சோதிடக்கலை மூலம் மக்கள் அறியக்கூடிய முக்கிய செய்திகள்

சி.இராசநாயகம்
சோதிட ஆலோசகர்

12 பாவங்களுக்குமானவை

முதலாம் பாவம்:- முதலாம் பாவ அதிபதி உச்சமாகவோ சொந்த வீட்டில் இருக்கவோ அல்லது நட்பு வீட்டில் இருப்பதாக அமைந்து, சுபக்கிரகங்களும் இருந்து சுபக்கிரகங்களது பார்வையும் அமைந்தால் நீடித்த வாழ்நாள் பலமும் சமூகத்தில் மதிப்பும் செல்வப் பெருக்கம் என்பவை உண்டாகும். இதற்கு மாறாய் அமைந்து காணப்படின் மாறுபாடான சஞ்சலமான நிலையைத் தோற்றுவிக்கும்.

சரராசியிலே முதற்பாவம் அமைந்தால் வெளிநாடு சென்று மீளவும், அலைந்து திரியும் பழக்கம் கொள்ளும் நிலையும் ஸ்திரராசியில் அமைந்தால், பிறந்த ஊரிலேயே நிலையான வசதிகள் பெற்று வாழவும் உபயராசியில் முதற்பாவம் அமைந்தால் சிலகாலம் வெளியூர் சிலகாலம் சொந்த ஊர் என மாறி மாறி வாழ்க்கை நடத்தவும் செய்யும்.

முதலாம் பாவத்தை லக்கினாதிபதி பார்த்தால் வலிமை, வசதி, அரசாங்க ஆதரவுகளை அடைவார். தீய கிரகங்கள் பார்த்தால் வாழ்க்கையில் வெறுப்பும் மறதியும் ஆறாம் பாவ அதிபதி பார்த்தால் நோய் பிணிகளையும் பன்னிரண்டாம் அதிபதி பார்த்தால் அளவுகடந்த செலவுகளையும் எட்டாம் பாவ அதிபதி பார்த்தால் விபத்து சம்பந்தப்படும் இடையூறுகளையும் அதிகமாக்கும் எனவும் அறிக.

இதே முதலாம்பாவதி (லக்கின அதிபதி) நாலாம் பாவ அதிபதி இரண்டுக்கும் இடையில் காணப்படும் கிரக அமைப்பு நட்பு, ஆட்சி, உச்சம் நிலையில் காணப்படின் தயார் உறவு நிலை வலுக்கவும், ஏழாம் வீட்டதிபதி நிலையில் கணவன், மனைவி உறவுநிலைகள் மதிப்பிட்டுக் கொள்ளவும், ஒன்பதாம் வீட்டதிபதி தொடர்பால் தகப்பனார் நிலையை விளங்கிக் கொள்ளவும், மூன்றாம் வீட்டு அதிபதி தொடர்பால் தகப்பனார் நிலையை விளங்கிக் கொள்ளவும், மூன்றாம் வீட்டு அதிபதி தொடர்பால் சகோதர பற்றுப் பாசம் நட்பு, பகை போன்ற நிலைகளையும், புரிந்து கொள்ள சந்தர்ப்பம் உண்டாகிறது.

முதலாம் வீடு ஜலராசியாயின் ஊதலான சரீரமும், லக்கின அதிபதி பலம் பெற்றிருப்பின் தேகபலம் வலுவுற்று அமையவும் இடமளிக்கும் என்க.

இரண்டாம் பாவம்:- இரண்டாம் பாவ அதிபதி 11ஆம் பாவத்திலும், 11ஆம் பாவ அதிபதி 2ஆம் பாவத்திலும் இருந்தாலும், இவர்கள் இருவரும் கேந்திரங்களில் இருந்தாலும், பெரும் செல்வமும் செல்வாக்கும் உடையவராக சாதகர் காணப்படுவார். ஒரு சாதகருக்கு இரண்டாம் அதிபதி மறைந்தோ, நீசப்பட்டோ அமைந்தாலும், குரு 12ஆம் வீட்டிவிருந்தாலும், கடன்காரனாயும், உள்ள செல்வங்களையெல்லாம் இழக்கவும் நேரிடலாம்.

