சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரணமின்றி தம்மை கைது செய்து, பொலிசார் தாக்கினார்கள் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்றிரவு 11 மணியளவில் ஏழாலை சந்தியில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு இளைஞர்களை, வீதிக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் வழிமறித்தனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும், இன்று காலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கூறி தம்மை பொலிசார் தாக்கியதாகவும், தாம் மறுத்தும் கேளாமல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுதிசெய்ய தவறியதாலேயே அவர்களை கைது செய்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொலிசாரின் நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.