இலங்கை மீது மேலும் பொருளாதார நெருக்கடிகள்; ஐ.நா செயலாளர் மீண்டும் பேசுவார்: கூட்டமைப்பிடம் சர்வதேச பிரதிநிதிகள் வாக்குறுதி!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிற்குமிடையிலான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், இலங்கை ஜனநாயகத்தை பேண தவறினால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வருமென்ற செய்தியை ஜனாதிபதிக்கு தமது நாடுகள் தெரியப்படுத்தியதாக தூதர்கள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, இந்தியா, நோர்வே, கொரியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் 16 தூதர்களும், கொழும்பிலுள்ள  ஐ.நா பிரதிநிதி இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில், கடந்த 26ம் திகதி தொடக்கம் இன்று வரை நடந்த அரசியல் நெருக்கடி சம்பவங்களை இரா.சம்பந்தன் எடுத்துக்கூறினார். இலங்கையின் ஜனநாயகம் இல்லாமல் போய் விட்டதென்பதை கூறி, அதை மீள ஏற்படுத்த சர்வதேச சமூகம் உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பு சட்டங்களை எடுத்துக்கூறி, அவற்றை ஜனாதிபதி எப்படி மீறியிருக்கிறார் என்பதை எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

ஐநா பிரதிநிதி கருத்து கூறும்போது “இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி கவலையளிக்கிறது. ஏற்கனவே ஐநா பொதுச்செயலாளர் ஜனாதிபதியுடன் பேசியிருந்தார். அடுத்து வரும் நாட்களில் மீண்டுமொருமுறை னைாதிபதியுடன் தொலைபேசியில் பேச்சு நடத்துவார்“ என்றார்.

அரசியலமைப்பை பேணி, நாடாளுமன்ற தீர்மானங்களிற்கு செவிகொடுக்காமல் விட்டால் இலங்கை கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்கும் என்ற செய்தியை தனித்தனியாகவும், கூட்டாகவும் மைத்திரிக்கு தமது நாடுகள் வழங்கி விட்டதாகவும், அடுத்து வரும் நாட்களில் இன்னொரு முறை அந்த செய்தியை வழங்கவுள்ளதாகவும், தமது நாடுகளின் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை இலங்கை ஏற்கனவே சந்திக்க ஆரம்பித்து விட்டதாகவும் தூதுவர்கள் தெரிவித்தனர். விரைவில் மேலதிக பொருளாதார நெருக்கடிகளை இலங்கை மீது ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இன்று கொழும்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் குறித்து குறிப்பிட்ட தூதர்கள், தற்போதைய அரசியல் மாற்றங்கள் தமிழர்களிற்கு ஏதாவது ஆபத்தை தோற்றுவிக்கிறதா, இராணுவ மற்றும் பொலிஸ் செயற்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிவதிலும் தூதர்கள் ஆர்வம் காட்டினர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தூதர்கள் குறிப்பிட்ட பின்னரே கொழும்பில் தமிழர்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை இனவாத கண்ணோட்டத்துடன் அணுகும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை பல தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அறிந்து கொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here