வைத்தியரிடம் கேளுங்கள்

வாசகர்களின் கேள்விகளிற்கு வாராந்தம் ஆயுர்வேத வைத்தியர் கந்தையா சோதிதாசன் பதில் வழங்குவார்.

சறோஜினிதேவி
கோண்டாவில்

கேள்வி:- எனது மகன் சந்தோஸ் வயது 9. மிகவும் குண்டாக இருக்கிறான். விளையாடும் போது களைப்படைகிறான். இவனது பருத்த தோற்றத்தால் மற்றவர்களின் கேலிக்கு உள்ளாகின்றான். இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு என்ன?

பதில்:- நீங்கள் மகனின் நிறை அளவை குறிப்பிடவில்லை. சிறுவர்களுக்கிடையே தற்போது உடற்பருமன் வளர்ச்சியடைதல் பிரச்சினையாக உள்ளது. உண்ணப்படும் கலோரியின் அளவுக்கும் செலவிடப்படுவதற்கும் இடையே சமநிலை இன்மையால் உடற்பருமன் ஏற்படுகிறது. சோடா, சொக்லேற், இறைச்சி வகைகள், மாப்பொருள் சேர்ந்த இனிப்பு, உணவுகள் அதிகமாக எடுப்பதால் கலோரி அதிகரிக்கும். இதோடு போதிய உடற்பயிற்சி இல்லாது விடின் உடற்பருமன் அடைதலைத் தடுக்க முடியாது. எனவே இத்தகைய உணவுவகைகளைத் தவிருங்கள். தானிய உணவுகளோடு இஞ்சி, உள்ளி, மிளகு, என்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஒரிடத்திலே அதிக நேரம் உட்கார்ந்து இருந்தால், தொலைக்காட்சி பார்த்தல், கணினியில் கேம் விளையாடுதலை குறைத்து மைதான விளையாட்டுக்களில் ஈடுபடச் செய்யுங்கள். திரிபலா குளிகையை இரவில் தினமும் எடுத்து வரலாம்.

நிஷா
வயது 30
நாவாந்துறை

கேள்வி:- குழந்தைக்கு முதன்முதலில் பால் ஊட்டும் போது முதலில் வருகின்ற பாலை வெளியேற்றி விட்டு பின்பு வரும் பாலை கொடுக்க வேண்டும் என்று கிராமங்களில் சொல்லப்படுகிறது. இது சரியா? தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு எவ்வகையான உணவுகளை உண்ணலாம்?

பதில்:- முதலில் வருகின்ற பாலை வெளியேற்றி விட்டு பாலூட்டுகின்ற பழக்கம் சில கிராமங்களில் பின்பற்றி வருகின்ற மூடநம்பிக்கை ஆகும். முதல் பாலிலேயே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இது குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. எனவே இதைக் கட்டாயமாக குழந்தைக்கு ஊட்டப்பட வேண்டும். துளசி தாய்ப்பாலை அதிகரிக்கும். மரக்கறி சூப் சமைக்கும் போது துளசியை சேர்க்க வேண்டும். இதே போல் வெந்தயமும், தாய்ப்பாலை அதிகரிக்கும். அதே போல் காய்கறி வகைகளில் பூசணிக்காய், சுரக்காய், புடலங்காய் மற்றும் கீரை வகைகள் எடுப்பதால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பாதாம் பருப்பை பாலில் கலந்து சாப்பிடுதல் தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும்.

சந்தோஸ்
வயது 26
அரியாலை

கேள்வி:- இரத்தச்சோகை இருந்தால் இரத்தானம் செய்யலாமா?

பதில்:- ஒருவர் 120 நாட்களுக்கு ஒரு தடவை இரத்ததானம் செய்யலாம். ஆரோக்கியமான ஒருவரின் உடலில் 10கிராம் கிமோகுளோபின் இருக்க வேண்டும். கட்டாயம் ஈமோகுளோபின் குறைவாக இருந்தால் இரத்தம் எடுக்க மாட்டார்கள்.

சாளினி
வயது 20
பண்டத்தரிப்பு

கேள்வி:- வெய்யிற்காலம் முழுவதும் வியற்குரு போட்டு கடி ஏற்படுகிறது. வியற்குரு போக என்ன செய்யலாம்?

பதில்:- இறுக்கமான ஆடைஅணிவதை தடுக்க வேண்டும். காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். உடற்சூட்டைத் தணிக்கும் பழங்கள், இளநீர், மோர், பதனீர் போன்றவற்றை உண்ண வேண்டும். தினமும் 2 வேளை குளிக்க வேண்டும். மேல் பூச்சாக சந்தனம் பூச வேண்டும், பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் போன்றவற்றை சேர்த்து குளிக்க வேண்டும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், பொடியை நீரில் கரைத்து பூசிக் குளித்து வர வியற்குரு மறையும்.

அருள் வண்ணன்.
வயது 35
நவாலி

கேள்வி:- திருமணமாகி 10 வருடங்களாகிறது. இன்னும் குழந்தை இல்லை. விந்துப்பரிசோதணை செய்ததில் விந்துவின் அசைவியக்கம் குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். விந்து சக்தி அதிகரிக்க என்ன மருந்து செய்ய வேண்டும்.

பதில்:- எண்ணெய் குளியல் மூலம் உடற்சூட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய கரண்டி நல்லெண்ணையில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி புளுங்கல் அரிசி, 2 உள்ளிப்பல் சேர்த்து காய்ச்சி வடிகட்டவும். அதை தலை, தொப்பிள், அடிவயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிக்கவும், அஸ்வகந்தலேகியம், தாதுபுஸ்டி லேகியம், என்பன பலன் அளிக்கின்றன. இன்னும் பல மருந்துகள் இதற்கு சிபார்சு செய்கின்றது. அதை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கவும்.

சரவணகுமார்
வயது 40
மல்லாகம்.

கேள்வி:- ஔவையார் நெல்லிக்கனியை அருந்தி நீண்ட நாள் வாழ்ந்ததாக இலக்கியம் கூறுகிறது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் பற்றிக் கூறுகிறீர்களா?

பதில்:- முதுமையைத் தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நெல்லிக்கனி பித்தத்தை சமப்படுத்தும். பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து இரத்தத்தோடு சேர்ந்து உள்ள கொழுப்பை அகற்றும் சக்தி நெல்லிக்கனிக்கு உண்டு. அத்தோடு நார்ச்சத்து, இரும்புச்சத்து, கல்சியம், பொஸ்பரசு, விற்றமின் ஈ, என்பனவும் இதில் உண்டு.

வைத்தியரின் தொடர்புகளிற்கு-

வைத்தியர் கந்தையா சோதிதாசன்
drsothithas@gmail.com
0776284687

(வாசகர்களே உங்களிற்கும் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் வைத்தியரின் தொலைபேசி இலக்கத்திற்கே, 0766722218 என்ற தமிழ் பக்கத்தின் தொடர்பிலக்கத்திற்கோ குறுந்தகவலாக அனுப்பலாம். அல்லது pagetamilmedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.) 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here