இன்று தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு இன்று 64வது பிறந்தநாள் ஆகும்.

1954ஆம் ஆண்டு, நவம்பர் 26ம் திகதி வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை- பார்வதியம்மாள் தம்பதிகளிற்கு இளைய புத்திரமாக பிறந்தார் பிரபாகரன். சிறுவயதில் மிக அமைதியானவராக விளங்கிய பிரபாகரன், சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறை ஆட்சிக்கெதிராக மிக இளைய வயதிலேயே ஆயுத வழியில் போராட முடிவெடுத்தார்.

1970களின் தொடக்கத்தில் தனது ஊரை சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்களுடன் இணைந்தும், தனித்தும், வேறு நண்பர்களுடன் இணைந்தும் தீவிர செயற்பாட்டாளராக மாறினார்.

சிறு வயது முதலே அவரிடமிருந்த ஓர்மம், கொள்கைபற்று, அர்ப்பணிப்பு, இலட்சிய உறுதியென்பன மற்றவர்களை விட அவரை வித்தியாசமானவராக காண்பித்தது. இதனாலேயே 70களின் தொடக்கத்திலேயே, ஆயுதவழி போராட்டத்தில் இறங்கியவர்களிற்குள் அவரை தனித்துவமானவராக காண்பித்தது.

அவரது இந்த இயல்பே, எல்லோரையும் “தம்பி“ என மரியாதையுடன் அழைக்கும் நிலைமையையும் உருவாக்கியது.

எல்லோருக்கும் தம்பியாக இருந்த பிரபாகரன், மற்ற யாராலும் முடியாத பல வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்தினார்.

1972ல் புதிய தமிழ் புலிகள் என்ற இயக்கத்தை உருவாக்கி, பின்னர் அதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் என 1976இல் பெயர் மாற்றம் செய்து, தமிழர்களின் அடையாளமான இயக்கமாக உருமாற்றினார்.

இலட்சிய உறுதி, கொள்கைப்பற்று, ஒழுக்கம், அபரிமிதமான இராணுவ நுணுக்கங்கள் என்று தமிழர்களின் வரலாற்றில் இல்லாத மாபெரும் படைத்துறை கட்டுமானங்களை உருவாக்கி, போர்க்கள சாதனைகளை நிகழ்த்தி, உலக விடுதலைப்போராட்ட அமைப்புக்களில் தலையாயது என்ற புகழையும் பெற்றது.

வடக்கு கிழக்கின் கணிசமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து, நிதி, வங்கி, நீதி, சுகாதாரம் மற்றும் இதர கட்டமைப்புக்களுடன் ஒரு நிழல் அரசையும் உருவாக்கி, முன்னோடியான ஒரு நிர்வாகத்தையும் நிகழ்த்தினார்கள்.

எனினும், 2001 இரட்டை கோபுர தாக்குதலின் பின்னரான காலம், உலக விடுதலைப் போராட்ட அமைப்புக்களிற்கு பெரும் சவாலானதாக அமைந்தது. உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் கூட்டிணைவுடன், 2006 தொடக்கம் 2009 வரை வன்னியில் நடந்த கொடூர யுத்தத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. அப்பொழுது, எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல் போராடி முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி வீரமரணம் எய்தினார்.

இராணுவரீதியில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும், அது தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியிலும், உணர்வு ரீதியிலும் இன்றும் அபரிமிதமான செல்வாக்குள்ள ஒரு அமைப்பாகும். இலங்கை அரசியலும், பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் விட்டு நகர முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகெங்குமுள்ள தமிழ் உணர்வாளர்கள், பிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here