சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி நியமனத்தில் அரசியல் தலையீடு?

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் நடக்கும் இழுபறி குறித்து நேற்று தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியவரா, புதிதாக நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த வைத்திய அத்தியட்சகரா கடமையில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய வைத்திய அத்தியட்சகரின் கடமைகளை பொறுப்பேற்பதில் அரசியல் தலையீடுகள் தடையாக இருப்பதாக, வடமாகாண அரச மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் அதிகார பலத்தை கொண்டு, கதிரையை விட்டு நகர மறுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய அரசால் வழங்கப்பட்ட புதிய வைத்திய அதிகாரியின் நியமனத்தை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் ஆலோசனையை மீறி இடை நிறுத்திய, ஆளுனரின் செயலையும் அந்த அறிக்கை கண்டித்துள்ளது.

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு-

அகில இலங்கை வைத்திய சேவையானது ஒரு நாடாளாவிய சேவையாகும். அதன் நியமனம், இடமாற்றம் என்பன மத்திய அரசினால் கல்வித்தகமை, சேவை மூப்பு, என்பனவற்றின் அடிப்படையிலேயே இடம் பெறும். அதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்க முடியாது. எனினும் வட மாகாணத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

சாவகச்சேரி தள  வைத்தியசாலைக்கு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த வைத்திய அத்தியட்சகரை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர், மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் ஆலோசனையையும் மீறி ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவன், கொழும்பு அரசு நிலையானது இல்லை என காரணம் குறிப்பிட்டு முன்னாள் அரசின் முகவர்களை திருப்பப்படுத்த பொருத்தமற்ற முறையில்  தலையீடு செய்து நிறுத்தி உள்ளார்.

இதனை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இது தொடர்பில் எமது சங்கம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் அறிவிக்க உள்ளது. மேலும் மிக  விரைவில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றையும் நடாத்தவுள்ளது.

அதி மேதகு ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அரசாங்கம் நிலையானது இல்லை என குறிப்பிட ஆளுநரின் செயலாளருக்கு அதிகாரம் உள்ளதா எனவும் அரச ஊழியர்கள் அரசியல் சார்ந்த அறிக்கைகளை எவ்வாறு இட முடியும் எனவும் ஜனாதிபதியிடம் எமது சங்கம் தாய்ச் சங்கமூடாக நாம் வினவ உள்ளது.

அரச நிறுவனங்களில் பொருத்தமான தலைவர்கள் இல்லாத பட்சத்தில் சிரேஷ்ட அலுவலர் ஒருவரை தழுவல் கடமைக்காக தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கபடும் வரை நியமிப்பது நடைமுறையாகும். எனினும் தகுதிவாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் அந்த இடத்தை அவருக்கு வழங்குவதே நாணயமான நடை முறையாகும். எனினும் சாவகச்சேரி தள  வைத்தியசாலை வைத்தியர் பசுபதி அச்சுதன் அவ்வாறு செய்யாமல் அரசியல் பலத்தை கொண்டு கதிரையை விட்டு நகர மறுத்தல் கண்டிக்கதக்க விடயமாகும். அதற்காக  தன்னிடம்  உள்ள அரசியல் பலத்தை ஆளுநரின் செயலாளரூடாக பிரயோகிப்பது அரச சேவையில் அரசியல் தலையீடாகவே நாம் கருதுகின்றோம். அவருக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாகாண, மற்றும் யாழ் சுகாதார சேவைப் பணிப்பாளர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
வட மாகாணம்

புதிய வைத்திய அத்தியட்சகரின் கடமையை தற்காலிகமாக இடைநிறுத்திய ஆளுனரின் செயலாளரின் கடிதம்
மத்திய சுகாதார அமைச்சால் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர்களின் விபரம்
புதிய வைத்திய அத்தியட்சகருக்கு யாழ் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வழங்கப்பட்ட கடிதம்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here