த.தே.கூட்டமைப்பு- ரணில் சந்திப்பு; ஆதரவு ரணிலுக்கு… சம்பந்தன் எழுதப் போகும் கடிதம்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று அலரி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது. ஐ.தே.கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறுமென தமிழ்பக்கம் காலையிலேயே குறிப்பிட்டிருந்தது.

இதன்படியே இன்றைய சந்திப்பும் இடம்பெற்றது.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது. இதில், தற்போதைய அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பு எப்படியான முடிவை எடுக்கலாமென ஆராயப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயக விரோத ஆட்சியை ஆதரிக்க முடியாதென கூட்டத்தின் ஆரம்பத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடியில் எப்படியான முடிவை எடுக்கலாமென கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கருத்து கேட்டார். மஹிந்த ராஜபக்சவை எதிர்க்க வேண்டுமென சிலர் கருத்து தெரிவித்தனர். கிட்டத்தட்ட அரைவாசி உறுப்பினர்கள் நடுநிலைமை வகிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

தென்னிலங்கை அரசியல் சர்ச்சைக்குள் நாங்கள் மூக்கை நுழைக்க தேவையில்லையென அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நிபந்தனையின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கலாமென சிலர் கருத்து தெரிவிக்க, மாவை சேனாதிராசா அதை வெகுவாக ஆமோதித்தார்.

இதன்பின்னர், ஒவ்வொரு எம்.பியின் அப்பிராயங்களையும் கூறுமாறு கேட்டார் சம்பந்தன்.

இதன்பின்னர், சில நிபந்தனைகளின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கலாமென முடிவாகியது. அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் உள்ளிட்ட சில விடயங்களில் ரணில் விக்கிரமசிங்க சில உறுதிமொழிகளை வழங்கினால், ஐதேகவை ஆதரிப்பதென முடிவானது.

இதன் பின்னரே, அலரி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கிடையிலான சந்திப்பு ஆரம்பித்தது. இந்த சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஐதேக ஏற்றுக்கொண்டால் ஆதரவளிப்பதென முடிவெடுத்துள்ளோம் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அதனை ரணில் விக்கிரமசிங்க தலையசைத்து ஏற்றுக்கொண்டார்.

எனினும், குறிப்பிட்ட நிபந்தனைகள் குறித்து எதுவும் இன்று கலந்துரையாடப்படவில்லை. நிபந்தனைகள் எவையென கூட்டமைப்பு தரப்பிலும் குறிப்பிடப்படவில்லை. அதை எப்படி உத்தரவாதப்படுத்துவோம் என ஐதேக தரப்பிலும் சொல்லப்படவில்லை.

இந்த சந்திப்பில், ஒரேயொரு தீர்மானம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரா.சம்பந்தன் அவசர கடிதமொன்றை ஜனாதிபதிக்கு எழுதுவதென்றும், அந்த கடிதத்தில்- நாடாளுமன்றத்திற்குள் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி, ஒக்ரோபர் 26ம் திகதிக்கு- நாடாளுமன்றதை ஜனாதிபதி கலைத்த தினம்- முந்தைய நிலைமையை நாடாளுமன்றத்திற்குள் ஏற்படுத்துமாறு (ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை அமைப்பது) வலியுறுத்துவதென்றும் முடிவானது.

இதேவேளை, அலரி மாளிகையில் நடந்த சந்திப்பில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் கலந்து கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here