‘இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் கடவுள்’; பிரபாகரன் ஸ்பெஷல்: 21 தகவல்கள்!

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம் இன்றாகும். தமிழர்களின் முகவரியாகி விட்ட அந்த பேராளுமையின் 64வது பிறந்ததினத்தை உலகெங்குமுள்ள ஈழத்தமிழர்கள் உணர்வுபூர்வமாக கொண்டாடி வருகிறார்கள்.

நவம்பர் 26ம் திகதி பிரபாகரனின் பிறந்ததினம், 27ம் திகதி மாவீரர்தினம் என  இலங்கை அரசியலில் எதிர்பார்ப்புமிக்க நாட்களாக கடந்த காலங்களில் அமைந்திருந்தது.

மாவீரர்தினத்திலன்றுதான் பிரபாகரன் உரை நிகழ்த்துவார். புலிகளின் கொள்கை முடிவுகளையெல்லாம் அன்று ஒருநாள்தான் அறிவிப்பார். அதனால், பிரபாகரன் என்ன சொன்னார் என்பதை அறிவிப்பதில் ஊடகங்கள் எக்கச்சக்க போட்டிபோடும். அறிந்து கொள்வதில் தமிழர்களிற்கு ஆவல். அதைவிட ஆர்வம் எதிர்தரப்பிற்கு. ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மணித்தியாலயத்தையும் ஊடகங்களின் முன் பேசி பொழுதை கழித்துக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், “செயலைப் போன்ற சிறந்த சொல்லில்லை“ என வாழ்ந்து காட்டியவர் பிரபாகரன்.

பிரபாகரனின் பிறந்தநாள் சமயத்தில் இலங்கை பாதுகாப்பு தரப்பு கண்ணுக்குள் எண்ணெய் விட்டபடி கண்காணித்து கொண்டிருந்தாலும், பிரபாகரன் தனது பிறந்ததினத்தை கொண்டாட விரும்புவதில்லையென்பதே உண்மை. ஆரம்பத்தில் அமைப்பில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோதும், அதனை பிரபாகரன் விரும்பாதபடியால் பின்னாளில் சாதாரணமாக தமக்குள் கொண்டாடுவதுடன் நிறுத்திக் கொண்டனர் விடுதலைப்புலிகள்.

இந்த சமயத்தில் பிரபாகரன் பற்றிய சில அபூர்வ தகவல்களை இங்கு பட்டியல்படுத்துகிறோம்.

• பிரபாகரனின் ஒவ்வொரு பிறந்த நாட்களிற்கும் பலரும் வாழ்த்து அனுப்புவது வழக்கம். விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்வாக கட்டமைப்புக்களை ஏற்படுத்திய பின்னர், பிரபாகரனிற்கு கடிதங்கள் அனுப்பும் பொறிமுறையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தனக்கு வரும் வாழ்த்துக்களிற்கு- சாதாரண ஆளாக இருந்தாலும்- நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவார். இறுதிவரை இதை வழக்கமாக வைத்திருந்தார். பின்னாட்களில் வாழ்த்துக்கள் அதிகரிக்க, ஒரேவிதமான பதில் கடிதங்கள் அவரது கையொப்பத்துடன் எல்லோருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

• பிரபாகரன் ஒரு விடயத்தை நினைத்தால், அதை அடையும் வரை வேறு சிந்தனைகளிற்கு இடம்கொடுக்க மாட்டார். அதிகம் தனிமையில் உட்கார்ந்திருந்து அது பற்றிய புதுபுது திட்டங்களைதான் தீட்டிக் கொண்டிருப்பார். அந்த திட்டம் நிறைவேறினால் பெரும் கொண்டாட்டத்தையே நிகழ்த்திவிடுவார். உதாரணமாக, ஒரு இராணுவ இலக்கை அடைந்தால் போராளிகளிற்கு விசேட விருந்தளித்து மகிழ்விப்பார்.

