ஆறு குளங்கள் உடைப்பு; வெள்ளத்தில் முல்லைத்தீவு: குடும்பத்தை காணவில்லை!

வடக்கில் பெய்து வரும் அடை மழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொழியும் மழையால் சுமார் ஆறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

நேற்று வரை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 647 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கரைதுறைப்பற்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 26 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 179 குடும்பங்களை சேர்ந்த 566 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும், வெலிஓயாவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவட்டத்தில் பல சிறுகுளங்கள் நீர் நிரம்பியுள்ளதுடன் நித்திகை குளம் உள்ளிட்ட நான்கு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

அண்மையில் புனரமைக்கப்பட்ட நித்திகை குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஆண்டான்குளம் ஊடாக நாயாற்றில் நீர் அதிகாரித்துள்ளது. புளியமுனை பகுதியில் சில விவசாயிகள் வெள்ளம் காரணமாக வரமுடியாத நிலையும், நித்திகை குளத்தினை பார்க்க சென்ற விவசாயிகள் சிலர் திரும்பிவராத நிலையும் காணப்பட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் படையினரின் உதவி நாடப்பட்டு அவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் குளம், கரிப்பட்ட முறிப்பு குளம் ஆகியன உடைப்பெடுத்துள்ளன. நீர் நிரம்பியுள்ளதால் இரண்டு குளங்களும் கொட்டு திறந்துவிடப்பட்டுள்ளது சாளம்பன் குளம் உடைப்பெடுத்துள்ளதால் அதனை விவசாயிகளின் உதவியுடன் 64 ஆவது படைப்பரிவினரும் இணைந்து அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை மாந்தை கிழக்கில் பாண்டியன் குளம், பெரியகுளம், சணக்கண குளம், ஆகியன உடைப்பெடுத்துள்ளதாகவும், வவுனிக்குளத்தின் நீர்மாட்டம் 17.4 அடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் சமனல குளம், பெரிய குளம், பெரிய குளம், பாண்டியன் குளம், நித்திகை குளம், கரிப்பட்டமுறிப்பு குளம் ஆகியன உடைப்பெடுத்துள்ளன.

காணாமல் போன குடும்பம்

ஆண்டான் குளத்தை அடுத்துள்ள நித்திகை குளம் திடீரென உடைப்பெடுத்ததால் அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள குடும்பமொன்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளது. நேற்றிரவு வரை அந்த குடும்பத்தி்கு உள்ள நடந்ததென்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here