வெளிநாட்டு பார்சல்- குமுறும் உள்ளூர் இளைஞர்கள்!

வெளிநாட்டு பார்சல் என்றால் தமிழர்களின் புதிய அகராதியில் வெளிநாட்டு பையனிற்கு மணமகளாக போகும் பெண்ணை குறிக்கும் சொல் என்று அர்த்தம். கிட்டத்தட்ட புதிய தமிழ்ச்சொல்லாகவே அது உருவாகி விட்டது. அவ்வளவு பிரபலம் ‘வெளிநாட்டு பார்சல்’.

என்னதான் முள்ளம்பன்றி மாதிரி தலைமுடியை ஸ்ரைல் பண்ணி, உடம்பு முழுதும் பச்சை குத்தி செட்டிலான நாட்டு மொழியில் பேசிக் கொண்டாலும், புலம்பெயர்ந்துள்ள இளம்தலைமுறையின் பெரும்பாலானவர்களின் மனம் என்னவோ தமிழ் மனம்தான். அவர்களால் அந்த அடையாளம், கலாசாரத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. என்னதான் ஐரோப்பிய அடையாளங்களில் வாழ்ந்தாலும் திருமண விடயத்தில் அவர்களால், மாறிவிட முடியவில்லை.

இதனால் புலம்பெயர்ந்தவர்கள் பெண்தேடி ஊருக்கு வருகிறார்கள். அவர்கள் வருவதற்கு முழுமுதற் காரணம் இதுமட்டுமல்ல. இன்னொன்றும் உள்ளது.
பொதுவாகவே தமிழ் சமூகம் ஆண்மனநிலைப்பட்டது. ஆண்களின் உலகத்தில் பெரும்பாலும் பாலியல் நுகர்ச்சிப்பொருளாகத்தான் பெண்ணிற்கு இடமுண்டு. தமிழ் வாழ்வின் எல்லா கூறுகளிலும் இது வெளிப்படும். கலை, சினிமா, கொண்டாட்டம், மரபு என எல்லாமும் இந்த அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவைதான். இது இன்னொரு விதமாக பெண் ஒழுக்கம் என்ற பெயரிலும், பண்பாடென்ற பெயரிலும் பெண்கள் மீதான மாயப் போர்வைகளை போர்த்தியுள்ளது. அந்தப் போர்வைகளை கச்சிதமாக அணிந்தவர்கள் ஊரிலுள்ள பெண்கள் என்பது வெளிநாடுகளிலுள்ளவர்களின் அபிப்பிராயம்.

அப்படியானால் புலம்பெயர் தேசங்களில் பிறந்த இரண்டாம் தலைமுறை பெண்கள், தாயகத்திலிருந்து கல்வி, தொழிலுக்காக சென்றவர்கள்… புலம்பெயர் தேசங்களிலுள்ள இளைஞர்களின் கல்யாணத்திற்கான முதல் விருப்பத்தேர்வாக அவர்கள் இருக்க மாட்டார்கள். காரணம், ‘அவளுகள் வலு சோசலிசமாக பழகுவாளுகள்’ என ஊரில் பெரிசுகள் பேசிக் கொள்வார்கள்.

இப்படி கலவையயான காரணங்களால் ஊருக்கு பெண் தேடி புலம்பெயர் இளைஞர்கள் வருவது தமிழ் வாழ்வியலையே தலைகீழாக புரட்டிப்போடும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் மாப்பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் சீதன விவகாரத்தில் கறார் காட்டுவதில்லை. வீடும் அப்படித்தான். கிடைத்தால் மகிழ்ச்சி என்ற ரகத்தில்த்தான் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள். அழகிய, இளமையான, பெண்களிற்கே உரித்தான நான்கு வித குணங்களையும் கொண்டவர்களாக இருந்தால் மோதும் என்பதுதான் அவர்களின் ஆகப்பெரிய எதிர்பார்ப்பு.

