தாய்லாந்து உளவு அமைப்புக்களின் மூலம் ஆயுதம் வாங்கிய புலிகள்!:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 41

பீஷ்மர்

பாதிரியார் ஜெகத் கஸ்பார் பற்றி கடந்த பாகத்தில் மேலோட்டமாக சில தகவல்களை குறிப்பிட்டிருந்தோம். அடுத்த பாகத்தில் மிகுதியென நாம் முடித்த ராசியோ என்னவோ, இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம். நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் நியூஸ் வெளியாகி எல்லோரையும் பரபரப்பாக வைத்திருந்ததால், ஈழப்போர் பற்றிய இந்த தொடருக்கு ஒரு வார ஓய்வளித்தோம். வாசகர்கள் பொருத்தருள்க.

பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஈழவிடுதலை அனுதாபியாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அறிமுகமானவர். இந்தியாவின் பல்வேறு அரசியல், வர்த்தக புள்ளிகளுடன் ஏற்பட்ட தொடர்பை ஆயுத வியாபாரிகள் வரை விஸ்தரித்திருந்தார். இந்த தொடர்பை புலிகளும் பயன்படுத்த விரும்பினர்.

தாய்லாந்தில் தங்கியிருந்த குமரன் பத்மநாதனை சந்தித்து, அவர்களின் அணியில் ஒரு ஆயுதகொள்வனவாளராக கஸ்பார் பணியை ஆரம்பித்தார். தனது தொடர்புகளின் ஊடாக ஒரு தொகை ஆயுதங்களை வாங்கலாமென கே.பிக்கு நம்பிக்கையூட்டினார். இது நடந்தது 1994ஆம் ஆண்டு.

ஒரு கிழக்கு ஐரோப்பிய ஆயுத தரகன் ஊடாக, சோவித்தில் இருந்து பிரிந்த நாடொன்றிடமிருந்து கொஞ்சம் ஆயுதங்கள் வாங்கலாமென்றார். கே.பிக்கும் ஆயுதம் தேவை. பின்னாளில் இருந்ததை போன்ற பெரிய நெட்வேர்க் இருக்கவில்லை. அதனால், கஸ்பார் மூலமாவது ஆயுதம் வரட்டுமென நினைத்தார். 5 மில்லியன் இலங்கை பணம் கஸ்பாருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு ஆயுதம் கிடைக்கவில்லை. பணத்தை வாங்கியவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என கஸ்பார் காரணம் சொன்னார். ஆனால் கே.பி அதை நம்பவில்லை. கஸ்பார் பணத்தை விளையாடிவிட்டார் என நினைத்தார். நிழலாக திரிபவனையே நம்ப முடியாத வேலை அது. காசைக் கொண்டுபோய் விட்டு, ஒருவன் ஏமாற்றிவிட்டான் என்றபடி திரும்பி வருபவரை நம்புவார்களா? கே.பி அந்த பதிலை நம்பவில்லை. அத்துடன் கஸ்பாருடனான அனைத்து தொடர்புகளையும் புலிகளின் ஆயுதக்கொள்வனவு பிரிவு துண்டித்துவிட்டது.

அதன்பின்னர் கஸ்பார் புலிகளிற்கு ஆயுதம் வாங்கவில்லை. ஆனால் வெரித்தாஸ் தமிழ் பணியின் மூலம் அவர் புலிகளின் அரசியல்துறையுடன் தொடர்பையேற்படுத்தினார். புலிகளின் ஒரு அணி கஸ்பாரை நம்பிக்கையற்ற மனிதனாக கருதி தூரவிலக்கி வைத்திருக்க, இன்னொரு அணி நம்பிக்கையானவராக கருதி தொடர்பிலிருந்தது. இது வாசகர்கள் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். புலிகள் என்றால், எல்லோரும் புலிகள்தானே, அதிலென்ன கே.பி அணி, அரசியல்துறை அணி? என நினைக்கலாம்.

அப்படியெல்லாம் அணிகள் இருந்தன என்பதுதான் உண்மை.

கே.பி அணி தவிர்ந்து, அரசியல்துறையுடன் கஸ்பாருக்கு நல்ல உறவிருந்தது. இறுதியுத்த சமயத்தில் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த பா.நடேசன் சரணடைவு தொடர்பாக கஸ்பாருடனும் பேசியிருந்தார்.

