தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு – கடைகள் மூடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே போராட் டக் களமாக மாறியுள்ளது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 1-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ம் தேதி (இன்று) தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. இதுதவிர பாமக, தமாகா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவும் ஆதரவு அளித்துள்ளார்.

மேலும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச), சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களும் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் முழு அடைப்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு பேருந்துகள் குறைவான அளவிலேயே இயக்கப்படுகின்றன. தனியார் வாகன போக்குவரத்தும் குறைந்த அளவிலேய உள்ளன. இதுபோல பெரும்பாலன கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருப்பதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடநட்து வருகிறது. பல்வேறு இயக்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here