வெறும் 68 எம்.பிக்களே ஆதரவு: நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவின் பின்னணி வெளியானது!

நேற்று (09) நள்ளிரவு திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அதிரடி முடிவை எடுக்க வைத்த பின்னணி காரணம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தேசிய புலனாய்வுப்பிரிவு வழங்கிய இரகசிய அறிக்கையொன்றால் கதிகலங்கியே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மைத்திரி, மஹிந்த தரப்பினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதென்பது தெரிய வந்ததால், நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்தார்கள் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், பல சம்பவங்களையும் குறிப்பிட்டு, அதன் பின்னணி முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

“நாடாளுமன்ற அமர்வை கூட்டி, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது 14ம் திகதியாகவும் இருக்கலாம். அதற்கு முன்னதாகவும் இருக்கலாம்.

சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் வாக்கெடுப்பை புறக்கணித்து மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் இன்று (10) காலை சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகவிருக்கின்றனர்” என்று புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் இருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இதற்கான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர் அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் வேலைகளும் துரிதமாக நடந்து வருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணியொருவரும் இதில் முக்கிய பங்காற்றுகிறார்“ என்றும் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு நாட்களின் முன்னர் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர், பிரதிநிதி ஒருவர் மூலம் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை பசில் ராஜபக்சவுடன் நடத்தியிருந்தார். ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு மஹிந்த அணியின் ஆதரவை அவர் கோரினார். இந்த தகவலை பசில் ராஜபக்ச உடனே, மைத்திரியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் ஆதரவும் மைத்திரி- மஹிந்த அணியிடம் இருக்கவில்லை. மற்ற கட்சிகளிடம் இருந்து ஆட்களை நினைத்தது மாதிரி உருவியெடுக்க முடியவில்லை. அதைவிட பெரிய பிரச்சனை- சு.கவின் அதிருப்தியாளர்கள் வடிவில் வந்தது. துமிந்த திசாநாயக்க அணியை இறுதிவரை ஜனாதிபதியால் வழிக்கு கொண்டுவர முடியவில்லை. ஜனாதிபதியின் நிர்பந்தத்தால் அமைச்சு பதவிகளை ஏற்றிருந்த போதும், அவர்கள் மஹிந்தவை ஆதரிக்கவில்லை.

துமிந்த அணியின் ஆதரவின்மையே, மைத்திரி நாடாளுமன்றத்தை கூட்டுவதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் இரவு துமிந்த திசாநாயக்க வீட்டில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ச, பஷில் ராஜபக்ச உட்பட சுமார் இருபது வரையான முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். எனினும், துமிந்த அணியை சமரசம் செய்ய முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்தார். இந்த சந்திப்பில், தேசிய புலனாய்வுச்சேவையால் வழங்கப்பட்ட அறிக்கையின் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையின்போது தமக்கு 68 உறுப்பினர்களின் ஆதரவே நிச்சயமானதென்பதை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்பின்னர் மைத்திரி, மஹிந்த, பஷில் தரப்பின் ஆலோசனையின் பின்னரே, நாடாளுமன்றம் கலைக்கப்படும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது“ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here