அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் – ஒரு அலசல்

சாள்ஸ் ஜே.போர்மன்

கார்த்திகை மாதம் 06 ம் திகதி அமெரிக்காவில் நடந்த தேர்தல்கள் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட்டன. அதன் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அமெரிக்காவின் அரசியலைப் பற்றிய சிறிய அறிமுகம் செய்துகொள்ளவேண்டும்.

அமெரிக்காவின் அரசியல் அதிகாரப் பங்கீடு ஜனாதிபதி தவிர, ஐக்கிய அமெரிக்க செனட், [United States Senate] பாராளுமன்றம் [United States House of Representatives] இரண்டு மக்கள் உறுப்பினர்கள் கொண்ட சபைகளிடம் இருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் தெரிந்தெடுக்கப்படும் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்ட 100 பேர்களைக் கொண்டிருக்கும் செனட்டை பாராளுமன்றத்தின் மேல் அறை எனலாம். இதன் தலைவராக இருக்கும் உப ஜனாதிபதி அறுதி வாக்களிக்கும் உரிமை கொண்டவராக இருக்கிறார். ஐக்கிய அமெரிக்காவின் இன்னொரு உயர் அதிகார பீடமான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களை முடிவு செய்வது போன்ற முக்கிய நியமனங்களை செனட் முடிவெடுக்கிறது. மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களைப் பற்றியும் செனட் முடிவெடுகிறது.

கீழ் அறை என்று குறிப்பிடப்படக்கூடிய பிரதிநிதிகளின் சபையின் 435 அங்கத்தவர்கள் செனட்டை போலன்றி மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்றபடி தெரிவுசெய்யப்படுகின்றனர். பிரதிநிதிகள் சபையின் தலைவர் சபாநாயகர்.

பிரதிநிதிகள் சபையின் சகல அங்கத்துவர்களையும் 36 செனட் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்வதற்காக இத்தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். இடைக்காலத் தேர்தல்கள் என்றழைக்கப்படும் இத்தேர்தல்கள் ஜனாதிபதியைத் தெரிவுசெய்த இரண்டு ஆண்டுகளின் பின்பு நடைபெறுகின்றன. ஜனாதிபதி தேர்தலின் போதே சகலரும் தெரிவுசெய்யப்பட்டால் அரசியல் அதிகாரத்தில் ஒரு சமநிலை இருக்காமல் போகலாம் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது. அதாவது குறிப்பிட்ட ஒரு கட்சியில் இருந்து ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்பட்டால் அதே கட்சியே இரண்டு சபைகளையும் கைப்பற்றினால் நாட்டின் ஆட்சி ஒரு சர்வாதிகாரமாக மாறிவிடலாம் என்ற நிலைமை இருக்கிறது. அப்படியான நிலைமையில் பிரதிநிதிகள்சபைத் தேர்தல் இரண்டு வருடங்களின் பின்பு வரும்போது குடிமக்கள் தமது அதிருப்தியைத் தெரிவிக்கலாம்.

இதை நிஜத்தில் அமெரிக்கா 2016 இல் சமீபத்தில் நேரிட்டது. [இது முதல் தடவையல்ல.] அதாவது 2016 தேர்தலின் பின்பு ஜனாதிபதியின் கட்சியே, செனட், பிரதிநிதிகள் சபை இரண்டையும் கைப்பற்றியது. அதன் மூலம் டிரம்ப் தனது திட்டங்களில் பலவற்றை ரிப்பப்ளிகன் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்ற முடிந்தது. இதன் விளைவுகளை அமெரிக்க அரசியலில் மட்டுமன்றி சர்வதேச அரசியல், பொருளாதார மைதானத்தில் நாம் தெளிவாகக் காணமுடிந்தது.

அமெரிக்காவின் சமுதாயத்தைப் பொறுத்தவரை டிரம்பின் கோட்பாடுகளும் அவற்றின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும் என்றுமே கண்டிராதபடி மக்களை இரண்டு அணியாகப் பிரித்துவிட்டிருக்கின்றன. சர்வதேச ரீதியில் இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்திலிருந்து அமெரிக்கா தனது இணையாகப் பாவித்துவந்த ஐரோப்பாவுடன் டிரம்ப் பல விடயங்களிலும் நேரடி மோதலை ஆரம்பித்திருக்கிறார்.

நீண்ட காலமாக உலக நாடுகள் தங்களது குறியாகக் கொண்டிருந்த வரிகள் இல்லாத\பொருளாதார எல்லைகள் இல்லாத உலகம் என்ற நோக்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளுடன், குறிப்பாக சீனாவுடன் புதிய வர்த்தக வரிகளை டிரம்ப் அறிமுகப்படுத்தி ஒரு உலகளாவிய வர்த்தகப் போருக்கு அடிகோலியிருக்கிறார்.

இந்த நிலையில் நடந்த நடுக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்பின் ரிப்பப்ளிகன் கட்சி தனது பெரும்பான்மையை இழந்திருக்கிறது, செனட் சபையிலோ தொடர்ந்தும் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

435 இடங்களில் இதுவரை அறிவிக்கப்பட்ட பிரதிநிதிகள் சபைகளில் டெமொகிரடிக் கட்சி 227 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்த ரிப்பப்ளிகன் கட்சி 198 இடங்களைப் பெற்றிருக்கிறது. செனட் சபையைப் பொறுத்தவரை ரிப்பப்ளிகன் கட்சி 51 இடங்களை இதுவரை பெற்றிருக்கிறது. எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் இடங்களில் மேலும் ஓரிரு இடங்களைப் பெறக்கூடும்.

