ஆனையிறவில் விட்டதை கட்டைக்காட்டில் எடுத்த புலிகள்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 06

பீஷ்மர்

இறுதி யுத்தத்தில் புலிகள் ஏன் தோல்வியடைந்தார்கள் என்பது இன்றுவரை முக்கியமான பேசுபொருள். சர்வதேச நாடுகளின் கூட்டிணைவு, போர்விதிமுறைகளை மீறி ஆயுதங்களை பயன்படுத்தியது என பலரும் சொன்னாலும் சரியான தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை துல்லியமாக யாரும் அடையாளம் காணவில்லை.

சர்வதேச கூட்டிணைவு தோல்விக்கு காரணமென்றபோதும் அந்த கூட்டிணைவால் எப்படியான பாதகங்கள் நிகழ்ந்ததென்பது பற்றிய விலாவாரியான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. அவை வெளிவராத பட்சத்தில் இறுதியுத்த விவகாரம் சிதம்பர இரகசியத்தை போலாகிவிடும்.

புலிகளின் தோல்விக்கு பிரதானமான காரணங்கள் சில உள்ளன.

1.புலிகளின் கடல்பலம் முடக்கப்பட்டது.

2.கடல்பலம் முடக்கப்பட்டதுடன் இணைந்ததாக ஆயுத இறக்குமதி தடைசெய்யப்பட்டது.

3.புலிகளின் புலனாய்வு கட்டமைப்பை தென்னிலங்கையில் சீர்குலைத்தமை.

4.மரபுவழி யுத்தத்தை விரும்பிய புலிகள் நவீனபோரியல் முறைமைக்கு தங்களை தயாராக்கி கொள்ளாமை.

5.புலிகளின் பிரதேச இரகசியங்களை இலங்கை பாதுகாப்புதுறை விரல்நுனிக்கு கொண்டு வந்தமை.

6.இலங்கை பாதுகாப்புதுறை பற்றிய அலட்சியம்.

7.நீண்ட சமாதானம்

விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தமைக்கான நேரடி காரணங்கள் இவை. சர்வதேச கூட்டிணைவு போன்ற மறைமுக காரணங்கள் ஏற்படுத்திய நேரடி விளைவுகள் இவை.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் மரபுவழி யுத்தத்தையே விரும்பினார்கள். எல்லா அமைப்புக்களும் சிறிய குழுக்களாக இருக்க, முறையான இராணுவ கட்டமைப்பை உருவாக்குவதில் பிரபாகரன் ஆர்வமாக இருந்தார். தேவையான ஆயுதம், முறையான பயிற்சி, படையணி கட்டமைப்பு என அவர் முறையான சிந்தனையை கொண்டிருந்தார். அதுதான் புலிகளின் அசாதாரண வெற்றிகளிற்கு காரணமாக இருந்தது.

புலிகளை சிறிய அணியாக எதிராளிகள் கணக்குப்போட்டுக்கொண்டிருக்க, அவர்கள் தமக்குள் நிறைவான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்திய இராணுவம் புலிகளை கெரில்லாக்களாக கருதியது. ஆனால் அந்த சமயத்தில் புலிகள் கெரில்லாவும் அல்லாத மரபு இராணுவமும் அல்லாத இடைப்பட்ட வடிவமொன்றை எடுத்துவிட்டார்கள். இந்திய படைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது புலிகள் மரபுஇராணுவத்தை போன்ற பாணியில் எதிர்தாக்குதல் நடத்தியபடி பின்வாங்கினர்.

இதற்கு முன்னரே யாழ்ப்பாண கோட்டையை முற்றுகைக்குள் வைத்திருந்து, வடக்கிலுள்ள படையினரை முகாம்களிற்குள் முடக்கி ஒரு அரை மரபு இராணுவ தகுதியை எட்டிவிட்டனர். 1986  இல் ஒப்ரேசன் லிபரேசன் மூலம் இராணுவம் கைப்பற்றிய நெல்லியடி மத்தியமகா வித்தியாலயம் மீதான தாக்குதல் கூட அரை மரபுவழி தாக்குதல்தான்.

பின்னாளில் 1991 இல் ஆனையிறவு பெருந்தளம் மீதான ஆகாய கடல்வெளி சமர்தான் புலிகளின் மரபுவழி இராணுவமாகியதாக ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு முன்னரே மரபுவழி இராணுவ தகுதியை புலிகள் எட்டத் தொடங்கிவிட்டனர்.

தளபதி சொர்ணம்

மரபுவழி இராணுவமாக புலிகளை மாற்றுவது பிரபாகரனின் இலட்சியமாக இருந்துள்ளது. அதனை திறம்பட செய்துவிட்டார். இந்த சமயத்தில் எழுச்சிபெற்ற தளபதிகளான பால்ராஜ், சொர்ணம், அன்பு, பானு, தீபன் போன்றவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போரில் ஜொலித்தார்கள். கெரில்லா அனுபவங்களுடன் உருவான மரபு போருக்தியை புலிகள் சிறப்பாக செயற்படுத்தினார்கள்.

உதாரணமாக சிலவற்றை குறிப்பிடலாம். நள்ளிரவின் பின் முகாமிற்குள் தாக்குதலை நடத்துவது, எதிராளிகளின் நிலையை இரகசியமாக ஊடறுத்து கடந்து பின் பக்கத்தால் தாக்குதலை ஆரம்பிப்பது, இரகசியமான நகர்ந்து ஆயுதக்கிடங்குகளை தகர்ப்பது என புலிகள் புதிதுபுதிதாக உத்திகளை கையாண்டு கொண்டிருந்தார்கள். இலங்கைப்படைகள் மரபுப்படையாக இருந்தாலும் புலிகளின் போருத்திகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டார்கள்.

