வி.மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டது!

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, வரும் ஜனவரி 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுவை அடிப்படை உரிமைகள் மற்றும் நிர்வாகச் சட்ட வல்லுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சீவ ஜெயவர்த்தன தாக்கல் செய்திருந்தார். அவரின் சகோதர உறவுமுறையான உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தன இந்த மனு மீதான விசாரணையின் அமர்வில் பங்கேற்றிருந்தார். அதனால் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதான நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தன அறிவித்தார். அதனால் மனுவை வரும் ஜனவரி 8ஆம் திகதிவரை உயர் நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.

எதிர்மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக முடியாத காரணத்தால் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் வேறொரு திகதியைக் கோரியிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

மனு தாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடைந்து கட்டளையிடும்வரை யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை வழங்கவேண்டும் என்பதை ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட்டில் இடைக்காலக் கட்டளை வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தே மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த மனு இன்று (21) புதன்கிழமை உயர் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரசன்ன ஜெயவர்த்தன, எல்.டி.பி டெகிதெனிய, முர்டு பெர்னான்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தன, மன்றில் முன்னிலையானார். மனுதாரர் சார்பில் அவர் மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார். இந்த நிலையில் மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here