என்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள்? 07

வல்லிபுரம் கமலேஸ்வரன்

அரசியல் வட்டாரத்தில் உலாவும் ஒரு பிரபல கதையுண்டு.

1990களின் தொடக்கம்.

கொழும்பில் ஏஜென்ஸி தொழிலில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்கள் நம்மவர்கள். ஏஜென்ஸி தொழில் என்றால், காசு கொடுக்கல் வாங்கல்களில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள்.

வெளிநாட்டுக்கு போவதென ஏஜென்ஸி காரனிடம் காசை கொடுத்தால், பிறகு என்ன நடக்குமென்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. காசை திருப்பி கேட்டால்,பொலிஸ், சிஐடி காரர்களின் துணையுடன் ஏஜென்ஸிகாரர்கள் ஆடிய கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. காசை கொடுத்து ஏமாந்தவர்கள் அப்போது கொழும்பில் இருந்த தமிழ் இயக்கங்களிடம்தான் முறையிடுவார்கள். இயக்காரர் தமது ஸ்டையில் பணத்தை வாங்கி கொடுப்பார்கள். அவர்களிற்கு ஒரு கொமிசன் போகும்.

ஒருமுறை இப்படித்தான், ஒரு ஏஜென்ஸிகாரர் பற்றிய தகவல் ரெலோ இயக்கத்திற்கு போனது. ரெலோ இயக்கத்தினர் அந்த ஏஜென்ஸிகாரரின் அலுவலகத்திற்கு போனார்கள். அலுவலகம் திறந்திருந்தது. ஆட்கள் இல்லை. ரெலோ வருவதை கண்டதும் தப்பித்து விட்டார்கள்.

ஏஜென்ஸிகாரன் இல்லையென ரெலோ காரர் திரும்பி வர, ஒருவர் மட்டும் வாசலில் இருந்த செருப்பை கவனித்தார். திரும்பி உள்ளே சென்று தேட- அலுவலக மேசைக்கு கீழே ஏஜென்ஸிகாரர் ஒளிந்திருந்தார். அவரை பிடித்தனர்.

அந்த ஏஸென்ஸிகாரன்தான் இன்றைய வடமாகாண பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஸ்வரன். அவரை மேசைக்கு கீழிருந்து இழுத்து சென்றது இன்னொரு வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (ரெலோ). இதுதான் அந்த செவிவழி கதை.

வல்லிபுரம் கமலேஸ்வரனே இந்தவார தாராசில் அளவிடப்படும் மாகாணசபை உறுப்பினர்.

வடமாகாண பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஸ்வரன். நீண்டகால தமிழரசுக்கட்சி ஆதரவாளர். 1980களில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி எம்.பியாக செல்லத்தம்பு இருந்த சமயத்தில் அவரது தீவிர ஆதரவாளராக அரசியலை தொடங்கியவர். இளம் வயதில் தமிழர் விடுதலைகூட்டணியின் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். இடையில் பல வருடங்கள் அரசியல் “டச்“ விட்டுப்போய், ஏஜென்ஸி தொழில் நடத்தி, மீண்டும் அரசியலுக்கு வந்து- இப்பொழுது வடமாகாண பிரதிஅவைத்தலைவர் ஆகிவிட்டார்.

கமலேஸ்வரனின் பூர்வீகம் யாழ்ப்பாணம் வடமராட்சியின் துன்னாலை பிரதேசம். 1970களில் படித்த வாலிபர் திட்டத்தின் மூலம் மல்லாவிக்கு சென்றார். அங்கு கூட்டுறவுத்துறையிலும் பணியாற்றியிருக்கிறார்.

யுத்தம் தீவிரம் பெற்ற சமயத்தில் வன்னியிலிருந்து குடும்பமாக கொழும்பிற்கு குடிபெயர்ந்துவிட்டார். அங்கிருந்து வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவராக செயற்பட்டார். யுத்தம் முடிந்ததும் மீண்டும் மல்லாவிக்கு வந்து குடியிருக்கிறார். இதுதான் மிகச்சுருக்கமாக கமலேஸ்வரனின் முன்கதை சுருக்கம்.

இன்று வடமாகாண பிரதிஅவைத்தலைவராகியுள்ள கமலேஸ்வரனிற்கு அதிர்ஸ்டமும், சூட்சுமமும் நன்றாக கைகொடுத்தது. அத்துடன் கட்சிக்கு விசுவாசமாகவும் இருக்கிறார். தேர்தல் சமயங்களில் கட்சிக்கு பெருமளவு நிதி கொடுத்திருக்கிறார். இதுதான் அவரை மாகாணசபை உறுப்பினராக்கியது என்ற அபிப்பிராயமும் உள்ளது.

2013 மாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களமிறங்கி வெற்றிபெறவில்லை. கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய மேரிகமலா குணசீலன், சிவனேசன், இவர்- மூவருமே வெற்றிபெறவில்லை. ஆனால் மாகாணசபை உறுப்பினர்கள் ஆனார்கள். இவர் மாகாணசபைக்குள் நுழைந்தது சூட்சுமமானது!

