புளொட்டிடம் மன்னிப்பு… சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு ஒருவார காலஅவகாசம்: தமிழ் மக்கள் பேரவை சுவாரஸ்யங்கள்!

இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான பூ.லக்ஸ்மன் வெளியேற்றியிருந்தார்.

எனினும், கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாக தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் சமாதானம் கூறி, நிலைமையை சமாளித்தார்கள். எனினும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, அவர்கள் கூறியது பொய்யானதென புளொட் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டம் கந்தர்மடத்திலுள்ள அதன் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்திற்கு புளொட் தரப்பிலிருந்து அதன் செயலாளர் பவானந்தன், பொருளாளர் சிவநேசன் ஆகியோர் சென்றிருந்தனர். கூட்டம் நடக்கும் இடத்தில் அமர்ந்திருந்தபோது, வைத்தியர் லக்ஸ்மன் அவர்களை சந்திக்க காத்திருப்பதாக கூறப்பட்டது. அவர்கள் இருவரும் வெளியில் செல்ல, “கட்சி தலைவர்கள் மாத்திரமே வரலாம். கட்சியின் பிரதிநிதிகள் வர முடியாது“ என லக்ஸ்மனால் கூறப்பட்டது.

“தமிழ் மக்கள் பேரவையின் முதல் கூட்டத்திற்கும் நானே வந்தேன். தலைவர் தவிர்ந்தவர்கள் வர முடியாதென்றால் அதை முதலிலேயே அறிவித்திருக்க வேண்டுமே. புளொட் சார்பில் சித்தார்த்தன் அல்லது நான்தான் வருவோமென ஏற்கனவே எழுத்து மூலமும் அறிவித்திருக்கிறோம் அல்லவா?“ என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் தரப்பபு அழுத்தம் தருகிறது என்பதை போல ஏதோ காரணங்களை ஏற்பாட்டாளர்கள் கூ, புளொட் பிரதிநிதிகள் இருவரும் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர்.

பின்னர் சற்று நேரம் கழித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன் கூட்டத்திற்கு வந்தார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சர்வேஸ்வரன் முதலாவது தடவையாக வந்தார். (புளொட் சார்பில் சிவநேசன், பவானந்தன் முதலாவது கூட்டத்திலிருந்து கலந்து கொள்கிறார்கள்). சர்வேஸ்வரனையும் பேரவை ஏற்பாட்டாளர்கள் இடைமறித்து, கலந்து கொள்ள முடியாதென அறிவித்தனர்.

அந்த இடத்திலிருந்தபடியே தொலைபேசியில் தனது சகோதரனான சுரேஷ் பிரேமச்சந்திரனை தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தொலைபேசியில் க.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு, விடயத்தை சொன்னார். இதையடுத்து, விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிட்டு, சர்வேஸ்வரனை உள்ளே அனுமதிக்க சொன்னார்.

இதன்போது, ஏற்கனவே புளொட் பிரதிநிதிகள் திருப்பியனுப்பப்பட்ட விடயத்தை ஏற்பட்டாளர்கள் கூறினார்கள். இதற்கு அங்கிருந்த பிரதிநிதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தவிர்ந்த ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விடயம் தனக்கு தெரியாமல் நடந்து விட்டதென க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு, அப்படி திருப்பியனுப்பியது பிழையானதென்றார்.

இதையடுத்து, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடும்போது- “ஒரு தவறு நடந்து விட்டது. எமது தரப்பில் பழை நடந்ததை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களிப்பு நடந்தால், தலைவர்கள் தேவையென்பதால் அப்படி நடந்து விட்டோம். உடனடியாக புளொட் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டோம். திரும்பி வரும்படி கேட்டோம். அவர்கள் கூட்டம் நடக்குமிடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக கூறினார்கள்“ என்றார்கள்.

எனினும், பேரவை தரப்பிலிருந்து தம்முடன் யாருமே பேசவுமில்லை, மன்னிப்பு கேட்கவுமில்லையென புளொட் பொருளாளர் க.சிவநேசன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இப்படியான சர்ச்சைகள் ஏற்பட காரணம், யாப்பில்லாததே என சிலர் குறிப்பிட்டனர். உடனடியாக தமிழ் மக்கள் பேரவைக்கு யாப்பு உருவாக்க வேண்டுமென பலர் வலியுறுத்தினர்.

இந்த சர்ச்சையின் பின்னர், பேரவை கூட்டம் ஆரம்பித்தது. இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடயம்தான் முக்கியமாக ஆராயப்பட்டது. வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தது தவறு என கஜேந்திரகுமார் கூறினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இருக்கும் கூட்டணிக்கு வரவேமாட்டோம் என்றும் அடித்து சொன்னார்.

வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்தது தவறு என பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டார்கள். இதையடுத்து, சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்த விவகாரத்திற்கு தன்னிலை விளக்கமளிக்க வேண்டும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும், இல்லாத பட்சத்தில் அந்த அமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மன்னிப்பு கோரினாலும், மீண்டும் இணைவது சாத்தியமில்லை, இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது என கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here