ஐ.தே.க வென்றாலும் ரணில் அல்லாத பிரதமர்: மைத்திரியின் திட்டத்தை போட்டுடைத்தார் மனோ கணேசன்!

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனநாயகத்தை மதிக்கும், சிறந்த கொள்கையுடைய கட்சியான படியால் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்ப்பதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று இன்று (09) அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் ஜனாதிபதி முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஆறு பேரையும் அழைத்து தமது புதிய அரசாங்கத்திற்கு அதரவு தருமாறு கேட்டுக்கொண்டு நாடாளுன்றத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், அல்லது நடுநிலை வகிக்க வேண்டும், அல்லது ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ரணில் விக்கரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க ஒத்துழைப்பு வழங்க கூடாதென மூன்று விடயங்களை கோரிக்கையாக முன் வைத்தார்.

எனினும் அந்த மூன்று கோரிக்கையையும் நிராகரித்ததுடன் ஐக்கிய தேசிய முன்னணி பல கட்சிகளுக்கு சொந்தமானது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சகலரும் ஓடி ஓடி வாக்கு சேகரித்தோம். இதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே இது தனி ஐக்கிய தேசிய கட்சியல்ல. நீங்கள் முரண்பாடுகள் தொடர்பில் எம்மோடு ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதியிடம் நாம் கேட்டபோது, அவரிடமிருந்து பதில் எதுவும் இல்லை.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பலராலும் பாராட்டப்படுகின்றதுடன், எமது கொள்கையை கண்டு பெரும்பான்மையினத்தவர்களும் எம்மோடு இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

சிறுபான்மையின கட்சிகளை சந்தித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஐதேக வெற்றிபெற்றால் ரணில் அல்லாத பிரதமருக்கு ஆதரவளிக்குமாறு கோரியதை இரண்டு நாட்களின் முன்னர் தமிழ்பக்கம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here