இதேவேளை 2ஆம் அதிபதி மூன்றாம் அதிபதியோடு கூடியிருப்பின் சகோதரர் மூலம் பணவருவாய் கிடைக்கும். 4க்கு உடையவனோடு சேர்ந்தால் தாயார் மூலம் செல்வம் சேரும். 5ஆம் அதிபதியுடன் இருந்தால் பிள்ளைகளாலும், 7ஆம் அதிபதியுடன் இருப்பின் கணவன், மனைவி வழியாலும், 9 ஆம் அதிபதியுடன் இருப்பின் தகப்பனார் மூலமும் வருவாய்கள் செல்வநிலை என்பன அமையவும் செய்யும்.

இரண்டாம் அதிபதி 6 இல் இருந்தால் எதிரிகளிடம் செல்வம் போய்விடலாம். 6க்கு உடையவன் 2இல் இருந்தால் எதிரிகளின் செல்வம் இவருக்கு வந்து சேரும். சாதாரணமாக ஒரு சட்டத்தரணி எதிரி தரப்பிலிருந்து தான் வருமானம் அதிகம் அடைகின்றான். அவருக்கு அந்த அமைப்பு பொருந்தும். தனகாரனான குரு நன்றாக அமைந்து சுப பார்வைகள் பெற்றிருந்தாலும் செல்வப் பெருக்கம் எனக் கூறலாம்.
இரண்டாம் பாவம் முறையாகக் கல்வி கற்பது பற்றிய போக்கை உணர்த்தும். புதன் இரண்டில் இருப்பது நல்லது. புதன் சனியுடன் சேர்ந்தால் கல்விக்கு இடைஞ்சல் தரும். 2 ஆம் அதிபதி சூரியனுடன் சம்பந்தப்பட்டால் அரசியல் உடல்நலக் கல்வி போன்றவையில் சிறப்புப் பெறலாம். சூரியன் சந்திரன் கிரகங்களுடன் இரண்டாம் அதிபதி கூடியிருந்தால் இயற்கை தத்துவம் இரசாயனம் பௌதீகம் மற்றும் விஞ்ஞான ரீதியான ஈடுபாடுகளில் பிரகாசிக்கலாம்.

இரண்டாம் அதிபதி செவ்வாயுடன் பலம் பெற்றுக் காணப்பட்டால் விவசாயம், இயந்திரசாதனங்கள், மின்சாரம், தட்டெழுத்து, கணினி போன்றவை சிறப்பாயமையும், குருவுடன் சம்பந்தப்பட்டால் ஆன்மீகம், இலக்கியம், சோதிட ஆய்வுகள் பற்றிய கல்வியில் அதிக ஆர்வம் காணப்படும்.

இரண்டாம் பாவம் புதனுடன் பலமான தொடர்பு பெற்றிருப்பின் கணிதம், காலநிலை அவதானிப்பு, மற்றும் சோதிட விஞ்ஞானம், என்பவை அமையும். ராகு கேதுக்கள் சம்பந்தப்படுமாயின் பிரபலிக்கம் இல்லாத அசாதாரண துறைகளில் கல்வியில் நாட்டம் பெறச் செய்யும்.

இரண்டாம் பாவத்தில் பாவக்கிரகங்கள் அமைவதும் அல்லது பாவக்கிரகங்கள் பார்ப்பதும், இரண்டாம் பாவ அதிபதி பாவக்கிரக சேர்க்கை பெற்று வேறு பாவங்களில் இருப்பதும் நல்ல அமைதியான சாந்தமான குடும்ப வாழ்வை கெடுத்து விடலாம். இரண்டாம் பாவத்தில் கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பின் தாரம் ஒன்றுக்கு மேல் அமையவும் பலன் செய்யலாம்.

இரண்டாம் பாவம் நல்ல கிரக சேர்க்கையுடன் வலுவான நிலையில் இருப்பின் கண்களில் நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. சூரியன் சந்திரன் இரண்டும் நல்ல நிலையில் அமைய வேண்டும். என்பதும் முக்கியமானதாகும். இல்லையேல் நோய்கள் வரலாம். கண்பார்வையும் பாதிப்படையலாம்.

