அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் திரில்லர் படம்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’.

அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல். வர்ணனையாளரும் ‘ஜனத்’, ‘ஹவுஸ்ஃபுல்-3’, ‘டேஞ்சரஸ் ஐசக்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத் தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இவர் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்கிற படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார்.

கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக ‘அதோ அந்த பறவை போல’ உருவாகியிருக்கிறது.

இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்,,? வனப் பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் வினோத் பேசும்போது, “படத்தின் பெரும் பகுதி வனப் பகுதிகளி்ல் நடப்பதால், அங்குள்ள பருவ நிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வட மாநிலக் காடுகளில் படத்தை உருவாக்கினோம்.

தேவை இல்லாமல் எந்தக் காட்சிகளும் எடுக்கக் கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், கலை இயக்குநர், சண்டை இயக்குநர் ஆகிய அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பேயே திட்டமிட்டிருந்தோம்.

படத்தில் அமலா பால் மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக் குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது.

படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள், ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here