ஒரேநாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள்: ஆணைக்குழுவுடன் மைத்திரி இரகசிய பேச்சு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய பேச்சு நடத்தியுள்ளார். பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம்- 18ம் திகதி இந்த சந்திப்பு நடந்தது.

தேர்தல் ஆணைக்குழுவினருடனான சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவர் சார்பில் சில சட்ட நிபுணர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குள்ள ஒரே மார்க்கமாக தேர்தலே உள்ளது. நாடாளுமன்றத்தை நான் கலைத்தது பிழையென ஐதேகவினரும் மற்ற கட்சிக்காரர்களும் சொல்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த முடியுமா என்றும் சவால் விட்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தை கலைத்த எனது முடிவின் மக்கள் கருத்தறியும் விதமாக ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த விரும்புகிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?“ என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி அப்பிராயம் கோரினார்.

இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த சட்டரீதியாக எந்த தடையும் இல்லையென்பதை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே, நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், இரண்டு தேர்தல்களையும் சேர்த்தே நடத்துவதென்றால், அதிகளவான ஆளணி தேவையாக இருக்குமென்று ஆணைக்குழு குறிப்பிட்டது.

இரண்டு தேர்தல்களையும் சமநேரத்தில் நடத்துவதெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமென இந்த சந்திப்பில் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இது குறித்து விரைவில் ஒரு முடிவை எடுத்து விட்டு, அடுத்த வாரமளவில் மீண்டும் ஆணைக்குழு உறுப்பினர்கள் அல்லது ஆணைக்குழுவின் தலைவருடன் சந்திப்பு நடத்த விரும்பவதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த விபரங்களை ஜனாதிபதி தரப்பு இதுவரை வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here