மூன்றாம் பாவம்:- இந்தப் பாவம் மூலமாக ஒரு சாதகர் தனது இளைய சகோதரம், தொழிலில் அரச ஆதரவு, சக பணியாளர் தொடர்பு, காது உறுப்பு, ஆயுத தளபாடப் பாவனை, தகவல் தொழில் நுட்பம், புலனாய்வு சார்ந்தவை, மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றல் போன்றவற்றை அறியலாம்.

இந்தப் பாவமும், இதன் அதிபதியும் நன்றாக அமைந்தால் சகோதரப் பற்று பாசம் தொடர்பு ஆதரவு உதவி என்பன நன்றாக அமையும். மூன்றாம் பாவம் கெட்டிருப்பின் உடன் பிறப்பு மறு சகோதரப் பலனைப் பாதிக்கச் செய்யும். சில சந்தர்ப்பங்களில் தொல்லைகள் இருக்கவும் செய்யும். மூன்றாம் பாவம் பெண் இராசியாகி அதன் அதிபதியும் பெண் இராசியிலேயே அமைந்தால் பெண் சகோதரம் கிடைக்க பலன் பெறுவார். ஆண் இராசியானால் ஆண் சகோதரம் கிடைக்கப் பலன் அமையும். மூன்றாம் இடமும் ஐந்தாம் இடமும் அடுத்தடுத்த சகோதரர்கள் அமைவது பற்றித் தெளிவுபடுத்தும்.

நாவாம்ச நிலையில் செவ்வாய் இருக்கும் இடத்தைப் பெறுத்து உடன் பிறப்புக்கள் ஆணா, பெண்ணா என்பதையும் அறியலாம். மேடத்தில் இருந்து செவ்வாய் இருக்கும் இடம் வரை எண்ணிவரின் அந்த எண்ணிக்கையில் சகோதரம் அமையும் என்க.
செவ்வாய் நவக்கிரக இராசி சக்கரத்தின் ராகு, கேது, குரு, கிரக சம்பந்தங்களை எவ்வாறு பெற்றிருக்கிறது என்பதை அவதானித்தால் சகோதர இழப்புக்கள் பற்றி தீர்மானம் செய்யலாம். சனி, குரு கிரகங்கள் 3 ஆம் இடத்துடன் பாதிப்பில்லாமல் இருப்பின் காது உறுப்பு பாதிப்படையாது இல்லையேல் காது உறுப்புடன் கோளாறு கண்டு நோய் அதிகப்பட இடமுண்டு.

மூன்றாம் அதிபதி பலம் பெற்றுக் காணப்பட்டால் சிறு சிறு பலன்கள் அதிக அளவில் அமையும் 3 ஆம் பாவ அதிபதி சர இராசியில் அமைந்தாலும் 3 ஆம் இடம் சரராசியில் அமைந்தாலும், பயணங்கள் அதிகளவில் அமையும். சுப கிரக பார்வை இருப்பின் பயணங்கள் நல்ல இலாபமாயும் கெடுதலான பார்வை கெடுதலான நிலையில் இருப்பின் பயணங்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.

நான்காம் பாவம்:- இந்தப் பாவம் மூலம் தாயாரின் தொடர்புகள், நிலைகள், ஆதரவு, உதவிகள் நோய், பிணி, தாக்கம், என்பவை குறித்தும், காணி, பூமி, மனை கட்டட அமைவு குறித்தும், கால்நடை வளர்ப்பு வாகனம் குறித்தும் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் குறித்தும் அறியக் கூடியதாய் அமையும்.

புதன் தொடர்பால் கல்வி விருத்தியையும், சுக்கிரன் தொடர்பால் வண்ட வாகன விருத்தியையும், செவ்வாய் தொடர்பால் காணி, பூமி மனை விருத்தியையும்,
சனி தொடர்பால் தாயார் நிலை விருத்தியையும், சுக்கிரன் தொடர்பால் தாயார் நிலை விருத்தியையும், சுக்கிரன் தொடர்பால் தாயார் குறித்து பொதுவான குணாம்சங்களையும் அறியலாம்.

