இலங்கை அரசியல் மாற்றம்: நாடாளுமன்றம் கலைப்பு!

இலங்கை அரசியலில் இரவோடு இரவாக அரங்கேறிய பிரதமர் பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமிப்பு ஆகிய விடயங்களை தொடர்ந்து, அரசியல் நிலமை நாளுக்கு நாள் மாற்றங்களையே கண்டுவந்தது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன பிரதமராக நியமித்தார்.

அதனை தொடர்ந்து, குறித்த செயலானது ஜனநாயகத்திற்கு முறணானது என்றும் அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாறு அதிரடியாக ஒரு பிரதமர் பதவியில் இருக்கும் போது இன்னொரு பிரதமரை நியமிப்பது தவறு என்றும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், தன்னை யாரும் பதவியிலிருந்து நீக்க முடியாது என்றும் தொடர்ந்தும் தானே பிரதமர் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறிவந்தார்.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதையடுத்து, இலங்கையில் இரண்டு பிரதமரா என்னும் சர்ச்சை மேலெழுந்திருந்தது.

எனவே, நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவந்தனர்.

ஜனாதிபதியின் செயலை எதிர்த்து பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அணி பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கான கூட்டணி சேர்க்கும் படலத்தை வெளிப்படையாக முன்னெடுத்திருந்தது.

இதன் பிரகாரம், த.தே.கூ.பிலிருந்தும் ஒரு உறுப்பினர் கட்சி தாவியமை பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.

இந்நிலையில், நாடாளுமன்றம் நவம்பர் 7 ஆம் திகதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு நவம்பர் 14 இல் நாடாளுமன்றம் கூடவிருந்தநிலையில், இன்று நாடாளுமன்றத்தை கலைத்து வர்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இதனால் இன்றிரவு 12 மணியளவில் வர்த்தமானி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனவே நாடாளுமன்ற கலைப்பை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரியில்  தேர்தல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனாதிபதியின் இச்செயலை எதிர்த்து உச்சநீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக, ரணில் விக்ரமசிங்க கூறிவருகிறமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here