மைத்திரி, மஹிந்தவிற்கு அதிர்ச்சி வைத்தியம்: அதிருப்தியாளர்களை இணைத்து புதிய அணி ஆரம்பிக்கிறார் சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாக கருதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அரசியல் கட்சியாகவோ, அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டாகவோ அது ஆரம்பிக்கப்பட்டு, தற்போதைய ஆட்சியாளர்களிற்கு நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரி- மஹிந்தவின் இணைவையும், அவர்களின் அண்மையை நடவடிக்கைகளையும் ஒரு தொகுதி சுதந்திரக்கட்சியினர் இரசிக்கவில்லையென தெரிகிறது. எனினும், சுதந்திரக்கட்சிக்குள்ளிருந்து மாற்று குரல் வலுவாக உருவாகாததால் அவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட முடியாதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்தே, சந்திரிக்கா இந்த அதிரடி முடிவில் இறங்கியதாக தெரிய வருகிறது. சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒரு பகுதியினரையும் இணைத்துக் கொண்டே இந்த புதி அரசியல் அணி உருவாகவுள்ளது.

பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ச இணைந்த சமயத்தில், சுமார் 30 வரையான சுதந்திரக்கட்சி எம்.பிக்களும் இணைந்து கொண்டனர். ஏனையவர்கள் சுதந்திரக்கட்சியை விட்டு விலக மறுத்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சந்திரிகாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் சந்திரிகாவின் புதிய அணியில் இணையும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 50 வரையான சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திரிகாவுடன் இணையலாமென கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக இதற்கான தீவிர பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும், மீண்டும் பதவிக்கு வருவதற்காக பொதுஜன பெரமுன என்ற கட்சியின் பின்னணியில் மஹிந்த செயற்பட்டு, சுதந்திரக்கட்சியிலிருந்து ஒரு தொகுதி உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, சுதந்திரக்கட்சிக்கு எதிராக செயற்பட்டிருந்தார்.

தற்போது மைத்திரி- மஹிந்த அணிகள் இணைந்திருந்தாலும், சுதந்திரக்கட்சியிலுள்ள முழு உறுப்பினர்களையும் பெரமுனவிற்குள் இழுத்தெடுப்பதற்காக பசில் ராஜபக்ச வலைவீசி வருகிறார். இந்த நிலையில் சுதந்திரக்கட்சியை காப்பாற்றுவதற்காக, சுதந்திரக்கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளால் அதிருப்தியிலுள்ளவர்களையும் இணைத்து, புதிய அணியொன்றை உருவாக்க சந்திரிகா முயன்று வருகிறார்.

சந்திரிகாவின் இந்த புதிய முயற்சியால் சுதந்திரக்கட்சிக்கு புதிய தலைவலி ஆரம்பிக்கலாமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here