நான்காம் பாவ அதிபதி பாதிப்பான இடங்களில் இருந்தாலும் பாவிகள் இலக்கினத்தில் அமைந்தாலும் தாயாரை இழக்க வேண்டிய நிலையைத் தரும். தேய்பிறைச் சந்திரன் கிரக அமைப்பிலிருந்து முன் குறிப்பிட்ட பாதிப்புடன் 4 ஆம் பாவ அதிபதி காணப்படின் தாயாரை சீக்கிரமே இழந்துவிட நேரிடலாம்.

நான்காம் பாவ சனியால் பாதிக்கப்பட்டால் நாவாம்ச நிலையிலும் நான்காம் வீடு பாதிக்கப்பட்டால் லக்கினம் இராசி மற்றும் நான்காம் இடம் பாதிக்கப்பட்டால் தாயாருக்கு ஆயுள் குறையும். இதற்கு எதிர் மறையாய் நான்காம் பாவம் சகல வழிகளிலும் பலம் பெற்றுக் காணப்பட்டால் தாயார் ஆயுள் பலம் பெற்று நீடித்து நிலை பெறும். இதை விட 6 ஆம் 8 ஆம் இடங்களின் நிலை 4 ஆம் இடத்திலிருந்து பாதிக்கப்பட்டால் தாயாருக்குப் பாதிப்பாகும்.

4ஆம் பாவம் 11 ஆம் பாவம் பலமாக இருப்பின் காணி, பூமி மனை அமையவும், 7 ஆம் பாவம் பலமாக இருப்பின் கணவன் மனைவி மூலமாக இவை அமையவும், இவை பாதிப்பான நிலையில் அமையப் பெற்றால் சொத்து இழப்பையும் தூரதேச வாகனத்தையும் தரும். கேந்திரங்களில் கிரக வலிமையும், சுக்கிரன் வலுவான நிலையையும் காணி பூமி மனை அமைவு பற்றி தெளிவு தரும்.

வாகனம் அமைவதற்கு சுக்கிரன் கிரகம், 4ஆம் பாவம், 4ஆம் பாவ அதிபதி, பெற்றுள்ள பலமான வலுவான அமைப்பு காணப்பட வேண்டும். நான்காம் இடம் சுபமான பார்வை பெற்றாலும், வாகனம் அமையும், நாவாம்ச நிலையிலும் 4 ஆம் பாவம் பலம் பெற்றால் வாகனம் சேரும் இதை விட 9 ஆம் 11 ஆம் பாவ அதிபதிகள் வலிமையும் வாகன யோகமும் தரும்.

இதை விட நான்காம் பாவம் பலமாக இருந்து சுக்கிரன் கிரகம் பலம் பெற்று காணப்படின் நல்ல வளமான வசதியான வாழ்வு நிலை உண்டாகும். மேலும் 9 ஆம் பாவமும் 2ஆம் பாவமும் பலம் பெற்றிருப்பினும் ராஜயோகமான வாழ்வைக் கொடுக்கும்.

உயர்கல்வி வாய்ப்புக்களுக்கு நான்காம் பாவம், இரண்டாம் பாவம் நல்ல நிலையில் காணப்பட வேண்டும். இத்துடன் குரு புதன் கிரகங்களது பலமும் வேண்டும். இவை பாதிப்புப் பெற்றால் கல்வி உயர்நிலை பட்டப்படிப்பு பாதிக்கக் கூடும்.

(தொடரும்)


சோதிட தகவல்

வைகாசி விசாகம் பூர்ணிமை

விசாகம் ஞான நட்சத்திரம் முருகன் விசாகத்தில் அவதரித்தார். ஆதலால் “விசாகப் பெருமாள்” என்று முருகனை அழைப்பார். நம்மாழ்வார் விசாகத்தில் பிறந்தார். வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரத்தில் வரும் இதனால் அந்த மாதம் வைகாசம் எனவும் வைகாசி எனவும் பெயர் பெற்றுள்ளது.

வைகாசிப் பௌர்ணமியை மணிமேகலைக் காப்பியம் “மதி நாண் முற்றிய மங்களத் திருநாள்” என்று போற்றுகிறது.

புத்தர் பெருமான் பிறந்தது வைகாசிப் பௌர்ணமி.
ஞானம் பெற்றது வைகாசிப் பௌர்ணமி.
பரி நிர்வாணம் அடைந்ததும் வைகாசிப் பௌர்ணமி.


 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here