மட்டக்களப்பில் அடிக்கடி ஏன் தீப்பற்றுகிறது?

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் தீப்பற்றிய சமுர்த்தி திணைக்கள அலுவலகத்தை பொலிசார் சீல் வைத்துள்ளதுடன், தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.

விடுமுறை தினமான கடந்த 06ம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

முதலாவது தளத்திலுள்ள சமுர்த்தி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு, காகிதமொன்று எரிந்த நிலையில், கீழ்த்தளத்திலிருந்து காணி திணைக்கள அலுவலகத்தில் விழுந்தது. இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், விரைந்து செயற்பட்டு தீயை அணைத்தனர்.

குளிரூட்டிக்கான மின் இணைப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கே விபத்திற்கான காரணமென கூறப்பட்டாலும், இன்னும் முழுமையான விசாரணைகள் முடிவடையவில்லை. அந்த பகுதி இரசாயன பகுப்பாய்விற்கு உள்ளாக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

விடுமுறை தினமான அன்று கடும் குளிரான காலநிலை நிலவியது. அப்போது குளிரூட்டியை இயங்க செய்திருக்க வாய்ப்பிருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, சந்திவெளி சமுர்த்தி வங்கியில் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கிகளில் அதிக ஊழல் இடம்பெற்றது சந்திவெளி சமுர்த்தி வங்கியில்தான் என விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. மோசடி ஆவணங்களை அழிக்க தீவிபத்து திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் அப்போது எழுப்பப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here