காப்புறுதி பணத்திற்காக போலி கையொப்பம்… வவுனியா வைத்தியசாலையின் பெயரில் திருகுதாளம்!

வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் போலியான கையெழுத்திட்டு, காப்புறுதி நிறுவனமொன்றிற்கு ஆவணம் வழங்கிய குற்றச்சாட்டிற்கு தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இலக்காகியுள்ளார்.

தற்போது இது குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

காப்புறுதி நிறுவனமொன்றில், காப்புறுதி பணத்திற்காக ஒருவர் விண்ணப்பித்த ஆவணத்தை பரிசோதித்த போதே இந்த திருகுதாளம் அம்பலமாகியுள்ளது.

காப்புறுதி நிறுவனமொன்றில் அண்மையில் காப்புறுதி பணத்திற்காக விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட காலம் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக ஆவணங்கள் இணைக்கப்பட்டு, சுமார் இரண்டரை இலட்சம் ரூபா காப்புறுதி பணத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த காப்புறுதி நிறுவனம், குறிப்பிட்ட விண்ணப்பதாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதை உறுதிசெய்யும் வழக்கமான அலுவலக நடைமுறைக்கிணங்க, வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சென்று உறுதிப்படுத்த முனைந்தது. வவுனியா வைத்தியசாலையின் பதிவுகள் யாவும் தற்போது கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதால், விபரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வசதியிருந்தது. எனினும், காப்புறுதி நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதை போல, நோயாளியொருவர் சிகிச்சை பெற்றதற்கான பதிவுகள் அங்கிருக்கவில்லை.

குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்த வைத்திய நிபுணரிடம் காப்புறுதி நிறுவன அதிகாரிகள் விடயத்தை தெரிவித்தபோது, அது போலிக்கையொப்பமென்பது தெரிய வந்தது. வைத்தியரின் முத்திரையை பதித்து, போலியான கையொப்பமிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், இந்த போலி ஆவணம் தயாரிப்பில் சம்பந்தப்பட்ட தாதிய உத்தியோகத்தர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here