தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் செவ்வாய்க் குற்றமுள்ள பெண்ணும்!: எப்படியிருக்கும் மாகாணசபை தேர்தல் களம்? 03

©தமிழ்பக்கம்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார்? எப்படியிருக்கும் வடக்கு தேர்தல் களம்? கட்சிகளின் நிலைமை எப்படியிருக்கிறது? எப்படியான பெறுபேற்றை பெறுவார்கள்?- இப்படியாக தலைவெடிக்கும் ஆயிரம் கேள்விகளுடன் காத்திருக்கும் வாக்காள பெருமக்களான உங்களிற்காகவே இந்த தொடரை ஆரம்பித்துள்ளோம்.

இனப்பிரச்சனை தீர்விற்கு மாகாணசபை முறையை தீர்வல்ல, அதனால் நாங்கள் மாகாணசபை தேர்தலை புறக்கணிக்கிறோம் என கடந்த மாகாணசபை தேர்தலை புறக்கணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை என்ன செய்யும்? தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை மாகாணசபை தேர்தலில் களமிறங்குமா?

இம்முறை மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிச்சயம் களமிறங்கும். அதற்கான முன்னாயத்தங்களில் கட்சி இப்பொழுதே ஈடுபட தொடங்கி விட்டது.

முன்னர் மாகாணசபை தேர்தலை புறக்கணித்தது, இப்பொழுது எப்படி போட்டியிடலாம் என்ற விமர்சனத்தை எதிர்தரப்பிடமிருந்து முன்னணி எதிர்கொள்ள வேண்டி வரலாம். ஆனால், அது விமர்சனத்திற்குரியதல்ல என்பதே நடைமுறை அரசியல் யதார்த்தம்.

ஒரு அரசியல் இயக்கமாக பரிமாணமடையும் அமைப்புக்கள் இப்படியான பல மாற்றத்திற்கு உட்படுவது இயற்கை நியதி. ஒரு சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் திருமணம் அனுமதிக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட முதலாவது பெரிய பிளவான உமாமகேஸ்வரன் பிரிவு கூட அதனால் ஏற்பட்டதுதான். ஆனால் அடுத்தடுத்த சில வருடங்களிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் திருமணம் அனுமதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிராளிகள் இன்றும் வன்மத்துடன் அந்த சம்பவத்தை பகிடி விடுவது வழக்கம். அது வன்மத்தால் மட்டுமே உருவாக பகிடி. மானுடவியல் இயக்கத்தை புரிந்தவர்கள், அதை மீறி செயற்பட முடியாதென்பதை அறிவார்கள்.

கிழக்கு மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்தது. பின்னர், வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது.

ஜனநாயக தேர்தல் அரசியல் இயக்கங்களிற்கும் சில அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றை நிராகரித்து அமைப்புக்கள் இயங்க முடியாது. கூடவே, அரசியல் இயக்கமாக பரிணமிக்கும்போதும், சில மாறுதல்களை உட்புகுத்துவது இயல்பே. அப்படி, உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யாமல் பெரிய இலக்குகளை அடைய முடியாதென்ற யதார்த்தத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த எட்டு வருடங்களில் கற்றுக்கொண்டதாக தெரிகிறது.

ஆகவே நிச்சயம் அவர்கள் மாகாணசபை தேர்தலில் களமிறங்குவார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனித்து போட்டியிடுமா? கூட்டாக போட்டியிடுமா? கூட்டாக என்றால் யாருடன்?

உண்மையில் இந்த கேள்விகளிற்கு யாருக்குமே பதில் தெரியாது. யாருக்குமென்றால்… தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதில் அடக்கம்!

வரும் மாகாணசபை தேர்தலில் அதிகம் சிக்கலில் சிக்கியுள்ள கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். முன்னணிக்கு இம்முறை ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வித்தியாசமானவை.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறான கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் இன்னும் அது சரியாக அமையவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் கூட்டணி பேச்சுக்கள் எல்லாம் முடிந்து, “இந்தா கூட்டணி அமைகிறது“ என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், ஆனந்தசங்கரியுடன் கைகோர்த்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன். எல்லாம் கூடி வந்த நேரத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் காலைவாரிய கோபம் முன்னணிக்கு இன்னும் இருக்கிறது. பக்கத்து நாடான “பெரியண்ணா“தான் அந்த கூட்டணியை குழப்பியது என்ற அப்பிராயம் பரவலாக அரசியல் வட்டாரங்களில் உள்ளது. முன்னணியிடமும் அதேவிதமான அபிப்பிராயம் உள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் பல கூட்டணி முயற்சிகள் நடந்தாலும் எதுவும் சாத்தியமடையவில்லை. செவ்வாய்க்குற்றமுள்ள பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை போல, முன்னணியுடன் எந்த கட்சியையும் பொருத்த முடியாமல் போனது. எல்லாக்கட்சிகளிலும் ஏதாவதொரு “நொட்டை“ சொல்வதை முன்னணி வாடிக்கையாக வைத்திருப்பதால், அவர்களால், அவர்களை தவிர வேறு யாருடனாவது கூட்டு வைக்கலாமா என்பது தெரியவில்லை.

ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் முன்னணி தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகள், முன்னரைப் போல கூட்டணிகளிற்காக காத்திருக்க வேண்டியதில்லையென்ற உற்சாகத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். அதனால்தான் ஏனைய கட்சிகளின் கூட்டணியை தவிர்க்கவும் கூடும்.

ஆனால், இதுவரை முன்னணியின் பிரதான வாயில் விக்னேஸ்வரனிற்காகவே திறந்து வைக்கப்பட்ருந்தது. விக்னேஸ்வரன் தமது கூட்டணியை தலைமையேற்கட்டும் என முன்னணி பகிரங்கமாக கூறியது. ஆனால் விக்னேஸ்வரன் தனி அணியை அறிவித்து விட்டார். விக்னேஸ்வரனின் அணியுடன் இணைந்து பணியாற்ற தயாரில்லையென கஜேந்திரனும் அறிக்கை விட்டுவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரனை சந்தித்து, தமது கூட்டணிக்கு தலைமையேற்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அப்பொழுது அவர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற கட்சிகள் அந்த கூட்டணிக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்திருந்தார்கள். அவர்களிடம் விக்னேஸ்வரன் தெளிவான பதிலெதுவும் கூறியிருக்கவில்லை. “யோசிக்கலாம்“ என்ற அளவில் கூறியிருந்தார்.

இப்பொழுது விக்னேஸ்வரன் தனி அணியை அறிவித்து விட்டார். முன்னணி, விக்னேஸ்வரன் விவகாரத்தில் இனியிருக்கும் ஒரேயொரு ஒப்ஷன்- தேர்தல் சமயத்திலாவது கூட்டணி வைப்பார்களா என்பதே.

தேர்தலிற்கு இன்னும் காலமுள்ளது. ஆனால், முன்னணியும், விக்னேஸ்வரனும் இணைந்தால் மாத்திரமே வலுவான கூட்டணியை உருவாக்கலாம், இல்லாவிட்டால் வாக்குகள் சிதறி அழுத்தக்குழுக்களாக மட்டுமே மாகாணசபைக்குள் இடம்பிடிக்கலாமென்பது இரண்டு தரப்பிற்கும் தெரியும்.

எனினும், முன்னணியில் “தூய்மைவாத நிபந்தனைகளை“ மீறி விக்னேஸ்வரன் முன்னணியுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு போக வாய்ப்புள்ளதா என்றும் தெரியவில்லை. ஏனெனில், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற கட்சிகளை தமது கூட்டணிக்குள் சேர்க்ககூடாதென முன்னணி நிபந்தனை விதித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக புளொட் எந்த சந்தர்ப்பத்திலும் சொல்லவுமில்லை. முன்னணிக்கோ, முதல்வருக்கோ இரகசிய வாக்குறுதி கொடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால் புளொட்டும் வரலாமென்ற சொந்த ஊகத்தின் அடிப்படையில் நிபந்தனைகளை போட்டுள்ளது முன்னணி.

முன்னணியா, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட்டா என்ற கேள்வி வந்தால், விக்னேஸ்வரனின் முதலாவது ஒப்ஷன்- அனைவரும் என்றுதான் இருக்கும். இரண்டாவது ஒப்ஷன்- ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பதாகத்தான் இருக்கும். ஏனெனில், முதலமைச்சரிற்கு முன்னணியை விட, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மீது ஒரு “மென்பார்வை“ இருப்பதாக தெரிகிறது. அதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை விட, புளொட் மீது அதிக மென்பார்வையுள்ளதாக தெரிகிறது.

விக்னேஸ்வரன் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் ஈ.பி.ஆர்.எல்.எவ், முன்னணி தொடர்பான எச்சரிக்கை, சந்தேகம் கலந்த அபிப்பிராயங்களை வெளியிட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. தமிழ் மக்கள் பேரவை தேர்தலில் களமிறங்க வேண்டுமென்ற அப்பிராயம் எழுந்தபோது, அதில் அங்கம் வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றவற்றை பேரவைக்குள் பலவீனமடைய செய்யும் காரியங்களைத்தான் விக்னேஸ்வரன் செய்தார். அந்த கோபத்தில்தான் தமிழ் தேசிய பேரவையென்ற பெயரில் முன்னணி தேர்தலில் களமிறங்கியது.

அப்படி பார்த்தால், முன்னணியின் நிபந்தனைக்காக புளொட்டை அவர் தூக்கியெறிவாரா என்பது சந்தேகமே. பரந்துபட்ட கூட்டணியொன்றே வெற்றிக்கான வழியென ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐயும் அதில் இணைத்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த கூட்டணிக்குள் இருக்க வாய்ப்பில்லை. இன்னும் நான்கைந்து வருடத்தின் பின், “அதீத அரசியல் தூய்மைவாதத்தின்“ சாத்தியமற்ற தன்மையை உணர்ந்து முன்னணி அவற்றை கைவிடக்கூடும். வரலாற்றின் வழியில் அரசியல் இயக்கமொன்று கற்றுக்கொண்ட பாடமாக அதை அப்போது கொள்ளலாம். சில வேளைகளில் அந்த முதிர்ச்சி இம்முறை ஏற்பட்டு பரந்துபட்ட கூட்டணிக்கு வாய்ப்புள்ளதோ தெரியவில்லை. அதை தெளிவாக கூற முடியாது.

