‘கிட்டு எங்களை பார்த்து வியந்தார்’: சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுதும் அனுபவங்கள்!

நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது மேலதிக வாழ்வு என்றுதான் நினைத்துக் கொள்வேன். ஏராளம் மரணப் பொறிகள், கொலைக்களங்களிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். இவற்றிலிருந்து தப்பித்ததை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும். ஏதோ ஒரு அதிர்ஸ்டம் என்னை அந்த ஆபத்துக்களிலிருந்து தப்புவித்தது. அதனால்தான் இப்போது வாழும் ஒவ்வொரு நாளையும் மேலதிக நாட்களாக நினைக்கிறேன். மேலதிக ஒவ்வொரு நாளையும், இந்த சமூகத்திற்கு என்னால் செய்யக்கூடியவற்றை செய்துவிட வேண்டுமென்ற உள்ளுணர்வுதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழ் மக்களின் எல்லாவிதமான போராட்டங்களிலும் முன்னிற்கிறேன்.

என் வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்ட காலம் போராட்டங்களுடன் கழிந்தது. இனத்தின் விடிவை உளமார நேசிப்பதால்தான் இது சாத்தியமாகியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக களத்தில் இருக்கிறேன். காலை எழுந்ததிலிருந்து நள்ளிரவிற்கு நெருக்கமாக படுக்கைக்கு செல்வது வரை மக்களுடனும், மக்களின் பிரச்சனைகளுடனும் களத்தில் சுழன்று திரிவதில் அயர்ச்சி வருவதில்லையா என சில நண்பர்கள் கேட்பதுண்டு. சிரித்துவிட்டு கடந்துவிடுவேன் அந்த கேள்விகளை. சுரேஷ் பிரேமச்சந்திரன் வாழும்வரை அல்லது தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு நிலையான தீர்வு எட்டப்படும்வரை ஓயப்போவதில்லை என்பதே அதற்கான பதில்.


மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் பேசவுள்ளனர். நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை.


நான் ஆயுதப்போராட்டத்திற்கு வந்தது தற்செயலானது அல்ல. எனது குடும்பம் அரசியல்ரீதியான சிந்தனையுடையதாக இருந்தது. யாழ்ப்பாணம் கட்டப்பிராய் எனது வீடிருந்தது. தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பட்டாளர் எனது தாய். தமிழரசுக்கட்சி நடத்திய அத்தனை அகிம்சைவழிப் போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டிருந்தார். வீட்டில் எப்பொழுதும் அரசியல் பேசப்பட்டு கொண்டிருக்கும். இதனால் இயல்பாகவே தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

1972 இல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவன். அரசியலமைப்பிற்கு எதிரான எதிர்ப்புணர்பு தமிழர் பகுதிகளில் பரவலாக இருந்தது. அரைக்காற்சட்டை வயதில் நானும் நண்பர்களும் நடுவீதியில் ரயர் கொளுத்தி, அரசியலமைப்பை கிழித்தெறிந்தோம். பொலிஸ் வந்து விட்டது. நடுவீதியில் ரயர் எரிந்தால், பொலிசால் எம்மை பிடிக்க முடியாதென நெருப்பின் இந்தப்பக்கமாக எல்லோரும் “தில்“ ஆக நின்றோம். ஆனால் எமக்கு பின் பக்கமாக வந்த பொலிசார் எல்லோரையும் இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

இரண்டு மணித்தியாலம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, எச்சரித்து அனுப்பினார்கள். ஆனால், அத்துடன் நாங்கள் நிற்கவில்லை. இனவுணர்வு வளர்ந்து கொண்டிருந்தது. மாணவர்களாக ஊரில் தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டோம். 1974 இல் கா.பொ.த சாதாரணதரம் முடிந்ததும், இலண்டனில் உயர்கல்விக்காக பெற்றோர் அனுப்பிவைத்தார்கள். இடம்மாறினாலும், உணர்வு மாறாதல்லவா!

அப்போது இலண்டனில் ஈரோஸ் இயக்க செயற்பாட்டாளர்கள் அதிகமிருந்தார்கள். கருத்தியல் உரையாடல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இலண்டன் சென்ற சிறிது காலத்திலேயே ஈரோஸ் அமைப்பில் இணைந்து கொண்டேன். ஈரோஸ் அமைப்பிற்கு பலநாடுகளிலும் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுடன் தொடர்பிருந்தது. யாசீர் அரபாத்தின் தலைமையிலான அல்பற்றா அமைப்புடனும் தொடர்பிருந்தது. எமது உறுப்பினர்களிற்கு லெபனானில் பயிற்சி வழங்க அல்பற்றா சம்மதித்தது. இதற்காக 13 பேர் கொண்ட குழுவொன்றை ஈரோஸ் அனுப்பியது. அதில் நானும் ஒருவன். 1977 இல் லெபனான் சென்று பல்வேறு பயிற்சிகள் பெற்றோம். ஆயுதப்பயிற்சி, விமான, டாங்கி தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் பயிற்சி, கெரில்லா பயிற்சிகள் பெற்றோம்.

