தொடர் தோல்விகளிற்கு முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலியா!

வேகப் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால், அடிலெய்டில் இன்று நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்த அவுஸ்திரேலிய அணி நீண்ட இடைவெளிக்குப் பின் தென்னாபிரிக்க அணியைச் சொந்த மண்ணில் சாய்த்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், வெற்றியைச் சுமக்க வேண்டிய பொறுப்பை வேகப் பந்துவீச்சாளர்கள் ஏற்றுக்கொண்டனர். மிட்ஷெல் ஸ்ரோர்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென்னாபிரிக்க தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

தென்னாபிரிக்க வீரர்களுக்கு தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி மெருகேறி வருகிறது. ஆட்ட நாயகன் விருதை அவுஸ்திரேலிய கப்டன் ஆரோன் பிஞ்ச் பெற்றார்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க கப்டன் டூப்ளசிஸ் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 48.3 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அவுஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் இல்லாத வெற்றிடம் ஒவ்வொரு போட்டியிலும் தெளிவாகத் தெரிந்தது. இந்தப் போட்டியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை.

தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் பிரிட்டோரியஸ், ரபாடா, இங்கிடி, ஸ்டெயின் வேகத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். 100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

நடுவரிசையில் கிறிஸ் லின் (44), கேரே (47) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். 166 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்த அவுஸ்திரேலிய அணி அடுத்த 65 ரன்களை சேர்ப்பதற்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் விரைவாக இழந்தது. கப்டன் ஆரோன் பிஞ்ச் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 48.3 ஓவர்களில் 231 ரன்களுக்கு அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாபிரிக்கத் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் மட்டுமே சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. தென்னாபிரிக்க அணியில் கப்டன் டூப்ளசிஸ் (47), மில்லர் (51)ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரு நேரத்தில் தென்னாபிரிக்க அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு டூப்ளசிஸ், மில்லர் ஆகியோர் நிலைத்து ஆடி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால், டூப்ளசிஸை 47 ரன்களில் கம்மின்ஸ் வீழ்த்திய பின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்து வந்த கடைசி வரிசை வீரர்களை அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் எளிதாக வீழ்த்தினார்கள். அணியின் வெற்றிக்குப் போராடிய மில்லர் 51 ரன்களில் ஸ்டோய்னிஸ் வேகத்தில் வெளியேறினார்.

இங்கிடி 19 ரன்களிலும், இம்ரான் தாஹிர் 11 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவுஸ்திரேலியத் தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here