மேற்கண்ட நிலைமையில் இரண்டு கட்சிகளுமே தாங்கள் தாம் தேர்தலில் உண்மையாக வெற்றிபெற்றதாக அறிவித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்த இழப்பு டிரம்புக்கு உண்மையிலேயே தோல்வியா என்று கேட்டால் இல்லை என்பதே எனது கருத்து. பின்னால் திரும்பிப் பார்த்தால் ஒபாமா, ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன் அனைவருமே தமது முதலாவது ஜனாதிபதிக் காலத்தின் முதலிரண்டு வருடங்களிலே இதே நடுத்தேர்தல் முடிவுகளைத்தான் பெற்றார்கள் என்பதைக் குறிப்பிடலாம். சரித்திரத்திரத்திலேயே மிகவும் வெறுக்கப்படும் ஜனாதிபதியாகக் காட்டப்பட்ட டிரம்ப் தனது வெற்றியை ஒரு சபையில் அதிகரித்துக்கொண்டிருப்பது அவர் தனது கோட்பாடுகளை எத்தனை புத்திசாலித்தனமாக விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

ஏன் இந்தத் தேர்தல் முடிவு டிரம்ப்புக்கு வெற்றி, அதுவும் இரட்டை வெற்றி என்று கவனித்தால், முதலாவதாக அவர் இனிமேல் தனது நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகளுக்குக் காரணம் டெமொகிரட்டிக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றிருப்பதைச் சாட்டாகக் குறிப்பிடும் வசதி இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக இரண்டு சபைகளிலும் ரிப்பப்ளிகன் கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் டிரம்ப் தான் இஷ்டப்பட்ட திட்டங்கள், மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் ஆதரவைப் பெற முடியவில்லை. பலவற்றுக்கு அவரது ரிப்பப்ளிகன் கட்சியினராலேயே முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆனால், அதே சமயம் அந்த எதிர்ப்புக்களை வைத்து “நாங்கள் – அவர்கள் [மாற்றங்களுக்கு எதிரிகள்]” என்ற தோற்றத்தை உருவாக்கி வருவதில் வெற்றிபெறுகிறார் டிரம்ப். அதன் விளைவுதான் இன்று அமெரிக்காவில் பலமாகிவரும் வலதுசாரிக் கோட்பாடுகளும், நிறவாதங்களும் எனலாம்.

2020 இல் நடக்கப்போகும் ஜனாதிபதி தேர்தலில் டெமொகிரடிக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்று டிரம்பை எதிர்கொண்டு வீழ்த்தப்போகிறவர் யார் என்பது அடுத்த கேள்வி. பெரும்பாலானவர்களால் 2016 தேர்தலில் தோற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட டிரம்ப் வெற்றிபெற்றதால் டெமொகிரடிக் கட்சி ஒரு பலமான தலைமையின்றித் தவித்து வருகிறது. அடுத்த தேர்தலில் டிரம்பை எதிர்கொள்வது யார் என்பதற்கான தெளிவான பதில் இதுவரை இல்லை.

ஆனாலும், டெமொகிரடிக் கட்சியினரால் அந்த இடத்துக்கு உகந்தவர் என்று கருதப்பட்ட பெடோ ஒ’ ரூக் செனட்டராக வர டெக்ஸாஸில் முன்னிறுத்தப்பட்டார். நடந்ததோ இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரிப்பப்ளிகன் கட்சியின் செனட்டர் வேட்பாளராக யார் வருவது என்ற போட்டியில் டிரம்ப்பை எதிர்கொண்டு தோல்வியடைந்த டெட் குரூஸ் டெமொகிரடிக் கட்சி வேட்பாளரான பெடோ ஒ’ ரூக்கை மண் கவ்வ வைத்திருக்கிறார். டிரம்ப்பினால் தோற்கடிக்கப்பட்டவரால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற நிலைக்கு டெமொகிரடிக் கட்சியின் ஜனாதிபதி நட்சத்திரம் வீழ்ந்திருப்பது டிரம்ப்புக்கு இன்னொரு வெற்றி.

பிரதிநிதிகள் சபை வெற்றியை பெரியதாக ஊதிக்காட்டி தாம் வெற்றிபெற்றதாக டெமொகிரடிக் கட்சியினர் கூச்சலிட்டாலும் உண்மையில் அக்கட்சி தற்போது கலகலத்துப்போன நிலையிலேயே இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு இருப்பதோ இன்னும் இரண்டே இரண்டு வருடங்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அதற்கான உட்கட்சித் தேர்தல்கள் ஆரம்பமாகிவிடும் என்பது அமெரிக்க வழக்கம்.

அத்தனை வேகமாக எந்த முகத்தை முன்வைத்துப் போட்டியில் இறங்குவது என்ற கேள்வியைத் தவிரக் கோட்பாட்டு ரீதியாகவும் எந்த வழியில் போவது என்பதும் டெமொகிரடிக் கட்சியின் முன்னாலிருக்கும் மிகப் பெரிய கேள்விகள்.

டிரம்ப்பைப் பொறுத்தவரை முதலாவது தேர்தலில் இருந்ததை விட அதிக தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது. 2020 இல் இரண்டாவது முறையும் டிரம்ப் வெல்லக்கூடும் என்ற எண்ணம் உலகெங்கும் தோன்றியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவுகளின் பின்பு.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here