தளபதிகளை நீதிமன்றில் நிறுத்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்: மைத்திரி அதிரடி உத்தரவு!

கொழும்பில் 11 தமிழர்கள் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகளை துணிச்சலாக முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கடற்படைத் தளபதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்த நிசாந்த டி சில்வா, மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதாய விளக்கத்தின் முன்பாக சாட்சிகளை முன்வைத்திருந்தார். அவரது விசாரணைகளின் அடிப்படையில் 7 குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கை துரிதமாக முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக பொலிஸ் திணைக்களத்தால் அவரும் அவரது பிரிவும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், 2008- 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகளைக் கைது செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுத்தார்.

கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரான நேவி சம்பத் என அழைக்கப்படும் முன்னாள் கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி கைது செய்யப்பட்டார். கொழும்பு லோட்டஸ் வீதியில் போலி அடையாள அட்டையுடன் மாறுவேடத்தில் நடமாடிய நேவி சம்பத்தை நிசாந்த டி சில்வா நேரடியாகச் சென்று கைது செய்திருந்தார்.

நேவி சம்பத் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உடந்தையாக இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த டி சில்வா நீதிமன்றில் தெரிவித்தார். அதனால் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்வதற்கு ஜனாதிபதி தடையாகவிருந்தார்.

அத்துடன், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் கீத் நோயர், உபாலி தென்னக்கோன் மற்றும் நாமல் பெரேரா ஆகியோர் மீதான தாக்குதல்கள் ஆகிய வழக்குகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நிசாந்த டி சில்வாவே முன்னெடுத்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கொலைகள், கடத்தல்கள் மற்றும் தாக்குதல்களில் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை நிசாந்த டி சில்வாவே வெளிக்கொண்டு வந்திருந்தார். அத்துடன், சந்தேகநபர்களான படை அதிகாரிகளையும் அவர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் சந்தேகநபராக இணைக்கப்படுவார் என்று தெரியவந்திருந்தது.

இந்த நிலையில் பொலிஸ் திணைக்களத்தையும் தனது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வழக்கு விசாரணைகளை துணிச்சலுடனும் துரிதமாகவும் முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here