• அதிக பிரச்சனை, நெருக்கடியென்றாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிரமாக சிந்தித்தபடியிருப்பார். அதிகம் தனிமையில் இருந்து சிந்திப்பார். அல்லது காட்டு மரங்களிற்கிடையில் கட்டப்பட்ட வலையில் படுத்திருந்து கண்ணை மூடிக்கொண்டு தீவிரமாக யோசிப்பார். அமைப்பு தொடர்பான தனிப்பட்ட ஆலோசனைகளை அதிகம் பொட்டம்மானுடன் நிகழ்த்துவார். எப்பொழுதாவது மனதிற்கு நெருக்கமான தளபதிகளை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்திருப்பார். அந்த பட்டியலில் முதலிடத்திலிருப்பவர் கடாபி. கருணா பிரிவு நடந்த சமயத்தில், கடாபி தண்டணை இடமாற்றத்தில் பயிற்சி முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இனி பிரபாகரனின் முகாம் பக்கமே கடாபியை கூப்பிட மாட்டார் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அவரை அழைத்து தன்னுடன் அருகில் வைத்திருந்தார்.

• பிரபாகரன் மாணவப்பருவத்தில் ஆயுதப்போராட்டத்தில் இறங்கியபோது அவரது ஆதர்சமாக இருந்தவர் தங்கத்துரை. தங்கத்துரையை தனது தலைவராக அடிக்கடி குறிப்பிட்டார். தங்கத்துரையின் சிறிய புகைப்படமொன்றை எப்பொழுதும் சட்டைப்பைக்குள் வைத்திருந்தார். தங்கத்துரை, குட்டிமணி கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் சிறை உடைப்பிற்கு பிரபாகரன் தீவிரமாக திட்டமிட்டார். தனது உடலில் குண்டை கட்டிக்கொண்டு சிறைக்குள் பாயவும் தயாராக இருப்பதாக அடிக்கடி கூறினாராம். எனினும் குட்டிமணியில் அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. காரணம், குட்டிமணி கள்ளக்கடத்தல் விவகாரங்களிலும் தொடர்புடையவர், போராளிகள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டுமென நினைத்தார்.

• விடுதலைப்புலிகள் அமைப்பை ஆரம்பித்த பின்னர் -1978இன் இறுதிப்பகுதியில்- இன்னும் சிலருடன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து சென்று தங்கத்துரை தலைமையில் (ரெலோ) செயற்பட்டார். அந்த சமயத்தில் தங்கத்துரையுடன் இணைந்து கொண்டவரே சங்கர். பின்னர் பிரபாகரன் புலிகளிற்கு திரும்பி வந்தபோது சங்கரும் கூட வந்தார். அவர்தான் புலிகளின் முதல் மாவீரன் சங்கர். பிரபாகரன் கிட்டத்தட்ட இரண்டு வருடம் தங்கத்துரை தலைமையில் இயங்கினார். அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை வழிநடத்தியது மாத்தையா!

• பிரபாகரன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அலாதி பிரியமுடையவர். விதவிதமாக போஸ் கொடுப்பதில் கில்லாடி. தேடப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஸ்டூடியோக்களில் கமராவின் முன் நின்றவர் பிரபாகரன்!

• சமையலில் பிரபாகரனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. விதவிதமாக சமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். தன் கையால் சமைத்தால்தான் அவருக்கு திருப்தி. ஆரம்ப காலங்களில் போராளிகளை உட்கார வைத்துவிட்டு அவரே சமைக்க ஆரம்பித்துவிடுவார். சைவம், அசைவம் எது என்றாலும் அட்டகாசமாக சமைப்பார். புதிய சாப்பாட்டு வகைகளை உருவாக்குவதிலும் கில்லாடி. புட்டு கொத்து, பாண் கொத்து, இடியப்ப கொத்தெல்லாம் நீங்கள் இப்பொழுதுதான் கண்டிருப்பீர்கள். 1990 இன் முன்னரே அதையெல்லாம் கொத்தியவர்தான் பிரபாகரன்!

