது.

கட்சியின் தலைவர் பட்டியலில் இரண்டாவதாக இருப்பவரும் ஒரு பேராசிரியர்தான். அவர்- சி.க.சிற்றம்பலம். தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர். தலைமையுடனான அதிருப்தியால் வெளியேறி விட்டார். சில வருடங்களாகவே விக்னேஸ்வரன் முகாமின் முக்கியஸ்தர். தமிழரசுக்கட்சியின் உறுப்பினரை, தலைவராக்கி அந்த கட்சியுடன் மோதலை தீவிரப்படுத்தாமல் இருக்கலாமென விக்னேஸ்வரன் நினைக்கலாமென்பதாலேயே, இவரை பட்டியலில் இரண்டாவதாக இணைத்தோம். அந்த ஒரு காரணத்தை தவிர்த்தால், அவரும் பட்டியலில் முதலிடத்தை, சிவநாதனுடன் பகிர்ந்து கொள்வார்.

நீண்ட அரசியல் செயற்பாட்டாளர் என்ற ரீதியில் நிறைய ப்ளஸ்களை வைத்திருக்கிறார். அதனால் அவருக்கும் வாய்ப்பிருக்கிறதாகவே தெரிகிறது.

சில சமயங்களில் இந்த இருவரில் ஒருவர் தலைவராகவும், இன்னொருவர் உபதலைவராகவும் நியமிக்கப்பட வாய்ப்புண்டு.

வடக்கு கிழக்கு மாகாணங்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணியாக உருவாகுவதே தமிழ் மக்கள் கூட்டணியின் நோக்கம்.  ஆனால் இப்போதைக்கு வடக்கிலேயே அந்த அணி வலுப்படுத்தப்படும் போல தெரிகிறது. கிழக்கு விவகாரங்களை, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வசந்தராஜா கவனிக்கவும் வாய்ப்புண்டு. இவைதான் மேல்மட்டத்திலுள்ள முக்கியமான பொறுப்புக்கள்.

அடுத்ததாக வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்பாளர்களையும் அந்த அணி நியமிக்க வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. மாவட்டரீதியாக அமைப்பாளராகும் வாய்ப்புள்ளவர்கள் யார் என்ற பட்டியல் இது.

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தில் மாவட்ட அமைப்பாளராக நியமிக்க விக்னேஸ்வரனிற்கு பல தெரிவுகள் நிச்சயம் இருக்கும். அவற்றில் முதன்மையானவர்கள் இருவர். ஒருவர் பொ.ஐங்கரநேசன். முதலமைச்சரிற்கு மிக நெருக்கமானவர். மாவட்ட அமைப்பாளர் அல்லாமல், அதற்கும் மேற்பட்ட பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட வாய்ப்புண்டு. அப்படியில்லாவிட்டால், மாவட்ட அமைப்பாளராகலாம்.

அருந்தவபாலன்

இந்த பட்டியலில் இருக்கும் அடுத்தவர்- க.அருந்தவபாலன். யாழ் மாவட்ட அமைப்பாளராகுவதற்கு இவருக்கும் பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கி, மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர். அந்த அணியில் கணிசமான வாக்கு வங்கியையுடையவர். அதனால், அமைப்பாளராகுவதற்கு பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கினால் இவர்கள் இருவரும் நிச்சயம் களமிறக்கப்படலாமென நம்பலாம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு

இந்த இரண்டு மாவட்டங்களிலும் அமைப்பாளர்களை கண்டுபிடிப்பது தமிழ் மக்கள் கூட்டணிக்கு பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இங்குள்ள சில செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கிறார்கள்தான். ஆனால், அமைப்பாளராக்குவதற்கு அவர்கள் யாரும் அவ்வளவு பொருத்தமானவர்கள் கிடையாது. இந்த இரண்டு மாவட்டங்களையும் கவனிக்கத்தக்க பொருத்தமானவர்களை கண்டுபிடிப்பதுதான் தமிழ் மக்கள் கூட்டணிக்கு தலையிடியாக இருக்கப் போகிறது.

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறிதரன் பலமாக இருக்கிறார். அண்மைக்காலமாக சந்திரகுமாரின் வளர்ச்சியும் அங்கு அபரிமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் சந்திரகுமாரின் வாக்கு வங்கி அதிகரிக்கிறது. இப்படி பலமான இரண்டு வேட்பாளர்கள் இருக்கும்போது, சவாலாக செயற்படக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பது பெரிய சிக்கலாக இருக்கப் போகிறது.

வவுனியா

தமிழ் மக்கள் பேரவையில் தீவிரமான செயற்பாட்டாளராக இருப்பவர் சிறி. கிளிநொச்சியில் அரசியல் விமர்சனங்களில் ஈடுபட்டு, இப்பொழுது இந்தியாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் ஒருவரின் மைத்துனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் பின்னணியுடையவர். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர். கூட்டங்களிற்கு வவுனியாவிலிருந்து மக்களை திரட்டி வருவதில் முக்கிய பங்காற்றுபவர். அவர்தான் வவுனியா அமைப்பாளராக வாய்ப்புள்ளது.

வவுனியாவில் புளொட், ரெலோ போன்ற கட்சிகளின் செல்வாக்கு அதிகம். இரண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவை.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ரெலோவின் செல்வாக்கு அதிகம். இப்போது தேசிய கட்சிகளும் வாக்குகளை அள்ள ஆரம்பித்து விட்டன. இவற்றையெல்லாம் ஈடுகட்டி  அரசியல்  செய்வது மிகச்சிரமம். இந்த சவாலை சந்திக்க விக்னேஸ்வரன் அணியிடம் பலமான ஒருவர் தேவை.

ஞா.குணசீலன்

முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் இப்போது தமிழ் மக்கள் கூட்டணியில் இருப்பதாக தெரிகிறது. அந்த அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைய நிலைமையில், மன்னார் அமைப்பாளராக குணசீலனை தவிர வேறு பொருத்தமானவர்கள் தமிழ் மக்கள் கூட்டணிக்குள் இல்லை. அதனால், அவர்தான் அமைப்பாளராக நியமிக்கப்படுவார் என நம்பலாம்.

இவைதான் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் பட்டியலாக இருக்க வாய்ப்புண்டு. இவற்றில் சிலவற்றில் சின்னச்சின்ன மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், பெரும்பாலும் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கிறோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here