ஒவ்வொரு நெருக்கடியான சமயத்திலும் மிகநுணுக்கமான திட்டமிடலுடன் புலிகள் ஒவ்வொரு களமுனையை திறந்தார்கள். ஒப்ரேசன் லிபரேசன் சமயத்தில கரும்புலி தாக்குதல் வடித்துடன் நெல்லியடியில் பேரதிர்ச்சி கொடுத்தனர். 1992 இலும் இப்படியொரு சம்பவம் நடந்தது.

1991 இல் புலிகளை மரபுப்படையணியாக உலகம் அங்கீகரித்த சமர் ஆகாய கடல் வெளி சமர் நடந்தது. 53 நாட்கள் நீடித்த பெருஞ்சமர். புலிகள் இப்படியொரு சமரை செய்வார்களென யாரும் எதிர்பார்க்கவில்லை. இலக்கை அடைய முடியாத அந்த சமரில் 573 போராளிகள் மரணமானார்கள். எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் அதிகளவான வெடிபொருட்களை புலிகள் செலவிட்டு விட்டனர். ஆனால் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. அமைப்பிற்குள் பெரும் வெடிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. கையிருப்பில் இருந்த வெடிபொருள் அடுத்த நடவடிக்கைக்கு போதுமானதாக இருக்கவில்லை. அப்பொழுது புலிகள் கடல்மார்க்கமாக ஆயுதம் கொண்டுவர ஆரம்பிக்கவில்லை. இராணுவத்தளங்களை தாக்கித்தான் ஆயுதங்களை எடுத்தார்கள். ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடக்கத்தில் கோட்டை, கொக்காவில், கொண்டச்சி முதலான படைமுகாம்களை தாக்கி அழைத்துவிட்டனர். அதன்பின் பாதுகாப்பற்ற படைமுகாம்களை வடக்கில் அகற்றிவிட்டனர். இந்த சமயத்தில் புலிகள் கட்டைக்காடு மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஆனையிறவு பெருந்தளத்துடன் இணைந்ததாக இருந்த கட்டைக்காடு தளம் ஆயுதக்களஞ்சியமாகவும் இருந்தது.

சொர்ணம் தலைமையில் கட்டைக்காடு மினிமுகாமை தாக்கியழித்து சுமார் 150 வரையான எப்என்சி (FNC) துப்பாக்கிகளையும், பெருமளவான வெடிபொருட்களையும் கைப்பற்றினார்கள். அது புலிகளிற்கு பேருதவியாக இருந்தது.

1996 இல் முல்லைத்தீவு படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இன்னொரு பாய்ச்சலே.

பிரபாகரன்- சாள்ஸ் அன்ரனி

நான்காம் கட்ட ஈழப்போரில் இப்படியான பாய்ச்சல்களை புலிகளால் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம், இராணுவத்தை குறைவாக எடைபோட்டதும், மரபுவழி போரில் தம்மை புதுப்பித்து கொள்ளாததுமே.

2002 இல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை நீண்டுகொண்டு சென்ற சமயத்தில் இராணுவம் தன்னை போதுமானளவு புதுப்பித்து கொண்டது. இதுவரை புலிகளுடன் போரிட்ட அனுபவத்தில் தன்னை மாற்றியமைத்துக்கொண்டது. முக்கியமாக படையணியை பெருக்கினார்கள். மரபும், கெரில்லாவும் இணைந்த போருத்தியை கையாண்டார்கள். பெரும் ஆளணியை களமிறக்காமல் சிறுசிறு குழுக்களை களமிறக்கினார்கள். புலிகளின் முதுகுக்குப்பின்னால் தாக்கினார்கள். வானிலிருந்து இலக்குகளை அடையாளம் கண்டு, வானிலிருந்தும் தரையிலிருந்தும் துல்லியமாக தாக்கும் வல்லமையை பெற்றதுடன், அடையாளம் காணல், வான் மற்றும் தலை தாக்குதலை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். கடல் நடவடிக்கையில் வான்படையின் துல்லிய தாக்கும் வல்லமையை பயன்படுத்தினார்கள். புலிகள் பாணியில் சிறிய கலன்களை களமிறக்கினார்கள். புலனாய்வு தகவல்களை ஒரேகூரையின் கீழ் கொண்டு வந்து நடவடிக்கை பிரிவுகளை ஒருங்கிணைத்தார்கள். புலிகளின் உலகளாவிய வலையமைப்பை உடைக்க சர்வதேச ஒத்தாசைகளை பெற்றார்கள்.

2006இல் யுத்தம் ஆரம்பித்தபோது புலிகள் நினைத்ததை போல யுத்தம் இருக்கவில்லை. அவர்களால் இலகுவாக படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. முக்கியமாக புலிகளால் ஒன்றுதிரள முடியவில்லை. தமது வழக்கமான உத்திகளுடன் போருக்கு சென்ற புலிகள், போர்க்கள நிலவரம் தலைகீழாக மாறியிருந்தபோது சற்று தடுமாறிப் போனார்கள்.

இந்த தடுமாற்றத்திற்கு இன்னொரு காரணமுமிருந்தது. அதற்கு காரணம் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி!

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here