‘இதனால்தானே தமிழர்கள் ஆடுகிறீர்கள்’: யாழ் இளைஞனின் பிறப்புறுப்பில் கத்தியை வைத்து மிரட்டிய பொலிசார்!

“என்னையும் மச்சானையும பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிசார் சித்திரவதைக்குட்படுத்தினார்கள். எனது மச்சானின் பிறப்புறுப்பில் கத்தியை வைத்து இதனால் தானே தமிழர்கள் ஆடுகிறீர்கள் என அச்சுறுத்தினார்கள்” என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் ஏழாலை இளைஞர் ஒருவர்.

சுன்னாகம் பொலிஸாரால் இளைஞர்கள் இருவர் சித்திரவதைக்குட்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர்களில் ஒருவரே இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

கடந்த 19ம் திகதி இரவு ஏழாலை இளைஞர்கள் இருவரை கைது செய்த பொலிசார், மறுநாள் வரை அவர்களை தடுத்து வைத்து தாக்கியுள்ளனர். அடையாள அட்டை வைத்திருக்காததாலேயே அவர்களை தாக்கியதாக பொலிசார குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தமிழ்பக்கமே வெளிச்சமிட்டிருந்தது.

இதை படியுங்கள்: சுன்னாகம் பொலிசாரால் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டனரா?

சுன்னாகம் பொலிஸார் தம்மை சித்திரவதைக்குட்படுத்தப்படுத்தியதாக தெரிவித்துள்ள இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 21 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தனர். அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததை வைத்தியசாலை தரப்பும் உறுதிசெய்தது.

இச்சம்பவம் தொடர்பில் சித்திரவதைக்குட்பட்டதாக கூறப்பட்ட இளைஞரை தொடர்புகொண்டு பேசினோம்.

“நான் ஏழாலையில் வசிக்கிறேன். 19ம் திகதி மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு எனது மச்சானின் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பினோம். வழியில் சிவில் உடையில் நால்வர் நின்றிருந்தனர். அவர்களின் கையில் தடி, பொல்லுகள் காணப்பட்டது. அப்போது எம்மை வழி மறித்த குறித்த நபர்கள் தம்மை பொலிஸார் என வாய் மூலம் அடையாளப்படுத்திக்கொண்டு, மச்சானிடம் முச்சக்கர வண்டிக்கான ஆவணங்களைக் கோரினர். தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வழங்கிய நிலையில், என்னிடம் தேசிய அடையாள அட்டையை கேட்டனர். நான், அடையாள அட்டையை உடன் எடுத்து வரவில்லை. வீட்டில் உள்ளது என தெரிவித்து  வீட்டில் இருந்து அடையாள அட்டையை பெற்றுக் காட்ட முற்பட்ட வேளை, அது தேவையில்லை. இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள். விசாரிக்க வேண்டும் என்று கூறி எம் இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு நாம் செல்லும் போது இரவு 11 மணியாகிவிட்டது. அழைத்துச் சென்ற உடனே எதுவித விசாரணையும் இன்றி எனது மச்சானை பொலிஸ் நிலைய சமையல் அறைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.

என்னை பிறிதொரு இடத்தில் தலைகீழாக கட்டித்தொங்க விட்டு மரக்கட்டை மற்றும் மண்வெட்டி பிடியினால் அடித்தனர். அந்த நால்வரில் ஒருவர் மட்டும் தமிழில் கதைத்தார். ‘தான் மட்டக்களப்பில் இருந்து சுன்னாகம் வந்துள்ளதாகவும் மட்டக்களப்பை ஒரு கலக்கு கலக்கிவிட்டுதான் வந்தனான், சுன்னாகத்தை ஒரு கலக்கு கலக்காமல் விடமாட்டேன். தான் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி” எனவும் கூறித் தாக்கினார். அவரது பெயர் விபரங்கள் தெரியும். (அவரது பெயர், புகைப்படங்களை இளைஞர்கள் எம்மிடம் ஒப்படைத்தனர்)

“நீ இயக்கத்தில் (தமிழீழ விடுதலைப்புலிகள்) இருந்தனியா? ‘ஊருக்க நடக்கிற களவு முழுக்க நீங்கதான் செய்யிறீங்கடா” என தெரிவித்து சரமாரியாக பொலிஸார் தாக்கினர். சுமார் இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 2.45 மணிவரையில் எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மச்சானின் பிறப்புறுப்பில் கத்தியை வைத்து இதனால் தானே தமிழர்கள் ஆடுகிறீர்கள் என அச்சுறுத்தினார்கள். பின்பு வெளியில் சென்றவர்கள் மீண்டும் வந்து அதிகாலை 3.30 மணிக்கு எம்மை பொலிஸ் நிலைய மறியல் அறையில் அடைத்தனர்.

தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர்- முதுகில் கண்டல் காயங்கள்

இதற்கிடையில் விடயம் அறிந்த எனது அண்ணா நள்ளிரவு 12.30 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வந்தார். எங்களை கைது செய்தீர்களா என கேட்டபோது, “யாரையும் நாம் கைது செய்யவில்லை. நீங்கள் காலையில் வாருங்கள்“ என பொலிஸார் கூறியுள்ளனர்.

மறுநாள் காலை எதுவித விசாரணையும் இல்லாமல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீடும் இல்லாமல் பொலிஸ் பிணையில் நாம் விடுவிக்கப்பட்டோம். வீடு திரும்பிய நாம் உடல் முழுவதும் ஏற்பட்ட கண்டல் காயத்தால், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருநாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளோம். நாம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற நேரத்தில் உறவினரால் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். இதன் பின்னர் வைத்தியசாலைக்கு வந்த இரு பொலிஸார், அந்த 4 பொலிஸாரும் தெரியாமல் தவறிழைத்துவிட்டனர். அவர்களை உங்களிடம் மன்னிப்பு கேட்க வைப்பதாகவும் கூறி சமரசத்துக்கு முற்பட்டனர். நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வைத்தியர்களுடனும் அவர்கள் பேசினார்கள். எமது ஊரிலுள்ள வேறு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் மூலமும் சமரசத்திற்கு முயன்றார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை“ என்றார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் பிராந்திய இணைப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

“மேற்படி முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளமை உண்மை. இது தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகளாக தாக்குதலுக்குள்ளானவரின் வாக்குமூலம் மற்றும் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டுள்ள வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் வாக்குமூலம், சம்பந்தபட்ட பொலிஸ் அதிகாரி ஆகியோரின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து எமக்குள்ள அதிகார எல்லையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here