இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

இன்றைய நாடாளுமன்ற அமர்விற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு முறை கலந்துரையாடல் நடத்தவுள்ளது.

காலை 10.30 மணிக்கு முதலாவது கலந்துரையாடல் நடக்கிறது. பின்னர் 11.30 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், இரண்டாவது கலந்துரையாடல் நடக்கிறது.

நேற்று இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்திற்கு முன்னதாக,ஜனாதிபதியுடன் சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்கள் சந்திப்பை மேற்கொண்டனர். அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இரா.சம்பந்தன் எம்.பிக்களிற்கு தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தாலும், பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். முன்னதாக கடந்த வாரம் ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் நடத்திய கலநதுரையாடலிலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. அப்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தவிர்ந்த ஏனைய கட்சிகள்- தமிழ் தேசிய கூட்டமைப்பும்- ரணில் தவிர்ந்த, இன்னொரு ஐதேக தலைவரை பிரதமராக்க சம்மதம் தெரிவித்திருந்தார்கள். இதனை நேற்றும் ஜனாதிபதி நினைவூட்டியிருந்தார்.

14ம் திகதிய நம்பிக்கையில்லா பிரேரணையில் ஜனாதிபதியின் தீர்மானத்தையும் தவறானதென குறிப்பிட்டிருந்தார்கள். அந்த பகுதியை நீக்கி, இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதன்படி இன்று, ஜேவிபி இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கிறது. ஒவ்வொரு உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு, குரல் வழி வாக்கெடுப்பு இடம்பெறும்.

இன்றையதினம் ஆளுந்தரப்பின் எம்.பிக்கள் குழப்பத்தில் ஈடுபடமாட்டார்கள் என்ற உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கியிருக்கிறார். அதனால், இன்று நாடாளுமன்றம் கலவர பூமியாக வாய்ப்பில்லையென தெரிகிறது.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தாலும், ரணில் அல்லாத இன்னொரு பிரதமரை ஐ.தே.க பிரேரிக்காத வரையில், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாதென்றுதான தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here