பொதுமக்களுக்கு பயந்து பைக்கில் தப்பிய அமைச்சர்; விரட்டிப்பிடித்த மக்கள்!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கொள்ள முடியாமல் பைக்கில் தப்பிய அமைச்சர் ஓ.எஸ். மணியனை பொதுமக்கள் விரட்டி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயல் கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்றுள்ளது. அங்கு உணவு, தண்ணீர், மின்சாரம் எனஅடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சோறுடைத்த சோழ நாடு என போற்றப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தற்போது சோற்றுக்கு வழி இல்லாமல் இருக்கிறது.

இந்த அவல நிலையை அறிந்த தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து ஏராளமான நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவொரு உதவியும் வரவில்லை, அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி இன்று வரை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். அப்போது அவரால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் இரு சக்கர வாகனத்தில் அவசர அவசரமாக தப்பி சென்றார். ஆனால் மக்களோ அமைச்சரை துரத்தி பிடித்து நிறுத்தி அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் மக்களை எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடுகிறார் என்றால் இந்த அரசின் நிவாரண பணிகள் எந்த அளவிற்கு இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டிருக்காமல் நிவாரண பணிகளை முறையாக செய்யாத அரசு குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் அடித்து நொறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here