விக்னேஸ்வரன் அணியுடன் கூட்டு வைக்காத பட்சத்தில் சிறியளவிலான கூட்டணியொன்றை உருவாக்கும் வாய்ப்புள்ளது. சில பொது அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் முன்னணியின் கூட்டுக்குள் வரலாம்.

மற்ற எல்லா கட்சிகளையும் விட முன்னணிக்குத்தான் இந்த தேர்தல் சிக்கலை கொடுத்துள்ளது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதற்கு காரணமுள்ளது.

விக்னேஸ்வரனை தவிர்த்த கூட்டணியொன்றிற்கு முன்னணி போகுமெனில், அதன் முதலமைச்சர் வேட்பாளராக அனேகமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. முன்னணிக்குள் உள்ள அதிகபட்ச கவர்ச்சிகரமான வேட்பாளர் அவர்தான். அவரை விட பொறுத்தமான பொதுவேட்பாளர் கிடைப்பாரா என்பதும் சந்தேகம்தான். அதனால் கஜேந்திரகுமார் களமிறங்கவே அதிகமான வாய்ப்புள்ளது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தி வாக்குகளில் ஒரு பகுதி முன்னணிக்கும் சென்று சேர்ந்தது. அந்த வாக்குகள் முன்னணியிடமே தங்கியிருக்குமா, திரும்பவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் திரும்பி விடுமா என்பதிலேயே முன்னணியின் வெற்றி தங்கியுள்ளது. அந்த வாக்குகள் திரும்பவும் கூட்டமைப்பிற்கு திரும்பினால், முன்னணிக்கு பெரிய சறுக்கலாகவே முடியும்.

அதிருப்தி வாக்குகளை திருப்பியெடுக்கும் முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலேயே அதிருப்தி வாக்குகள் முழுமையாக திரும்புவதும், திரும்பாமல் விடுவதும் தங்கியுள்ளது. அந்தவகையிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது வெளிக்காரணியும் உள்ளது.

அதுசரி, முதலாவது வெளிக்காரணியை குறிப்பிடாமல் இரண்டாவது வெளிக்காரணியை மட்டும் குறிப்பிட்டுள்ளோமே என வாசகர்கள் குழப்பமடையலாம். முதலாவது வெளிக்காரணியையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடலாமா என்பதையும், மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றியையும் வெளிநாடுகள் தீர்மானிக்கும் வல்லமையுடன் இருக்கிறதென்றால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சியை வளர்ப்பதோ, வீழ்த்துவதோ இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் வல்லரசுகளிற்கு பெரிய விசயமேயில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிதீவிர நிலைப்பாடுகள் இந்த வல்லரசுகளிற்கு நிச்சயம் உவப்பாக இருக்காது. குறிப்பாக இந்தியாவிற்கு முன்னணி தொடர்பான எதிர்மறையான பார்வைதான் உள்ளது. ஒரு அழுத்தக்குழுவாக அவர்கள் வளர்வதை அனுமதிப்பார்களே தவிர, அதிகாரத்தை கைப்பற்றும் தரப்பாக வளர அனுமதிக்கமாட்டார்கள்.

அதனால் கடந்த உள்ளூராட்சி தேர்தல் சமயத்திலும் கூட்டணிகளிற்குள் புகுந்து விளையாடி, முன்னணியை தனிமைப்படுத்தினார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.  அதையும் மீறி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னணி வாக்குகளை பெற்றிருக்கிறது. இது இன்னும் கொஞ்சம் “ஹோம்வேர்க்“ செய்ய வேண்டுமென்பதை அந்த தரப்புக்களிற்கு உணர்த்தியிருக்கும். அதனால், மாகாணசபையில் முன்னணியை மேலும் “கட்டம் கட்டும்“ கூட்டணிகளை உருவாக்கவே அந்த தரப்புக்கள் முயலும்.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் சமயத்தில் யாழ் மாநகரசபையில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமையேற்பட்ட போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு சக்தியாக வளர விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் ஒத்திசைந்து செயற்பட்டன. இப்படி வெளிச்சக்திகளின் அழுத்தம் நிச்சயம் முன்னணியை எழுச்சியடைய விடாமல் தடுக்க முயற்சிக்கும்.

அது போதாதென, முன்னணியின் முடிவுகள் நிச்சயம் ஒவ்வொரு முறையும் முன்னணிக்கே சறுக்கலைத்தான் கொடுக்கிறது. சில வருடங்களின் பின்னரே முன்னணி அந்த தவறுகளை திருத்திக் கொள்கிறது. இம்முறை முன்னணி கையிலெடுத்துள்ள தூய்மைவாதமும் முன்னணிக்கு சறுக்கலை கொடுக்கும்.

மொத்தத்தில் வரும் மாகாணசபை தேர்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும் விசப்பரீட்சையாகவே அமைய வாய்ப்புண்டு.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here