மாவீரர் நாளை தடைசெய்ய பொலிசார் மனு: வெள்ளிக்கிழமை நீதிமன்ற கட்டளை!

பயங்கரவாத அமைப்பாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடத்துவதற்கு தடை கோரிய கோப்பாய் பொலிஸாரின் மனு மீதான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.

இந்த மனு இன்று பிற்பகல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

“கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. அது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை“ என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே? என்று மன்று கேள்வி எழுப்பியது.

எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதனால் மனு மீதான கட்டளையை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வழங்குவதாக மன்று அறிவித்து மனுவை ஒத்திவைத்தது.

முன்னதாக, பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த மனுவைப் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்’ என்று பொலிஸார் மனுவில் கேட்டிருந்தனர்

தண்டனைச் சட்டக்கோவை 120 கூறுவது என்ன?

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பை ஏற்படுத்தல் அல்லது எத்தனித்தல் குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

அத்துடன் இந்த பிரிவின் கீழ் நீதிமன்றின் பிடியாணை உத்தரவின்றி சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்ய முடியும் என்பதுடன், பிணை வழங்கப்படமாட்டாது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here