• .இதுவும் சாப்பாட்டு விவகாரம்தான். (கடந்த பகுதியிலேயே முடித்திருக்கலாமே என நீங்கள் நினைக்கலாம். இதை தனியாக குறிப்பிடாவிட்டால் வரலாறு மன்னிக்காது அமைச்சரே!). சாப்பாடு தயார் செய்வதில் மட்டுமல்ல, அதை இரசித்து சாப்பிடும் கலையிலும் அவர் கில்லாடி. சாப்பிடும்போது யாருக்காகவும், எதற்காகவும் யாரும் கூச்சப்பட்டு, சங்கடப்படக்கூடாதென்பது அவரது நிலைப்பாடு. ஒருமுறை கரும்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றிற்கு சென்று, போராளிகளுடன் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டார். தலைவர் அருகில் உட்கார்ந்ததில் போராளிகளுக்கு கையும் ஓடவில்லை, வாயும் ஓடவில்லை. சங்கடப்பட்டபடி சாப்பிட்டனர். இதைப்பார்த்த பிரபாகரன், பொறுப்பாளரை அழைத்தார். ‘இவர்கள் ரசித்து, ருசித்து சாப்பிட தெரியாமல் கூச்சப்படுகிறார்கள். கரும்புலி ரெயினிங்கை நிறுத்தி விட்டு, முதலில் சாப்பிட ரெயினிங் கொடுக்க வேண்டும். என்ன.. கூச்சமின்றி நன்றாக சாப்பிடுகிறீர்களா? அல்லது ரெயினிங்கை நிறுத்தி, சாப்பாட்டு ரெயினிங் தாரதா?’ என கேட்டார். பிறகென்ன, போராளிகள் கூச்சத்தை விட்டு ‘பொளந்து’ கட்டிவிட்டார்கள்!

• 1995 இல் யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின்னர் புலிகளின் தளங்கள் வன்னிக்கு நகர்ந்தன. கொக்குவிலில் இருந்த பிரபாகரனின் முகாம், முல்லைத்தீவின் முத்தையன்கட்டுக்கு மாற்றப்பட்டது. அடர்ந்த காட்டில் நிலக்கீழ் பதுங்குகுழிகளுடன் அமைக்கப்பட்ட முகாம். அப்போது முள்ளியவளையில் பிரபாகரனின் குடும்பமிருந்தது. ஒருநாள் முத்தையன்கட்டு முகாமிற்கு வந்து தங்கியிருந்தபோது, நள்ளிரவில் விஷ ஜந்து ஒன்று சாள்ஸ் அன்ரனி தீண்டிவிட்டது. பெரிய ஆபத்தில்லாத தீண்டல். முகாம் மருத்துவ போராளி சிகிச்சையளித்து, பின்னர் மருத்துவ பிரிவினர் சிகிச்சையளித்தனர். மறுநாள் பிரபாகரனிடம், மகள் துவாரகா கேட்டார், “அப்பா, காட்டுக்கரையில் உள்ள மக்களின் குழந்தைகளிற்கு இப்படி ஏதும் நடந்தால் எப்படி காப்பாற்றுவார்கள்?“ என. அப்போது அவரது மனதில் உருவான திட்டம்தான், பின்னர் ஒவ்வொரு கிராமங்களிலும் திலீபன் மருத்துவமனை என உருவானது.

• 2000 ஆம் ஆண்டின் பின்னர் பிரபாகரனின் உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. நீரிழிவு, குருதியழுத்தம் என்பன அவை. அனேகமாக காலை, இரவில் இடியப்பமே சாப்பிட்டார். அவர் சாப்பிடும் விதமே அலாதியானது. இரண்டு மூன்று கறியிருந்தால், ஒவ்வொரு இடியப்பமாக போட்டு, ஒவ்வொரு கறியுடன் சாப்பிடுவார். இறுதியில்தான் எல்லா கறியையும் ஒன்றாக்கி சாப்பிடுவார். காலை பத்து, இரவு பத்து இடியப்பம்தான் சாப்பாடு.

