ரணிலுக்கு ஆதரவா?… கூட்டமைப்பிற்குள் போர்க்கொடி!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு எடுத்த முடிவால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

“நாடாளுமன்ற குழு இப்படியொரு கொள்கை முடிவை எடுக்கவே முடியாது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில்தான் இப்படியான முடிவை எடுக்கலாம். இது தமிழினத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல்“ என ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் வெளிப்படையாகவே சீறியிருக்கிறார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். அதுவே முறையானதும் கூட. ஆனால் நாடாளுமன்ற விவகாரத்தில் கை உயர்த்துவதென்னவோ, அங்குள்ள எம்.பிக்கள் என்பதால் அவர்களுடனேயே டீலிங் எல்லாம் நடக்கிறது. அதனால் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை தவிர்த்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுடனேயே கதைத்து பேசி, டீலிங் செய்தார்கள். (அதென்ன டீலிங், டீலிங் என்று சொல்கிறோம் என யோசிக்கிறீர்களா… ஐக்கிய தேசிய முன்னணி அரசமைந்த பின்னர் அதை சொல்கிறோம்!)

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கடைசியாக கூடியபோது, மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லையென்றுதான் முடிவெடுத்திருந்தது. அதற்கு மேல் நடந்ததெல்லாம், நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.

அதென்ன நாடாளுமன்ற குழு, ஒருங்கிணைப்புக்குழு… இரண்டு இடத்திலும் இருப்பது ஒரு ஆட்கள்தானே… பிறகென்ன குழப்பம் என சில வாசகர்களிற்கு குழப்பம் வரலாம்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டமென்பது கூட்டமைப்பின் மூன்று பங்காளிகளின் தலைவர்களும் கூடி பேசுமிடம். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. அவர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வருவார். தலைவர் என சம்பிரதாயமாக ஆவணங்களில் மாவை கையெழுத்திட்டாலும், “உண்மையான தலைவர்“ சுமந்திரன்தான். அவரை மீறி கட்சியில் அணுவும் அசையாது. அவர் கூட்டமைப்பின் பேச்சாளர். அவரும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வருவார். நாடாளுமன்ற குழு கூட்டமென்றாலும் சரி, ஒருங்கிணைப்புக்குழு கூட்டமென்றாலும் சரி, எங்கு என்ன முடிவெடுத்தாலும் தமிழரசுக்கட்சிக்குள் யாரும் மூச்சும் விடமாட்டார்கள். இரண்டு இடத்திலும் இருப்பவர்கள் ஒரே ஆட்கள்தான்.

புளொட்டும் அப்படித்தான். கட்சித் தலைவர் சித்தார்த்தன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் இருப்பார். எம்.பிக்கள் கூட்டத்திலும் இருப்பார். புளொட்டிற்குள் அவர் ஒருவர்தான் இப்போது எம்.பி. (வியாழேந்திரன் தாவிவிட்டார்) அதனால் அங்கும் யாரும் கேள்விகேட்க ஆளில்லை.

ஆனால் ரெலோ அப்படியல்ல. ஒருங்கிணைப்புக்குழு, நாடாளுமன்ற குழு இரண்டிலும் செல்வம் அடைக்கலநாதன் இருந்தாலும், அங்கு தலைமைக்குழு, செயற்குழு, அரசியல்குழு என ஜனநாயக கட்டமைப்பிற்குரிய விதத்தில் பல குழுக்கள் உள்ளன. கட்சியின் முடிவை கேள்விக்குட்படுத்தும், நெருக்கடி கொடுக்கும் விதமாக அவர்கள் செயற்படுவார்கள். அவர்கள் யாரும் எம்.பிக்கள் கிடையாது.

இதுதான் சிக்கல்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மட்டுமே அவர்கள் இருப்பார்கள். அது கொள்கை முடிவெடுக்கும் இடம். அப்போது திடீரென எம்.பிக்கள் முடிவெடுக்க, பத்திரிகைகளில் பார்த்து விசயத்தையறியும் நிலைமையேற்பட்டது அவர்களை கோபமடைய வைத்துள்ளது.

ரெலோ செயலாளர் என்.சிறிகாந்தா எதையும் பகிரங்கமாக பேசக்கூடியவர். அவர்தான் இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். “கூட்டமைப்பின் நாடாளுமன்றகுழு எடுத்த முடிவு, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை கட்டுப்படுத்தாது. இது தூரநோக்கமில்லாத முடிவு. சரியான கலந்துரையாடல்கள் இல்லாமல் இப்படியொரு முடிவை எடுக்க முடியாது“ என்றுள்ளார்.

இந்த விடயங்களை ஆராய ரெலோவின் தலைமைக்குழுவும், மத்தியகுழுவும் அவசரமாக நாளை வவுனியாவில் கூடுகிறது. கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு பக்கமாகவும்- தமிழரசுக்கட்சி பக்கமாக, கட்சியின் ஏனைய தலைவர்கள் ஒரு பக்கமாக சிந்திப்பதுமே ரெலோவிற்குள் உ்ள பெரிய பிரச்சனை. நாளை வவுனியாவில் பெரிய வில்லங்கம் செல்வத்தாருக்கு இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here