உள்ளூர் மாப்பிள்ளை திருமணத்தை கணிசமானவர்களின் வீடுகள் தாங்காது. பிரதான காரணம், சீதனம். மற்றையது வீடு. சீதனச்சந்தையில் தற்போது பத்து இலட்சம் வாங்குபவன் ஒன்றுக்கும் உருப்படாதவன். கிட்டத்தட்ட வேலையில்லாத ஒருவரின் சீதனமது. அதைவிட வீடு கட்டாயம். வாகனம் இப்பொழுதுதான் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதெல்லாம் சாதாரண குடும்பங்களின் பெருளாதாரத்திற்கு கட்டாது. ஆசிரியர் என்றாலே சாதாரணமாக பதினைந்து தொடக்கம் முப்பது இலட்சம் சீதனம்.

இந்த நெருப்பாற்றை நீந்திக்கடக்க முடியாமல் ஏராளம் குடும்பங்கள் இருக்கின்றன.
அவர்களிற்கு உள்ள சிறந்தவழி வெளிநாட்டு மாப்பிள்ளை. எப்படியாவது மகளை வெளிநாட்டு மணமகனின் கையில் கொடுத்துவிடவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அந்தவகையானவர்கள் மட்டும்தான் என்றில்லாமல், சமூகத்தில் எல்லா மட்டத்திலும் வெளிநாட்டு மாப்பிள்ளை கலாசாரம் சமஅளவில் பாய்கிறது.
உயர்தரம் முடித்ததுமே பெரும்பாலான பெண்கள் வெளிநாட்டு பயணமொன்றிற்கான தயாரிப்பில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். அது பகிரங்கமாக சொல்லிச் செய்வதில்லை- மரபணு சம்மந்தமான ஒன்றைபோல, இயல்பாக இப்பொழுது நடக்க ஆரம்பிக்கிறது.

வெளிநாட்டு மாப்பிள்ளையொருவனின் மனதை கவரும் விதமாக தங்களை மாற்ற ஆரம்பிக்கிறார்கள். நுனி நாக்கில் தமிங்கிலீஸ் பேச கற்றுக் கொள்கிறார்கள். தலைமுடி கத்தரித்து, அயர்ன் செய்து, நடை உடை பாவனையில் மாற்றங்களை கொண்டு வந்து, ஆங்கிலம், கணினி, வாகனம் ஓட்டக்கற்றுக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் அன்றாட தேவைகள் என்றபோதும், தமிழ் சமூகத்தில் அது வெளிநாட்டு பயணத்தை முன்னிறுத்தியே பெண்களிற்கு அந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருபதுகளில் ஆரம்பத்திலுள்ள பெண்களில் மிகக்கணிசமானவர்கள் வெளிநாட்டு திருமணத்தை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அவர்களில் கணிசமானவர்கள் அதற்காக எதையும் விட்டுக்கொடுக்க தயார். அந்தப்பட்டியல் படிப்பில் தொடங்கி காதலில் முடிகிறது. இதில் எல்லோருமே ஒரேவிதம் என சொல்ல முடியாது. ஆளாளுக்கு விடயங்கள் மாறுபடும்.

அண்மையில் அச்சுவேலியில் ஒரு தற்கொலை சம்பவம் பதிவாகியது. புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட அந்த இளைஞனுக்கும் யுவதியொருவரிற்குமிடையில் காதல் உறவிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இருந்தது. அந்த யுவதிக்கு பெற்றோர் வெளிநாட்டு திருமணமொன்றை நிச்சயித்தனர். யுவதியும் அதை ஏற்று, இளைஞனுடான தொடர்புகளை கத்தரித்துள்ளார். விளைவு, இளைஞனை தற்கொலை முடிவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏராளம் கதைகள் இருக்கும்.
வெளிநாட்டு திருமணம் வாழ்வின் சகல பிரச்சனைகளிற்குமான அருமருந்தென்றுதான் பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை மகள்களிற்கும் ஊட்ட, அவர்கள் அதை தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறார்கள்.அதை தீவிரமாக நம்ப ஆரம்பிக்க, அதற்காக எந்தவிலையை கொடுக்கவும் தயாராகிவிடுகிறார்கள். இதில் துயரமென்னவென்றால், கணிசமானவர்கள் சுயபலி கொடுக்கிறார்கள் என்பதே.