• 1989 காலப்பகுதியில் மணலாறு புனிதபூமி முகாமில் இருந்தபோது, மூன்று பகுதியாக புலிகளின் முகாம் அமைந்திருந்தது. பெண் போராளிகள், ஆண் போராளிகள், பிரபாகரனின் முகாம் என்பன. ஒரு ஞாயிற்றுக்கிழமை பெண் போராளிகள் தமது முகாமில் விசேட உணவொன்றை தயார் செய்து, மற்றைய இரண்டு முகாம்களிற்கும் வழங்குவார்கள். அடுத்த ஞாயிறு ஆண் போராளிகளின் முகாமில் விசேட உணவு தயாராகும். அடுத்த ஞாயிறு, பிரபாகரனே சமையலை பொறுப்பேற்பார். அந்த ஞாயிறுக்காகத்தான் போராளிகள் காத்திருப்பார்கள். அதிலும், இந்திய பாணியில் பிரபாகரனே ஒரு பாயாசம் தயார் செய்வார். அலாதி ருசியாக இருக்கும்!

• தன்னுடன் இருந்த போராளிகளை பிரபாகரன் மறப்பதில்லை. அமைப்பிலிருந்த போராளிகள் சில சமயங்களில் விலகிச் சென்று சமூக வாழ்வில் சிரமப்படுவதுண்டு. சரியான வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. பிரபாகரன் வாகனத்தில் செல்லும்போது, விலகிய போராளிகள் யாராவது வீதியில் சிரப்பட்டால், உடனே வாகனத்தை நிறுத்தி அவர் பற்றிய விபரங்களை பெற்றுச் செல்வார். பின்னர், அவருக்கு ஏதாவது உதவிகள் அனுப்பி வைப்பார். அல்லது, வீதியில் காண்பவரை மனதில் குறித்து வைத்து, பின்னர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அவருக்கு உதவச் சொல்வார்.

• தன்னுடன் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருப்பவர்களுடன் அலாதி பிரியமாக பழகுவார். பருத்தித்துறையை சேர்ந்த ஒரு போராளி, பிரபாகரனின் மெய்பாதுகாவலராக இருந்தார். இப்போது பிரான்ஸில் இருக்கிறார். பிரபாகரனுடன் மிக நெருக்கமாக பழகினார். அவரது நண்பர் ஒருவர் கடற்கரும்புலியாகி மரணித்து விட, தானும் கடற்புலிக்கு போக வேண்டுமென விடாப்பிடியாக நின்று, கடற்புலிக்கு சென்றார். சில நாள் கழித்து ஒருநாள் முகாமிலிருந்த பிரபாகரன், அந்த போராளியின் பெயரை குறிப்பிட்டு, இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான், ஒரு முறை நேரில் போய் பார்ப்போமா என போராளிகளிடம் கேட்டார். அவர்களும் சம்மதிக்க, முன்னறிவித்தல் இல்லாமல் அந்த போராளி தங்கியிருந்த முகாமிற்கு சென்றார் பிரபாகரன்.

• தனது மெய்ப்பாதுகாவலர்களின் பிறந்த நாட்களை பிரபாகரன் நினைவில் வைத்திருப்பார். அவர்களே மறந்தாலும், காலையிலேயே கேக் வரவழைத்து அவர்களின் பிறந்த நாட்களை கொண்டாடி விடுவார்.

• எண் சாஸ்திரத்தில் பிரபாகரன் அலாதியான நம்பிக்கையானவர். பண்டிட் சேதுராமனின் எண் சாஸ்திர புத்தகமொன்றை எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து தன்னுடன் வைத்திருந்தார். தனது மெய்ப்பாதுகாவல் அணிக்கு புதிதாக வருபவர்களிடம் பிறந்த ஆண்டு, திகதியை மட்டும் உடனடியாக கேட்க மாட்டார். சில நாட்கள் அவர்களுடன் பழகிய பின்னர், அவரது பிறப்பிலக்கத்தை பிரபாகரனே சொல்வார். அனேகமாக அது சரியாகத்தான் இருக்கும்!

• 8ம் இலக்கத்தில் பெரிய தாக்குதல்களை பிரபாகரன் திட்டமிடுவதில்லை. 9ம் இலக்கத்தில் தாக்குதல் நடத்துவார். 8ம் இலக்க திகதியில் நகர்வை ஆரம்பித்து, 9ம் இலக்க திகதிகளில் தாக்குதலை ஆரம்பித்துண்டு.

