வலிப்பு நோயா? பயப்பட வேண்டாம்!

ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

கால், கை வலிப்பைத் தான் நாம் தமிழில் காக்கா வலிப்பு என்று சொல்கிறோம். நமது மூளை ஒரு மின்னணு உறுப்பாகும். இது மின்னணு ஜெனரேட்டர் எனவும் கூறலாம். இதில் உற்பத்தியாகும் குறைந்த அளவு மின்சக்தி தான் நம்மை இயக்க வைக்கிறது. இது மட்டுமல்லாமல் நாம் பார்க்க, ருசிக்க, கேட்க, உணர, இரசிக்க என அனைத்து செயல்களுக்கும் இதில் உற்பத்தியாகும் மின் சக்திதான் காரணமாகும். ஏன்? நம்மை நாம் உணர்வதற்கே இந்த மின் சக்திதான் காரணமாகும்.

ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோய்களில் பல வகைகள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இந்த நோயினால் பாதிப்படைவார்கள். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது.

பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு ரீதியான நோய்கள், மூளையில் ஏற்படும் மெனின்ஜைட்டீஸ் எனப்படும். தொற்று காரணமாகவும் வலிப்பு நோய் உண்டாகிறது. வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கு சாலை விபத்துகளால் ஏற்படும் மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் இரத்த ஓட்ட குறைபாடு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் உண்டாகிறது.

வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய்க்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வதினால் 70 முதல் 80 சதவீத வலிப்பு நோய்கள் முழுமையாக குணமடையும். மேலும் 20 முதல் 30 சதவீத வலிப்பு நோய்களை அறுவை சிகிச்சையின் மூலமாகவும் குணப்படுத்தலாம். வலிப்பு நோய்க்கான காரணங்களை சி.டி.ஸ்கான், எம்.ஆர்.ஐ.ஸ்கான் மூலம் கண்டறிகிறோம். அது மட்டுமல்லாது பெட் ஸ்கான், ஸ்பெக்ட் ஸ்கான், வீடியோ போன்ற அதி நவீன சாதனங்களினாலும் துல்லியமாக நோய்க்கான காரணங்களையும் கண்டறியலாம்.

பேய், பிசாசுகளினால் வலிப்பு நோய் வருவதில்லை. ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் கத்தி, சாவி, இதர இரும்பு பொருட்களைக் கொடுப்பதினால் அது குறையாது. மாறாக இதனால் வலிப்பு ஏற்பட்டவருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் இதுபோன்ற பொருட்களை வலிப்பு ஏற்படும்போது நோயாளியின் கையில் திணிக்கக்கூடாது.

ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அவரின் மேலாடைகளைத் தளர்த்திவிட்டு அவரை ஒருபுறமாக திருப்பி படுக்க வைக்கவேண்டும். பொதுவாக எந்தவித வலிப்பு நோயும் ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும். மேலும் வலிப்பு ஏற்பட்டவரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

வலிப்பு நோய் ஒரு மனநோய் அல்ல. முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக இதை முழுமையாக குணப்படுத்தி, வலிப்பு நோய் உள்ளவர்களும் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். மேலும் அவர்கள் திருமணம் புரிந்து கொண்டு இயல்பான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கு மரபணுக்கள் ஒரு காரணமாக இருந்தபோதிலும் பொதுவாக 95 சதவீதம் இது ஒரு பரம்பரை நோய் அல்ல. மேலும் வலிப்பு நோயினால் பாதிப்படைந்த பெண்கள் திருமணம் புரிவதில் எந்த தடையுமில்லை. பேறுகாலத்தின்போது மருத்துவரை அணுகி அதற்குண்டான ஆலோசனைகளையும் தற்காப்பு முறைகளையும் பின்பற்றினால் 95 சதவீதம் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here