புலிகளின் பணம் ஐ.தே.க.விடம் தற்போதும் உள்ளது: உதய கம்மன்பில!

சர்வதேசத்தில் இயங்கும் புலிகளின் பணம் ஐ.தே.க.விடம் தற்போதும் இருக்கிறது. அதனை பற்றி அஞ்சாத ஐ.தே.க. இன்று தேர்தலுக்கு அஞ்சுகின்றது என, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, நாட்டில் தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, மேலும் கூறிய அவர்,

“சர்வதேசத்தில் இயங்கும் புலிகளின் பணம் ஐ.தே.க.விடம் தற்போதும் இருக்கிறது. அதனை பற்றி அஞ்சாத ஐ.தே.க. இன்று தேர்தலுக்கு அஞ்சுகின்றனர். அதற்காகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறுகின்றனர். தைரியம் இருந்தால் தேர்தலை எதிர்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு ஜனநாயக செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை ஏன் என எமக்குத் தெரியவில்லை.

புதிய பிரதமரரை ஜனாதிபதி நியமித்தமை சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால் அதனை சபாநாயகர் எதிர்க்கின்றார். இதனால் நாம் இரு உயிர்களையும் இழந்துவிட்டோம். சபாநாயகர் பக்கச்சார்பின்றி செயற்பட்டிருந்தால் நாட்டில் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது“ எனத் தெரிவித்துள்ளார்.

 

.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here