இத்துடன் கஸ்பாரின் கதையையும் முடித்து கொள்ளலாம். ஆயுத விற்பனையுலகின் ஏமாற்றுத்தனங்களை குறிப்பிட உதாரணமாக சொன்ன இரண்டு சம்பவங்களையும் முடித்துகொள்கிறோம். இனி புலிகளின் ஆயுத கொள்வனவு, கடத்தல் உலகத்திற்குள் நுழைவோம்!

புலிகளின் ஆயுதக்கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் தென்கிழக்காசிய நாடுகளை மையமாக வைத்துதான் செயற்பட்டார். பல்வேறு பெயர்களில், பல்வேறு கடவுச்சீட்டுக்களில் உலாவினார். அவர் தென்கிழக்காசிய நாடுகளை தனது செயற்பாட்டு மையமாக தேர்ந்தெடுக்க காரணம்- அங்கு அரச, பாதுகாப்புதுறைகளில் நிலவிய ஊழல் மற்றும் இந்தப்பிராந்தியத்தில் கொடிகட்டி பறந்த ஆயுத விற்பனை. இந்த நாடுகளில் பணம்தான் எல்லாம். காசிருந்தால் அரசின் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எதையும் செய்யலாம். ஆகவே எந்த சிரமமுமில்லாமல் இயங்கலாமென கே.பி நினைத்தார்.

இதற்குள் வெளியில் தெரியாத இன்னும் இரண்டு விடயங்களை சொல்ல வேண்டும். தாய்லாந்தில் கே.பி தங்கியிருந்ததற்கு பிரதான காரணம்- அங்குள்ள நான்கு முக்கிய புலனாய்வு அமைப்புக்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. அந்த புலனாய்வு அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரை கே.பி கைக்குள் வைத்திருந்தார். தேவையான சமயத்தில் அவர்களிற்கு பணத்தை வீசியெறிந்து இதை சாதித்தார்.

தாய்லாந்தில் முக்கியமான நான்கு உளவு பிரிவுகள் உள்ளன. தேசிய புலனாய்வு நிறுவனம், விசேட புலனாய்வு திணைக்களம், உள்ளக பாதுகாப்பு நடவடிக்கை பணியகம், குற்ற தடுப்பு பிரிவு என்பவையே அவை. இவற்றில் மிக முக்கியமான பதவிகளில் இருந்தவர்களை கே.பி கைக்குள் வைத்திருந்தார்.

உங்களிற்கு ஒரு பழைய சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறோம். 2007 செப்ரெம்பரில் இலங்கை புலனாய்வுத்துறையினூடாக கசிந்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள் ஒரு செய்தி வெளியிட்டிருந்தன. கே.பி தாய்லாந்தில் கைதாகினார், அமெரிக்காவின் சிஐஏ உளவு ஏஜெண்ட் அதிகாரிகள் விசாரணை செய்தார்கள் என. ஆனால் பின்னர் அதை தாய்லாந்து பொலிசார் மறுத்திருந்தனர். அப்படியொரு சம்பவமே நடக்கவில்லையென்றனர்.

உண்மையில் அப்பொழுது கே.பி தாய்லாந்தில் கைதாகியிருந்தார். சிஐஏயின் இரகசிய திட்டமொன்றின்படி அவர் தாய்லாந்தில் உளவுஅமைப்பினரால் கைதாகினார். இந்த திட்டத்தின் தகவல் பரிமாற்றம் இலங்கை உளவுஅமைப்புக்களிற்கும் கிடைத்திருக்க வேண்டும். அப்பொழுது கே.பியின் நடமாட்டங்களை அறிய இலங்கை உளவுஅமைப்புக்கள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்க ஊடாக அந்த தகவல் இலங்கைக்கு கிடைத்திருக்க வேண்டும். கே.பி தொடர்பான மாறுபட்ட தகவல் ஒன்றை தாய்லாந்து விமானநிலைய அதிகாரிகளிற்கு சிஐஏ பரிமாறி கே.பியை கைதுசெய்ய வைத்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம்போல கே.பி உளவுஅமைப்புக்களின் முக்கிய புள்ளிகளை கவனித்து வெளியில் வந்துவிட்டார். இதன் பின்னர்தான் கே.பியை தாய்லாந்தில் வைத்து ஒன்றும்செய்ய முடியாதென இலங்கை உணர்ந்துகொண்டது.

கே.பியை தாய்லாந்தை விட்டு வெளியேற வைத்ததில் சிஐஏவின் பங்கு முக்கியமானது. அந்த நாட்டு உளவுஅமைப்புக்களிற்கும், அரசுக்கும் நெருக்கடி கொடுத்து கே.பியை அந்த நாட்டைவிட்டு வெளியேற வைத்த பின்னர்தான் அவரை கைது செய்ய முடிந்தது.

