யோசிக்காதீர்கள்… 7ம் திகதி வரை நான்தான் பிரதமர்: கூட்டாளிகளிற்கு நம்பிக்கையளித்த மஹிந்த!

“எதிர்வரும் 7ம் திகதி வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது, வெளியாகும் செய்திகளால் யாரும் குழப்பமடைய தேவையில்லை. நீங்கள் உங்கள் அமைச்சு வேலைகளில் கவனமெடுங்கள்“

இப்படி தனது அணியிலுள்ள கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் மத்தியில் தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ச.

நேற்று மஹிந்த அணி கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் அவசர ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினார்கள். ஜனாதிபதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய முன்னணியும் பேச்சு நடத்திய அதேவேளையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தனது அணியுடன் கலந்துரையாடினார்.

ஆட்சிமாற்றத்தை நோக்கி மைத்திரி நகர்ந்து வருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே நேற்றைய இரண்டு சந்திப்புக்களும் நடப்பதாக கூறப்பட்ட நிலையில், மஹிந்தவும் தனது தரப்பை சந்திக்க அழைத்திருந்தது பரபரப்பை அதிகரித்திருந்தது.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் சில விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய மஹிந்த ராஜபக்ச, வரும் 7ம் திகதி- நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை- நானே பிரதமராக தொடர்வேன். அதற்கு முன்பாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலகப் போவதில்லை. இந்த காலப்பகுதியில் பதவியிலிருந்து என்னை நீக்கமாட்டேன் என ஜனாதிபதியும் கூறியுள்ளார். ஆகவே யாரும் குழப்பமடைய தேவையில்லை. உங்கள் அமைச்சு வேலைகளை கவனியுங்கள்.

7ம் திகதி நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வந்தால், நாம் பெரும்பான்மையை உறுதிசெய்ய வேண்டும். செய்யலாமென்ற நம்பிக்கையுள்ளது. அதற்கான முயற்சிகள் நடக்கிறது. சாதகமாக வந்தால் தேர்தல்.

என்னை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைத்தவர் ஜனாதிபதிதான். இப்போது அவருக்கு நெருக்கடிகள் உள்ளதென்கிறார்கள். அதை அவர்தான் சமாளிக்க வேண்டும். அங்கிருக்கும் சிலர் கூட நான் பதவிவிலகுவது, ஜனாதிபதியின் நெருக்கடியை குறைக்குமென நினைக்கலாம். ஆனால் நான் பதவி விலகப் போவதில்லை. ஜனாதிபதி விரும்பினால் என்னை நீக்கட்டும். ஆனால் 7ம் திகதிக்கு முன்னர் நீக்கமாட்டார் என உத்தரவாதம் தந்துள்ளார்“ என தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here