ஞானசாரருக்கு பொதுமன்னிப்பளிக்கிறார் ஜனாதிபதி!

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பளித்து விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கலகொட ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இந்த தண்டனைக்கு ஆட்சேபனை தெரிவித்து உயர் நீதிமன்றில் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் ஞானசார தேரர் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பொதுபல சேன மற்றும் சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில பௌத்த இனவாத அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டு விரட்டியடித்தனர்.

எனினும் தேரர்களை அழைத்து பேச்சு நடத்திய ஜனாதிபதி, பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருந்தார்.அத்துடன், பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு உத்தரவு வழங்கிய அதிகாரி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பு, தமது போதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை நீக்கி பொது மன்னிப்பு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

பௌத்த தேரர் ஒருவர் இவ்வாறு சிறைத் தண்டனை அனுபவிப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் தமது கொள்கையுடன் ஜனாதிபதி உடன்படுகிறார் என்றும் பொதுபல சேனா அமைப்பினர் தெரிவித்தனர்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் கையில் தனிச் சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போலித் தேசியக் கொடியை வைத்திருந்தனர்.

பிக்குகள் வைத்திருந்த சர்ச்சைக்குரிய தேசியக்கொடி

அரசியல் நெருக்கடியால் நாடு குழப்பமடைந்துள்ள நிலையில் இனவாத பௌத்த அமைப்புகளுடன் ஜனாதிபதி கைகோர்த்துள்ளமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

அண்மையில் ஜனாதிபதியின் ஜப்பான் பயணத்தின் போது டோக்கியோவில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர் பங்கேற்றார். அவர் பங்கேற்றதற்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என உடனடியாக மறுப்பு வெளியிட்டிருந்த ஜனாதிபதி தற்போது இனவாத அமைப்புகளுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இணைவு சிறுபான்மையினரை நிச்சயம் சந்தேகமடைய வைக்குமென கருதப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here