முதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ தமிழகத்தில் முதல் நாள் வசூலில், புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், சன் டிவியில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தினார்கள்.

முதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தான் என்று அறிவித்தாலும், பல்வேறு திரையரங்குகளில் காலையிலேயே திரையிடப்பட்டன. முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதனால் முதல் நாள் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விநியோகஸ்தர்களே எதிர்பாராத விதமாக முதல் நாள் மொத்த வசூலில் சுமார் 30 கோடியை கடந்திருக்கிறது ‘சர்கார்’. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே, முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூல் செய்ததில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

மேலும், சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்த முதல் படம் ‘சர்கார்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக முதல் நாளில் ‘காலா’ வசூலித்த 1.76 கோடியே சாதனையாக கருதப்பட்டது.

மும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக இந்தி திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்டு சுமார் 2.31 கோடி வசூல் செய்திருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ‘கபாலி’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது ‘சர்கார்’.

தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என பல சாதனைகளை முறியடித்து வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’. இதனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here