ஈரோஸ் அமைப்பிலிருந்த செயற்பாட்டாளர்கள் இலங்கை வந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு உருவாக்கினோம். இதில் நானும் முக்கிய பங்கு வகித்தேன். எமது இயக்கம் இடதுசாரி சிந்தனையுடனும், தமிழர்களின் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தனிஈழம் எட்டப்பட வேண்டும், சிங்கள தொழிலாளர் வர்க்கமும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயற்பட்டது.

அப்போது “மாற்று இயக்கம்“ என அழைக்கப்பட்ட அமைப்பிற்கு தயான் ஜயதிலக தலைவராக இருந்தார். அவர்களிற்கு நாம் ஆயுதப்பயிற்சியும் வழங்கினோம். வடக்கு கிழக்கு இணைந்த தனிஈழத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், சிங்கள மக்கள் மத்தியில் அதற்கான வேலைத்திட்டங்களையும் செய்தனர். வேடிக்கை என்னவென்றால், அந்த தயான் ஜயதிலக இன்று தமிழர்களிற்கு எதிரான பெரிய இனவாதியாக மாறியுள்ளார்.

அந்தக்காலத்தில் எம்மிடம் மட்டுமே மோட்டார் செல் இருந்தது. அதை நாங்களே தயாரித்துக் கொண்டோம். இதை வைத்து முல்லைத்தீவு முகாமிற்குள் இராணுவத்தை முடக்கினோம். யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த இராணுவத்தை வெளியேற விடாமல், ஏனைய இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டோம். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் மோட்டார்செல் என்றால் இராணுவம் அலறிய காலம் அது.

தாயாருடன் சுரேஸ் பிரேமச்சந்திரன்

அப்போது எல்லா இயக்கங்களும் ஒன்றாக இருந்து உரையாடுவது வழக்கம். ஒரு சமயம் உரையாடிக் கொண்டிருந்தபோது, விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த கிட்டு, எமது இயக்கத்தின் மோட்டார் பலம், அதை கையாளும் எமது திறன் பற்றி பெருமையாக பேசினார். அது ஒரு இனியகாலம். பின்னர் போராளி இயக்கங்களிற்குள் துரதிஸ்டவசமான மோதல் ஏற்பட்டது. பெருமையாக பேசிய புலிகளே பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை அழித்தனர். தோழர் பத்மநாபா மற்றும் பெருமளவான தோழர்கள் கொல்லப்பட்டது மறக்க முடியாத நிகழ்வு. இந்த நெருக்கடியை கடந்து, மீண்டெழுந்தோம். நெருக்கடியான சமயத்தில் கட்சியை பலப்படுத்தினேன். அப்போது எமது கட்சியிலிருந்த சிலர் உள்முரண்பாடுகளை ஏற்படுத்தினார்கள். கட்சி தலைமையில் நான் இருப்பது சட்டரீதியானதல்ல என வரதராஜபெருமாள் என் மீது வழக்கு தொடர்ந்தார். எனினும், சட்டரீதியான தலைவர் நான்தான் என்று நீதிமன்ற தீர்ப்பளித்தது.

ஆயுதப்போராட்டத்தால் தீர்வை எட்ட முடியாதென்பதை உணர்ந்ததும், எமது வழிமுறையை மாற்றினோம். 1988 இல் வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக தேர்வானேன். 1989, 1994, 2004, 2010 தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானேன்.

இறுதியுத்தத்தின் பின்னர், அளவெட்டியில் மக்களுடன் ஒரு கலந்துரையாடல் நடந்தது. உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அந்த கலந்துரையாடலில் என்னுடன், கூட்டமைப்பின் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். திடீரென அங்கு வந்த இராணுவம் மக்களை அடித்து விரட்டியது. என்னுடன் வந்த மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர். நான் மட்டும் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தேன். இதை பார்த்த இராணுவத்திற்கு கோபமாகியிருக்க வேண்டும். ஒரு சிப்பாய் வந்து துப்பாக்கியை நீட்டி சுடுவேன் என எச்சரித்தான். அது நெருக்கடியான சமயம். அவன் நினைத்தால் என்னை கொன்றிருக்க முடியும். ஆனாலும், நான் அசையவில்லை.
இப்படியான ஏராளம் நெருக்கடியான தருணங்களை கடந்துதான் மக்கள் பணி செய்கிறேன். நாற்பது வருடத்திற்கும் அதிகமான இந்த போராட்ட வாழ்க்கையே, இப்படியாக நெருக்கடியான தருணங்களால் ஆனதுதானே!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here