தந்தையை விடுவிக்க கோரி பிள்ளைகள் போராட்டம்!

தமது தந்தையை விடுவிக்ககோரி, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனை முன்பாக பிள்ளைகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (21) காலை 10.30 மணியளவில் பதாகைகளை ஏந்தியவாறு மூன்று பிள்ளைகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் விஸ்பரூபம் எடுத்துள்ள வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமது தந்தையை விடுவிக்க கோரியோ, மூன்று பிள்ளைகளும், தாயும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறி, பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பாடசாலை மாணவனை தாக்கினார் என்ற குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பஸ்தரின் மனைவி (கைக்குழந்தையுடன்), அப்பாடசாலையில் கல்வி கற்கும் அவருடைய இரண்டு மகள்களுமே இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரே எமது முறைப்பாட்டை ஏற்காதது ஏன், எங்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்திய முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு சட்ட நடவடிக்கை எடு, அதிபரின் பலவந்தமான ஆர்ப்பாட்டத்தில் இருந்து எங்களை மீட்க வந்த எங்கள் தந்தையை கைது செய்தது ஏன் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டியினை அணிந்தவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிள்ளைகள் தெரிவிக்கையில்,

“எமது பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதன்போது எமது தந்தை எம்மை பாடசாலைக்கு உள்ளே செல்லுமாறு கூறுவதற்கு அவ்விடத்திற்கு வந்தார்.

அவ்வேளை அதிபரின் தம்பியும் அவரது நண்பர்களும் எமது தந்தையை தாக்குவதற்கு முயன்றனர். அப்போது அவ்விடத்தில் நின்ற போக்குவரத்து பொலிஸார் தந்தையை அதில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அப்பாடசாலையில் கல்வி கற்கும் அதிபரின் தங்கையின் மகனை வைத்தியசாலையில் அனுமதித்துடன் எங்களுடைய தந்தை, குறித்த மாணவனை தாக்கியதாக கூறி பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் பொலிஸார், தற்போது எங்களது தந்தையை கைது செய்துள்ளனர். ஆகையால் அவரை விடுதலை செய்தால் தான் நாங்கள் சாப்பிடுவோம், பாடசாலைக்கு செல்வோம், பரீட்சை எழுதுவோம்” என்றனர்.

பின்னணி

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கப்பட்ட மீன்ரின்களில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நடந்த ஆய்வில், அந்த அந்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென்று கூறப்பட்டது.

மோசடி நடந்ததாக கூறி ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், அதிபருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக கூறி, பாடசாலை சமூகத்தால் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக ஈடுபடுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு முஸ்லிம் அரசியல் பிரமுகர்களின் பின்னணியிலேயே பாடசாலையில் குழப்பங்கள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here