நான் அவனில்லை

சில காலத்தின் முன் இந்த பெயரில் ஒரு தென்னிந்திய திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. ஆள்மாறாட்டம் செய்து பல பெண்களின் வாழ்வில் விளையாடும் மன்மதன் ஒருவன்தான் கதைநாயகன்.
புலப்பெயர்வு, வெளிநாட்டு மாப்பிள்ளை கனவு இந்தவகையான மன்மத குஞ்சுகளை தாராளமாக உருவாக்கிவிட்டுள்ளதென்பதே துயரமான உண்மை.
வெளிநாடுகளில் திருணமானவர்கள், மனைவியை பிரிந்தவர்கள் அந்த உண்மையை மறைத்து இங்கே திருமணமாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகிறது. (இது தமிழ் பக்கத்தின் காப்புரிமை பெற்ற கட்டுரை) மது, போதைக்கு அடிமையானவர்கள் நல்ல பிள்ளையாக திருமணம் முடித்து செல்கிறார்கள். ஆயிரம் கனவுகளுடன் வெளிநாட்டிற்கு சென்ற பின்னர்தான் பெண்களிற்கு உண்மை உலகம் வெளிக்கிறது. பெரும்பாலான பெண்களிற்கு வெளிநாட்டு திருமணம் ஒற்றைவழி பயணம். திரும்பவே முடியாது.

மொழி, சட்டம் தெரியாது. அறிந்தவர்கள் கிடையாது. என்ன என்றாலும் கட்டியவனுடனேயே வாழ்வை பகிர வேண்டும். எதிர்க்கவோ, தப்பிக்கவோ முடியாமல் பெண்கள் அந்த வாழ்விற்கு இசைவாக்கப்படுகிறார்கள். அதிலும், குடும்ப பொறுப்புள்ள பெண் என்றால் குடும்பத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வடமராட்சியை சேர்ந்த ஒரு ஆசாமியின் லீலைகள் அண்மையில் அம்பலமானது. அவருக்கு பிரான்சில் மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அதை மறைத்து ஊரில் ஐந்து திருமணங்களை வரிசையாக செய்துள்ளார். வயது தெரியாமல் மேக்அப் போட்டு அவர் ஆடிய மன்மத நாடகம் இறுதியில் சிறைச்சாலையில் முடிந்தது.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் அதிகமாக ஆராயாமல் விடுவதும், அல்லது அவரை பற்றி அறிய வழிகள் கிடைக்காமையும் இப்படியான அசம்பாவிதங்களிற்கு காரணமாகிறது.இந்த விடயத்தில் பெற்றோர் அதிக எச்சரிக்கையாக இருப்பதே பிள்ளைகளிற்கு கொடுக்கும் சிறந்த கொடை. ஏனெனில், உள்ளூர் திருமணங்களில் ஏற்படும் முறிவுகளைவிட, புலம்பெயர் மாப்பிள்ளைகளுடனான திருமணங்களில் முறிவுகளில் ஏற்படுவது அதிகமென்கிறார்கள் பெண்கள் அமைப்பினர்.

புலப்பெயர்வு தமிழ்க்குடும்பங்கள் ஏராளமானவற்றை பொருளாதாரரீதியில் பலப்படுத்தியுள்ளது. அப்படி பலமான குடும்பங்களிலிருந்து, ஊரிலுள்ள குடும்பங்களுடன் திருமண உறவு வைக்கும்போது பொருளாதார ரீதியில் பலமடையும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதுதான். ஆனால் சமூகரீதியில் ஏற்படுத்தும் விளைவுகளை தீர்ப்பதெப்படி?

பொருளாதாரமா… சமூகத் தாக்கங்களா என்றால் என்ன விடை சொல்வது?

சற்றே நிறமான, அழகான பெண் என்றால் அவர் நிச்சயம் ‘வெளிநாட்டு பார்சலா’கத்தான் மாறுவார் என இளைஞர்கள் பகிரங்கமாகவே பேசிக் கொள்வார்கள். இந்தப்போக்கால் புலம்பெயர் மாப்பிள்ளைகளை வில்லன்களாக பார்க்கும் உள்ளூர் வாலிபர்கள்தான் அதிகம்பேர்!