• பிரபாகரன் அடிக்கடி சொல்வது- ‘தமிழீழம் கிடைத்தால் நான் ஒதுங்கிவிடுவேன். பொருத்தமான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, யுத்தத்தில் அவயங்களை இழந்த போராளிகளுடன் வாழ விரும்புகிறேன்’ என்பதே. அவயங்களை இழந்த போராளிகளிற்காக உருவாக்கப்பட்ட நவம் அறிவுக்கூடத்தில், போராளிகள் மத்தியிலும் இதை பகிரங்கமாகவே சொன்னார்.

• 26ம் திகதி பிரபாகரனின் பிறந்தநாளை விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். அப்படியொரு கொண்டாட்டத்தை செய்யக்கூடாதென 1996ஆம் ஆண்டு தளபதிகளிற்கு உத்தரவிட்டார். ஆனாலும், கேக், சிற்றுண்டிகள் பகிர்ந்து பிறந்தநாளை போராளிகள் கொண்டாடினர். 26ம் திகதி இரவு உணவருந்தும் பிரபாகரன், 27ம் திகதி விடிந்தால் ஒரு சொட்டு தண்ணீரும் வாயில் விடமாட்டார். அது மாவீரர் நாள். அதனால் மாவீரர் உரையும் 25 அல்லது 26ம் திகதியே ஒளிப்பதிவு செய்யப்பட்டு விடும். 27ம் திகதி ஏதாவதொரு முகாமில் போராளிகளுடன் விளக்கேற்றுவார். அப்போதுதான் ஓரளவு சகஜமாக பேசுவார். மற்றும்படி இறுக்கமாகவே இருப்பார். 28ம் திகதி காலையில்தான் மீண்டும் தேனீர் அருந்தி, உணவருந்துவார்.

• அமைப்பின் மூத்த தளபதிகள் என்றாலும், தளபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களில் கவனமெடுக்கமாட்டார். அது பற்றி அவர்களுடனும் பேச மாட்டார். பல தளபதிகளின் தனிப்பட்ட வாழ்வில் பிரச்சனை வந்தது. தினேஷ் மாஸ்டர், பால்ராஜ், தமிழ்ச்செல்வன் உதாரணங்கள். அந்த குடும்பங்களை இணைத்து வைக்க மதிவதனி பெருமுயற்சிகள் செய்தார். ஆனால் பிரபாகரன் எதுவும் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டார். மாறாக, நீண்டநாளிற்கு இந்த பிரச்சனை இழுபட்டால், கணவன்- மனைவியான அந்த தம்பதியுடன் பேச்சை நிறுத்தி விடுவார். அது எவ்வளவு பெரிய தளபதியாக இருந்தாலும். குடும்ப பிரச்சனை தொடர்ந்ததால் பால்ராஜ், தமிழ்ச்செல்வனுடன் சில மாதங்களாகவே தொடர்பை துண்டித்திருந்தார். தமிழ்செல்வன் குடும்ப சிக்கலை ஓரளவு சுமுகமாக்கிய பின்னரே மீண்டும் பிரபாகரன் அழைத்து பேசினார்!

• திருமண விசயத்தில் ஒரேயொரு தளபதிக்குத்தான் அதீத அக்கறை காட்டினார். அது- சொர்ணம்!

• உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுவார். தினமும் காலையில் 5.30 மணிக்கு முகாமில் நடைபயிற்சி செல்வார். பின்னர் கயிறடித்தால் (ஸ்கிப்பிங்) செய்வார். 2000களில் கயிறடித்தலை நிறுத்தி விட்டார். 1998இல் ஒருமுறை தனது மெய்ப்பாதுகாவலில் ஈடுபட்ட படையணிக்கு ஒரு சவால் விட்டிருந்தார். தொடர்ந்து 10,000 முறை விடாமல்  கயிறடித்தால் இலத்திரனியல் கயிறு பரிசளிப்பதாக கூறியிருந்தார். இறுதிவரை யாரும் அந்த கயிற்றை பெறவில்லை!

பதவிகளிலும், விளம்பரங்களிலும் ஆர்வமில்லாதவர். அதனால்த்தான், யுத்தம் முடிந்து பிரபாகரன் பற்றிய மர்மம் நீடித்தபோது தமிழக கவிஞர் வாலி எழுதினார்-

‘இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் இறைவன்’!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here