கூட்டமைப்பில் மீண்டும் இணைய நாடி பிடித்த வியாழேந்திரன் தரப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீண்டும் இணைந்து கொள்ளலாமா என பிரதியமைச்சர் வியாழேந்திரனுக்கு நெருக்கமான தரப்பினர், நாடி பிடித்து பார்த்துள்ளனர். இந்த தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, மைத்திரி- மஹிந்த தரப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கும் முயற்சியொன்றில் இருப்பதாக சில தினங்களின் முன்னர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தோம். இந்த விவகாரத்தை மையமாக வைத்தே, அப்போது செய்தி வெளியிட்டிருந்தோம்.

எனினும், வியாழேந்திரனை மீள இணைத்துக் கொள்வதில் கூட்டமைப்பின் தலைவர்கள் பலர் ஆர்வம் காட்டாததால், இந்த முயற்சி சறுக்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, பிரதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தார் வியாழேந்திரன். அவர் பணத்திற்காக கட்சி தாவியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனினும், யாரிடமிருந்தும் ஒரு சதம் கூட வாங்கவில்லையென வியாழேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, வியாழேந்திரனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து சிலர் கூட்டமைப்பின் தலைமையை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். “எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. சொல்லப்பட்டபடியும் எதுவும் நடக்கவில்லை. சில விசயங்களில் அவர் ஏமாற்றமாக இருப்பதாக உணர்கிறோம். அடுத்தது என்னவென்ற குழப்பம் எங்களிடமும் உள்ளது. சில விசயங்கள் அவசரகதியில் நடந்து விட்டன. நடந்தவற்றை விட்டுவிட்டு, அவர் திரும்பி வருவதை கூட்டமைப்பு எப்படி அணுகும்?“ என்ற கேள்வியை, கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஒருவரிடம் நேரடியாகவே கேட்டுள்ளார்கள்.

வியாழேந்திரனுடன் நேரடியாக பேசி விட்டுத்தான் இந்த சமரச முயற்சியை அவர்கள் ஆரம்பித்தார்களா என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், தமது முயற்சி உரிய தரப்பின் ஆலோசனையின் பிரகாரமே செய்யப்படுவதாக கூட்டமைப்பின் பிரமுகருக்கு சொல்லப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் கூட்டமைப்பிற்குள் ஆராயப்பட்டது. அதன் பின்னரே, மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வியாழேந்திரனுக்கு பகிரங்க அறிவிப்பை விட்டிருந்தார்கள்.

எனினும், அவர்கள் அந்த பகிரங்க அறிவிப்பை விடுத்த சமயத்திலும் இரா.சம்பந்தன் இந்த விடயத்தில் பச்சைக்கொடி காட்டவில்லை. கட்சி தாவியவர்களை மீள இணைப்பது, பிழையான அரசியல் கலாச்சாரத்தை தமிழ் தேசிய அரசியலில் ஏற்படுத்தி விடும் என அவர் நிராகரித்ததாக தகவல்.

இதனாலேயே வியாழேந்திரனை மீள அழைத்து வரும் திட்டம் சறுக்கியதாக தெரிய வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here