2015 பாராளுமன்ற தேர்தலில் வன்னியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் களமிறங்கியவர் மாகாணசபை உறுப்பினர் சிவமோகன். கனகசுந்தரசுவாமியின் மரணத்துடன் புவனேஸ்வரன் மாகாணசபைக்குள் நுழைந்திருந்தார். இன்னொரு வெற்றிடம் ஏற்பட்டால் கமலேஸ்வரன்தான் மாகாணசபைக்குள் நுழைவார். மாகாணசபை உறுப்பினர் சிவமோகன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இது தமிழரசுக்கட்சிக்குள் இலேசான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

சிவமோகன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைய கமலேஸ்வரன் மாகாணசபைக்குள் நுழைந்தார். அன்ரனி ஜெகநாதன் மரணமடைய பிரதிஅவைத்தலைவராகினார். கட்சிக்கும், தலைமைக்கும் இவர் காட்டும் விசுவாசத்திற்கும் பணிவிற்கும்- தேர்தலில் வெற்றியடைந்த வேறுபல உறுப்பினர்கள் இருக்க, இவரை பிரதிஅவைத்தலைராக்கியதை சொல்கிறார்கள்.

வடமாகாண பிரதி அவைத்தலைவர்கள் எல்லோருக்கும் உள்ள தலையெழுத்துதான் இவருக்கும். பதவியை வைத்து பந்தா காட்டலாமே தவிர, அதை அனுபவிக்க முடியாது. இதுவரை இரண்டொரு தடவைகள்தான் அவையை வழிநடத்தியிருக்கிறார். இவரது இயல்பு, அனுபவமின்மையெல்லாம் சேர அவையை வழிநடத்த கிடைத்த சந்தர்ப்பத்தையும் சொதப்பிவிட்டார். பிரதிஅவைத்தலைவர் பதவி இவருக்கு சற்று அதிகம்தான். ஆனாலும், இவரது விசுவாசத்திற்கு ஏதாவது பரிசளிக்க கட்சி விரும்பியிருக்கலாம்.

மாகாணசபைக்கு தேர்வான சமயத்தில் மிக உற்சாகமாக ஆரம்பித்தார். சில பிரேரணைகள், மக்கள் பிரச்சனைகளை கவனப்படுத்தல் என ஆரம்பம் மிக சூடாக இருந்தது. ஆனால் போகப்போக அப்படியே அடங்கிவிட்டார். இப்பொழுது அதிகமாக அவரது பிரசன்னம் சபைக்குள் தெரிவதில்லை. மிக அமைதியாகவே இருக்கிறார்.

பணிவு பன்னீர்ச்செல்வமாக கட்சிக்குள் கவனத்தை ஈர்த்தாரே தவிர, அவரது ஆளுமையால், அரசியல்ரீதியான செயற்பாடுகளால் ஸ்கோர் செய்யவில்லை. இந்த பகுதிகளில் மிகப்பலவீனமாகவே இருக்கிறார். மாகாணசபைக்குள் இளம் உறுப்பினர்கள் கூட கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்க, இவரால் அப்படியொரு முக்கியத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இவரது வாழ்க்கைமுறை, இயல்பு நெருங்கிச்செல்ல தயக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக உள்ளூரில் பரவலான அபிப்பிராயம் உள்ளது. இதுதான் இவரது ஆகப்பெரிய பலவீனம்.

உள்ளூரில் பலர் நேரில் சென்று சந்திக்கிறார்கள், பிரச்சனைகளை முறையிடுகிறார்கள் என்றபோதும், தோற்றமும் நடை உடை பாவனையும் அவரை சற்று அன்னியமாக உணர்வதாக பிரதேசத்தில் பரவலான அபிப்பிராயம் உள்ளது. பரந்த வன்னிப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பிருந்தபோதும், அதை ஒரு சிலர்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர் அந்தப்பட்டியலில் இல்லை.

வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இவரும் கையெழுத்திட்டிருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட சில உறுப்பினர்களிடம் பின்னர் தளம்பல் ஏற்பட்டபோதும், கட்சி விசுவாசியாக அதை இறுதிவரை ஆதரித்தார். இதுதான் அவர் கட்சிக்குள் முக்கியத்துவம் பெற காரணம்.

வழக்கமான தமிழ் அரசியல்வாதிகளின் வெற்றிக்கு முக்கிய காரணம்- கூட்டத்தை கட்டிப்போடும் பேச்சாற்றல். இவர் சறுக்கும் முக்கிய இடம் இதுதான். அர்ப்பணிப்பான அரசியல் செயற்பாட்டாளரும் கிடையாது. யுத்தகாலத்தில் கொழும்பில் வசித்துவிட்டு வந்தவர் என்பதுதான் கடந்த தேர்தலில் மக்களுடன் ஒட்ட தடையாக இருந்த பிரதான காரணம். தேர்தல் நடந்து நான்கு ஆண்டுகளாகின்ற இந்தசமயத்திலும் அந்த அபிப்பிராயங்கள் அதிகம் மாறவில்லையென்பது பெரிய பலவீனம். உள்ளூரில் மக்கள் செல்வாக்கை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமென்ற சுயபரிசோதனை அவசியம்.

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் நெருக்கமான விசுவாசி. அதனால் அடுத்த தேர்தல்களிலும் வேட்பாளராக களமிறங்க சிக்கல்கள் இருக்காது. ஆனால் அந்த வாய்ப்பை வெற்றிகரமாக பயன்படுத்துவாரா என்பதுதான் சிக்கலான கேள்வி.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here