நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படுமா?: சர்ச்சையை ஏற்படுத்தும் ஹர்ச டி சில்வாவின் பதிவு!

இலங்கையின் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கலைக்கப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறு செய்வாரேயானால், இலங்கையில் “ஜனநாயகம்” என்பது இல்லாமல் போய்விடும் என்னும் கருத்தையும் அவர் பதிவேற்றியுள்ளார்.

எனினும் ஜனாதிபதி அவ்வாறு செய்யமாட்டார் என்று தான் நம்புவதாகவும், 19 ஆவது திருத்தத்தின் படி, 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதற்குத் தேவை என்றும், அரசியலமைப்பை எடுகோள் காட்டி அவர் குறித்த பதிவை இட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்புக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைக்கப்படலாம் என்ற கேள்விக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

எனினும் மஹிந்த தரப்பிற்கு போதிய நாடாளுமன்றபலம் இல்லாத காரணத்தினால், நாடாளுமன்றையும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தினைப் பெற்றுவிடலாம் என்று எண்ணிய ஜனாதிபதி மற்றும் மகிந்த கூட்டணிக்கு அது கைகூடாத காரணத்தினால், நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படலாம் என்ற ஊகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here