பூநகரி குளம்: நீருக்கு நிவாரணம் எப்பொழுது முடியும்?

©தமிழ்பக்கம்

வடக்கின் பாலைவனம் எது என்றால் சந்தேகமின்றி சொல்லலாம்- பூநகரி.

கடந்த சில தலைமுறைகள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க பாலைவனமாகிக் கொண்டிருக்கும் பிரதேசம். இன்று பூநகரி சந்திக்கும் பிரதான சவால் நீர். வடக்கின் மிகப்பெரிய குளமான இரணைமடு உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தாகம் தீர்க்க ஒருதுளிக்காக அலைபவர்கள் ஏராளம். கிளிநொச்சியின் பதினைந்து வரையான பாடசாலைகள், பிரதான வைத்தியசாலை, அரச அலுவலகங்கள் தண்ணீரில்லாமல் சந்திக்கும் நெருக்கடிகள் சொல்லில் அடங்காதவை. அங்கெல்லாம் தண்ணீர் பவுசர் செல்லாவிட்டால் எல்லாம் இழுத்து மூடப்படும்.

தண்ணீர்ப்பிரச்சனையை தீர்க்க தற்காலிக ஏற்பாடுகளை பூநகரி பிரதேசசபை மேற்கொள்ளுகின்றபோதும், வாழ்வின் உயிர்த்துடிப்பிற்கு அவசியமான நீருக்கு நிவாரணம் வழங்கி சமாளிக்க முடியுமா?

பூநகரி நீர்ப்பிரச்சனையை சமாளிக்க முன்மொழியப்பட்டுள்ள திட்டமே பூநகரிகுளம்.
பூநகரியின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்க, உவரடையும் நிலங்களை பாதுகாக்க அங்கு குளம் அமைக்கப்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனையடுத்து பூநகரிகுளம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. கடந்த பல வருடங்களாகவே பூநகரிகுளம் பற்றி அதிகாரிகள் கூட்டங்களில் பேசிக்கொள்கிறார்கள். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் தவறாமல் பேசப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மேற்கில் முக்கிய மூன்று ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. பல்லவராயன்கட்டு, மண்டைக்கல்லாறு, அக்கராயன் குடமுருட்டி என்பன அவை. கிளிநொச்சியின் இரண்டாவது பெரிய குளமான அக்கராயன்குளம் நிரம்பி வழிகின்றபோது பாய்கின்ற வெள்ளம் அக்கராயன் ஆற்றின் வழியாக வெளியேறி குடமுருட்டிக் குளத்தினை நிரப்பி குடமுருட்டி ஆறு வழியாக கடலில் கலக்கின்றது. முல்லைத்தீவு துணுக்காயின் பழையமுறிகண்டிக்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் என்பன நிரம்பி வழிந்து வன்னேரிக்குளத்தினை நிரப்பி முடக்கன் ஆறு மண்டைக்கல்லாறு வழியாக கடலைச் சென்றடைகின்றது.

இதேபோன்று கரியாலைநாகபடுவான் குளம் நிரம்பி வழிந்து பல்லவராயன்கட்டு ஆற்றுப்படுக்கை வழியாக கடலினை நீர் சென்றடைகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கிளிநொச்சியில் தேக்கப்படும் நீரைவிட பெருமளவு நீர் கடலுக்கு செல்கிறது.
இந்த ஆற்றுப்படுக்கைகள் வழியாக கடலை சென்றடையும் நீரை சேமித்து மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கும் விவசாய முயற்சிகளுக்கும் பயன்படுத்தக்கூடியத் திட்டங்கள் இதுவரை வரையப்படவில்லை.

நீண்டகாலத்தின் பின்னர் சில வருடங்களின் முன்னர் பூநகரிகுளம் திட்டம் பற்றி பேசப்பட்டது. அவ்வளவுதான். அதன்பின்னர் எந்த அசுமாத்தமும் கிடையாது.

குளம் அமைப்பது பற்றிய ஆய்வில் அதிகாரிகள்

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் பூநகரியில் பெரியதொரு குளத்தினை உருவாக்க வேண்டுமென்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. பூநகரி சாமிப்புலம், நல்லூர், ஆலங்கேணி, செல்விபுரம், தம்பிராய் கிராமங்களின் தெற்கு எல்லையில் கைவிடப்பட்ட பல குளங்கள் காணப்படுகின்றன. கடற்கோள், உவர்நீர் உட்புகுந்ததால் இக்குளங்கள் கைவிடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.

கைவிடப்பட்ட குளங்களுள் மாளாப்பூக்குளம், கொக்குடையான் குளம் இரண்டும் முக்கியமானவை. இவ்விரு குளங்களையும் இணைத்து உருவாக்கப்படும் நீர்த்தேக்கமே பூநகரிக்குளம் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வரைவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் பதினைந்து கிலோமீற்றர் நீளமும் பன்னிரண்டு மீற்றர் நீர் பிடிக்கக் கூடியதுமான அணைக்கட்டினை உருவாக்க திட்டமிடமிடப்பட்டுள்ளது. அதாவது கிளிநொச்சியில் இன்னொரு இரணைமடு குளம்.

பூநகரி- பரந்தன் வீதியை குறுக்கறுத்துப் பாயும் குடமுருட்டி ஆற்றை மறித்து கடல் நீர் உட்புகாத வண்ணம் உவர்த்தடுப்பணை அமைக்க வேண்டும். இதேபோன்று ஏ-32 மன்னார் பூநகரி வீதியில் மண்டைக்கல்லாறில் உவர்நீர் உட்புகாத வண்ணம் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது நீர்ப்பாசனத் திணைக்களத் திட்டங்களில் உள்ளடங்குகின்றன. 1960களில் தலைமன்னாரைத் தாக்கிய கடும்புயல் பூநகரியினையும் தாக்கியது. இதன் காரணமாக கடற்பெருக்கு ஏற்பட்டு பூநகரி மேற்கிலுள்ள குளங்கள் உவரடைந்தன. இதன் காரணமாகவே பூநகரியில் பல கிராமங்கள் இன்றுவரை உவரடைந்து கொண்டிருக்கின்றன.

பூநகரிக் குளம் என்பது ஒரு பெருந்திட்டமாகும். இத்திட்டத்தினை கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெடுப்பதற்கு மத்திய அரசின் விரைவான உதவிகள் தேவை. இந்ததிட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு பலவருடங்களாகியும், இதுவரை திட்டம் முன்னகரவில்லை. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் திட்டத்திற்கான இடங்களை பார்வையிட பத்து இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, முன்னாள் எம்.பி சந்திரகுமார் ஆகியோர் திட்டப்பகுதிக்கு ஒருமுறை சென்று பார்வையிட்டார்கள். அதன்பின் எந்த முன்னகர்வும் இல்லை.

பூநகரிக்குளம் அமைப்பதன் மூலம் பூநகரியில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்கமுடியும். குடிநீர் நெருக்கயை தீர்க்க தற்போது முட்கொம்பனிலிருந்தே அதிகளவில் குடிநீர் எடுத்து வரப்படுகின்றது. தண்ணீர் பவுசரை நம்பியே மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.

பூநகரி தற்போது சந்திக்கும் பிரதான பிரச்சனை குடிநீரின்மை, நிலம் உவரடைதல். இரண்டிற்கும் தீர்வு- பூநகரி குளம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here