நொந்து கெட்ட ஒருவரின் ஸ்டேட்டஸ்

வெளிநாடுகளில் இருக்கும்போது என்னதான் காதல் கத்தரிக்காய் விடயங்களில் சிக்கினாலும், திருமணமென்று வந்துவிட்டால் புலம்பெயர் வாலிபர்கள் ஊருக்குத்தான் வருகிறார்கள். அதுபோல, நமது பெண்கள் கல்வி, தொழில் காலத்தில் என்னதான் காதல், கத்தரிக்காய் விவகாரங்களில் சிக்கினாலும், திருமணமென்று வந்தால் வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் விரும்புகிறார்கள் என அண்மையில் ஒருவர் சமூகவலைத்தளத்தில் எழுதியிருந்தார்.

புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் திருமணம் செய்வது, உள்ளூர் வாழ்க்கைமுறையில் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. அவற்றில் ஒன்று திருமணமுறை. முன்னரைப் போலில்லாமல் ரெடிமேட் திருமணமுறை விரைவாக பரவியதற்கு இதுவும் ஒருகாரணம். அதிநவீன மண்டபங்கள் தாராளமாக வடக்கில்- குறிப்பாக யாழ், வவுனியாவில் முளைக்கின்றன. இந்தவகை மண்டபங்களில் மிகச்சாதாரணமாக ஒரு திருமணத்தை நடத்த நான்கரை இலட்சம் ரூபாவரை செலவாகிறது. ஆறு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் ரூபாவரையில் பெரும்பாலான திருமணங்களில் செலவிடப்படுவதாக மண்டப நிர்வாகிகள் கூறுகிறார்கள். இப்படி நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் புலம்பெயர் மாப்பிள்ளைகளின் திருமணங்கள்தான். இப்படி பெருமெடுப்பில் நடத்தப்படும் திருமணமுறை ‘தமிழர்களின் திருமண முறை’யாக மாற்றமடைந்து வருகிறது. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் விழிக்கிறார்கள் வசதியில்லாதவர்கள்.

மனைவி இறந்த, விவாகரத்தான நடுத்தர வயதுக்காரர்கள் இப்பொழுது வன்னிப்பகுதியை நோக்கி படையெடுக்கிறார்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களை இரண்டாம்தாரமாக திருமணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாம்.

வௌிநாட்டு பார்சலாக ஏற்றப்படும் பெண்களிற்கு மொழி கற்பிக்க பல நிலையங்கள் யாழ், வவுனியாவில் முளைத்தபடியிருக்கின்றன. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகத்தினர் தமிழ் பக்கத்திடம் கூறும்போது, கடந்த சில வருடங்களாக 1,500 – 2,000 வரையானவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் தமது நிறுவனத்தின் மூலம் ஆங்கில கல்வியை வெற்றிகரமாக முடிக்கிறார்களாலம். இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடு செல்லும் பெண்களாம்.

பெண்களால் ஏற்பட்ட மார்க்கெட்டை கவனித்து, முல்லைத்தீவிலும் புதிதாக இன்னொரு கிளையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதில் அதிகமானவர்கள் பெண்கள். பிரிட்டிஸ் கவுன்சில் ஊடாக பரீட்சை எழுதி அங்கு செல்கிறார்கள். இதுபொல ஜேர்மன், நெதர்லாந்து போன்ற நாடுகளின் மொழியையும் கற்று செல்கிறார்கள்.

இதே சமயத்தில், வெளிநாட்டு பார்சல் முறையால் உள்ளூர் இளைஞர்கள் பலர்- தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். க.பொ.த உயர்தரத்திலேயே பெண்களை உசார்படுத்தினாலே தவிர, மற்றும்படி அழகிய பெண்களை உள்ளூர் இளைஞர்கள் கனவில்தான் காணலாமென்றார் எம்முடன் பேசிய, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கற்கும் இளைஞர் ஒருவர்.

பெண்களின் அந்தரங்கங்களை இணையத்தில் சிலர் பதிவேற்றும் போக்கு அதிகரித்து செல்வதற்கும் வெளிநாட்டு பார்சல் முறையை காரணம் காட்டினார் இன்னொருவர்.

மொத்தத்தில், வெளிநாட்டு பார்சல் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னவென்பதை பற்றி முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here