‘மோதிரத்தை திருப்பி தா’: முன்னாள் காதலர் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பெண் மருத்துவர் ஒருவரின் முன்னாள் காதலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ”சிகாகோவிலுள்ள மெர்சி மருத்துவமனை அருகே துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் மருத்துவர் உட்பட நான்கு பேர் பலியாகினர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் முன்னாள் காதலர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மருத்துவரிடம் மோதிரம் ஒன்றை திரும்பப் பெறுவதற்கான வாக்குவாதம் முற்றிய நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அந்த மருத்துவர், துணை ஆய்வக உதவியாளர், பொலிஸ் அதிகாரி உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை” என்று கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி, சாமுவேல் ஜிமினெஸ் என்றும் அவர் கடந்த வருடம்தான் அமெரிக்க பொலிஸில் இணைந்துள்ளார். இந்த வருடத்தில் பணியின்போது மறைந்த இரண்டாவது போலீஸ் அதிகாரி இவர் என்று சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவரின் பெயர் தமரா ஓ நீல்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here