அத்தையைப் போல பேரெடுக்க ஆசை!

விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படத்தின் மூலம் பிரபலமானவர் ஆம்னி. தொண்ணூறுகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரவுண்டு கட்டி அடித்தவர். பின்னர் தயாரிப்பாளர் காஜாமைதீனை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டினார். திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி, மீண்டும் தெலுங்கில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவருடைய தம்பி மகள் ஹிரித்திகாவும் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் விடியாத இரவொன்று வேண்டும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

உங்க பேரு கொஞ்சம் வடநாட்டு வாசனையோடு இருக்கே?

ஹிரித்திகான்னா உண்மைனு அர்த்தம். நான் சினிமாவுக்கு வரக் காரணம் சின்ன வயதிலிருந்து எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த என்னுடைய அத்தை ஆம்னி. அதுமட்டுமில்ல, சினிமான்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் சொல்வதெல்லாம் உண்மை…

உங்க பயோடேட்டா ப்ளீஸ்?

எனக்கு பூர்வீகம் ஆந்திரா என்றாலும், நான் பக்கா சென்னைப் பொண்ணுங்க. இங்கேதான் ஸ்கூல் முடிச்சேன். பிசினஸ் காரணமாக அப்பா பெங்களூர் சென்றதால் பெங்களூருவுக்கு ஷிப்ட் ஆகிவிட்டோம். ஸ்கூல் படிக்கும்போதே சினிமா வாய்ப்பு வர ஆரம்பித்தது. ஆனால் அத்தையும் மாமாவும் முதலில் பள்ளிப் படிப்பை முடி பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள். கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தபோதுதான் தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதல் சினிமா எப்படி அமைஞ்சது?

அப்பாவுக்கு சினிமாத் துறையில் தொடர்பு உண்டு. தெரிந்த சர்க்கிள்ல என்னுடைய போட்டோஸை சர்குலேட் பண்ணினார். அந்த போட்டோஸை பார்த்துவிட்டுதான் இயக்குநர் கருப்பையா முருகன் விடியாத இரவொன்று வேண்டும் படத்துக்காக செலக்ட் பண்ணினார். ஹீரோயினுக்கும் பெர்ஃபாமன்ஸுக்கும் முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் பிகு பண்ணாமல் ஒப்புக் கொண்டேன்.

அசோக் ஹீரோவா பண்ணியிருக்கிறார். நிஜத்தில் நான் கல்லூரி மாணவி என்பதால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் கேரக்டரில் எளிதாக பண்ண முடிந்தது. படத்துல எனக்கான ஸ்கோப் அதிகம் இருக்கும். கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையா படம் முழுக்க டிராவல் பண்ணக்கூடிய கேரக்டர். படத்துல சீனியர் நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

சினிமாவை எங்கு கற்றுக் கொண்டீர்கள்?

என்னுடைய அத்தையிடம்தான். அவருடைய படங்கள்தான் எனக்கான சினிமா பயிலகமாக இருந்தது. அப்பாவும் டிரைன் பண்ணியிருக்கிறார். சின்ன வயதிலிருந்து நிறைய படங்கள் பார்ப்பேன். ஸ்கூல் படிக்கும்போது கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வேன்.

படிக்கிற வயதில் சினிமால நடிக்க வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா?

சின்ன வயசுல நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சுருக்கேன். அப்போ அப்பாதான் ஷூட்டிங் கூட்டிட்டுப்போவாங்க. ஷூட்டிங் பத்தி அப்பாவுக்கு நல்லாவே தெரியும். அம்மாவும் நான் நடிக்கக் கூடாதுன்னு தடையெல்லாம் போடலை.

இப்போ இண்டஸ்ட்ரியே மீ டூ புயலில் ஆடிப்போயிருக்கு. இந்தக் காலகட்டத்தில் நடிக்க வந்திருக்கீங்களே?

எந்தத் துறையாக இருந்தாலும் திறமை இருந்தால் ஜெயிக்க முடியும். திறமை இல்லாதவர்கள்தான் அதுபோன்ற பிரச்சினைகளை நினைத்து கவலைப்பட வேண்டும். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால் மீ டூ பற்றிய பயம் இல்லை.

ரோல் மாடல் என்று யாரையும் வைத்திருக்கிறீர்களா?

சினிமாவில் என்னுடைய ரோல் மாடல்னா அது என்னுடைய அத்தை நடிகை ஆம்னி. என்னுடைய அத்தை சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கியவர். தனி மனுஷியாக போராடி நாயகியாக வந்தாங்க. தெலுங்குல நடித்தளவுக்கு அவர் தமிழில் அதிகமாக படம் பண்ணவில்லை என்றாலும், அவருக்கான விருதுகள், புகழ் மூலம் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

சில ஆண்டுகள் நடித்துவிட்டு திருமணம் பண்ணிட்டு செட்டிலாகிட்டாங்க. என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும். நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கணும். நல்ல படங்களில் நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அத்தையை விட அதிகமான விருதுகளைப் பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும் இதுதான் என்னோட லட்சியம்.

அத்தை நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம்?

தெலுங்கில் ஜெகபதிபாபு ஜோடியா நடித்த மாவிச்சிகுரு ரொம்பப் பிடிக்கும். தமிழில் ஆனஸ்ட்ராஜ் படம் பிடிக்கும். அத்தையோட ஸ்பெஷல், எமோஷனல் சீன்ல நல்லா நடித்திருப்பார்கள்.

சினிமாவில் கிளாமர் இருக்குமே…?

சினிமாவில் கிளாமர் என்பது ஒரு அங்கம். கிளாமரை நீக்கிவிட்டு சினிமாவை பிரித்துப் பார்க்கமுடியாது. எனக்கு கிளாமர் பண்ணுவதில் ஆட்சேபணை இல்லை. அது யார் கண்ணையும் உறுத்தாதளவுக்கு இருக்கவேண்டும். ஆனால் கதை, இயக்குநரைப் பொறுத்து முடிவு எடுப்பேன்.

நடிக்க விரும்பும் ரோல்?

எனக்கு காமிக்ஸ் கதைகள் பிடிக்கும். கடந்த ஆண்டு வெளிவந்த ஒண்டர் வுமன் படத்துல கல் கடாட் பண்ணிய ரோல் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான வேடங்களில் நடிக்குமளவுக்கு இப்போது என்னிடம் மெச்சூரிட்டி கிடையாது. ஏன்னா அந்த வேடத்துக்கு நான் ரொம்ப சின்னப் பொண்ணு. எதிர்காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவேன்.

நடிப்பு தவிர வேற திறமை?

எனக்கு பரதம் நல்லா தெரியும். அரங்கேற்றமும் பண்ணியிருக்கிறேன். ஐயம் ஏ குட் டான்சர் என்று சொல்வதில் எனக்கு பெருமை உண்டு. தனித்திறமை என்றால் நான் நல்லா படிக்கிற பொண்ணு.

நிஜத்துல நீங்க என்ன மாதிரி கேரக்டர்?

எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி. அதுக்காக சினிமா துறைக்கு எப்படி வந்தீங்கனு கேட்கலாம். கேமரா முன்னாடி நிற்கும்போது கூச்சப்படமாட்டேன். ஆனால் பொது இடங்கள் என்றால் கொஞ்சம் கூச்சப்படுவேன். எல்லோரிடமும் அன்பு காட்டுவேன். ஏன்னா, முதல் சந்திப்பிலேயே ஒருவரை நல்லவராகவோ, கெட்டவராகவோ தீர்மானிக்க முடியாது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here