தாய்லாந்தில் கே.பி ஆயுதம் கொள்வனவு செய்த உத்தி எல்லோரையும் மலைக்கவைப்பது. ஏதாவதொரு நாட்டில் ஆயுதம் வாங்க வேண்டுமெனில், தாய்லாந்தின் உளவுஅமைப்பொன்றின் சார்பில் கேள்விமனு கோரப்படும். உண்மையில் தாய்லாந்தின் உளவுஅமைப்பிற்கு இந்த ஆயுதம் வராது. உளவுஅமைப்பின் புள்ளிகள் சிலரை வைத்து கே.பி ஆடிய விளையாட்டு அது.

கள்ளச்சந்தைகளிற்கு வெளியில் ஆயுதங்களை வாங்குவதென்றால் ஏகப்பட்ட நெருக்கடிகள் இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட நாடுகள்தான் வாங்கலாம். ஆயுதம் வாங்கும் நாடு விற்கும் நாட்டின் நட்புநாட்டுக்கு எதிரானதா என்பதையும் பார்ப்பார்கள். இயக்கங்கள் இப்படியான இடங்களில் ஆயுதம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாது. இதை சமாளிக்கவே கே.பி தாய்லாந்து உளவுஅமைப்புக்களை பாவித்தார். உளவுஅமைப்புக்கள் அங்கீரிக்கப்பட்ட அரசின் அங்கத்துவமுள்ளவை. ஆகவே அவற்றிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் நாடுகளிற்கு பிரச்சனையில்லை. இந்த வழியில் கொள்வனவு செய்யப்பட்ட அனேக ஆயுதங்களே புலிகளிற்கு வந்து சேர்ந்தது.

இதைவிட இன்னொரு சம்பவமும் புலிகளிற்கு வாய்ப்பாகியது. சோவியத் யூனியன் உடைந்தபோது பிரிந்து சென்ற நாடுகளில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அந்தந்த நாடுகளிடம் சென்றது. சோவியத்தின் அனேக ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனிலேயே இருந்தன. இப்படி உக்ரேனில் ஆயுதங்கள் இருந்தன. ஆயுத தொழிற்சாலைகளும் இருந்தன. சோவியத்தின் பிரிவின் பின்னர் உக்ரேனியிலிருந்த ஆயுதத்தொழிற்சாலைகளை உக்ரேனிய இராணுவஅதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள்தான் அதன் உரிமையாளர்கள். பணத்திற்காக அவர்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட தொடங்கினார்கள். இப்படி உக்ரேனிலிருந்தும் பெருமளவு ஆயுதங்கள் புலிகளிற்கு வந்து சேர்ந்தது.

ஒருமுறை- 1996இல் முல்லைத்தீவு மீதான ஓயாத அலைகள் 1 நடவடிக்கை முடிந்ததும்- உக்ரேனிலிருந்து புலிகள் தமது அமைப்பிற்காக ஏகே துப்பாக்கிகள் தயாரித்து இறக்குமதி செய்தார்கள். black ak என்பது துப்பாக்கியின் பெயர். அந்த துப்பாக்கிகளிற்கு தொடர் இலக்கமும் இடப்படவில்லை. புலிகளிற்காகவே தயாரான ஏ.கேக்கள் அவை. அதைவிட சுவாரஸ்யம், உக்ரேனில் இராணுவ அதிகாரியொருவரிற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையை ஒரு ஐரோப்பிய ஆயுத வியாபாரியின் பெயரில் புலிகள் எடுத்து இயக்கினார்கள்.

அந்த தொழிற்சாலையிலிருந்து அவ்வவ்போது புலிகளிற்கும் ஆயுதம் வந்தது, வேறு ஆட்களிற்கும் விற்றார்கள்.

யுக்ரேனிய ஆயுத தொழிற்சாலை

உக்ரேனிலோ, வடகொரியாவிலோ ஆயுதங்கள் வாங்குவது அவ்வளவு பெரிய விசயமில்லை. அதைவிட பெரிய விசயம், ஆயுதம் ஏற்றிய கார்கோ கப்பல்களை பத்திரமாக கொண்டு வருவதும், முல்லைத்தீவில் ஆயுதங்களை இறக்குவதுமே. இதற்கு புலிகள் நிறைய உத்திகளை கையாண்டார்கள். அடுத்த பாகத்திலிருந்து அதை குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here