ஐந்து வருடங்களின் முன்னர் மாவை செய்த பாவம் என்ன தெரியுமா?: ஒரு ப்ளாஷ்பேக்!

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது ஐந்து வருடங்களின் முன்னர் நான் செய்த பாவம். இப்படி இரண்டு நாட்களின் முன்னர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஒட்டுசுட்டானில் நின்று பொருமியிருந்தார். அவரை முதலமைச்சராக்கி விட எமக்கு எதிராக செயற்படுகிறார் என்பதே மாவையின் குற்றச்சாட்டு.

மாவையின் இந்த பாவமன்னிப்பு கோரலையடுத்து, சமூக ஊடகங்களில் பலவாறான அபிப்பிராயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. தமிழ் பக்கத்தில் அந்த செய்தி வெளியாகியிருந்தது. தமிழ் பக்கத்தின் சமூக ஊடகங்களில் இந்த செய்திக்கு கீழ் கணிசமான வாசகர்கள் கருத்திட்டிருந்தார்கள். மாவையின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே அனேக கருத்துக்கள் இடப்பட்டிருந்தன.

இதேவேளை, மாவைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினார் என்ற சாரப்படவும், தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்திட்டு வருகிறார்கள்.

ஐந்து வருடங்களின் முன்னர்- வடக்கு முதலமைச்சர் தெரிவில்- என்ன நடந்தது? மாவை செய்த பாவம்தான் என்ன?. தமிழ் பக்க வாசகர்களிற்காக ஒரு ப்ளாஷ்பேக்.

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் எப்படி தயார் செய்யப்பட்டார் என்ற விடயங்களை தவிர்த்து விடுகிறோம். ஏனென்றால், அதைப்பற்றி எற்கனவே பலர் எழுதி விட்டார்கள். சம்பந்தன், சுமந்திரனினால் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்தான் என தீர்மானிக்கப்பட்டதற்கும், விக்னேஸ்வரனின் பெயர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதற்குமிடையில் நடந்த முக்கியமான சங்கதி- கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை சம்மதிக்க வைத்தது, மாவையை ஆசையை துறக்க வைத்தது. இதைப்பற்றிய தகவல்களையே தருகிறோம்.

இரா.சம்பந்தன் இந்த விசயத்தை முதலில் கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசவில்லை. அப்படி பேசினால் சிக்கலாகி விடும் என்பது அவருக்கு தெரியும். அதனால் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

மூவரிடமும் கிட்டத்தட்ட ஒரேவிதமாகவே பேசினார். கிட்டத்தட்ட ஒரேவிதமாகவே அவர்களிடமிருந்து பதில் வந்தது.

“தம்பி. அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?“ என அவர் ஆரம்பிக்க, “ஏன் மாவையண்ணை இருக்கிறார்தானே“ என அவர்கள் பதில் சொன்னார்கள்.

“இல்லை. அவர் இந்த சமயத்தில, இதற்கு பொருத்தமில்லையென நினைக்கிறன். விக்னேஸ்வரன் எப்படி?“

“அவர் அரசியலுக்கு புதிசு. கொழும்பில இருக்கிறவர். அவரை மக்கள் ஏற்கவும் மாட்டினம். அவர் பொருத்தமில்லை“ என மூவரும் கூறியிருக்கிறார்கள்.

பின்னர்தான் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டங்கள்.

இடிக்கடி கூடி இந்த விடயத்தை காரசாரமாக விவாதிப்பார்கள். சம்பந்தனின் உத்தியொன்றுள்ளது. ஒவ்வொரு நாள் கூட்டம் ஆரம்பிக்கும் போது, இந்த விவகாரத்தின் பூச்சியத்திலிருந்தே ஆரம்பிப்பார். “தம்பியவை.. அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்… நான் விக்னேஸ்வரன்தான் பொருத்தமானவர் என நினைக்கிறன்“ என அதற்கான காரணங்களை சொல்லுவார்.

ஒவ்வொரு கூட்டமும் இப்படியே ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் “மறுபடியும் முதல்லயிருந்தா?“ என கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் அலற ஆரம்பித்து விட்டார்கள். சலித்து, களைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். என்றாலும், விக்னேஸ்வரனிற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதற்கு பின்னர்தான் இன்னொரு நகர்வை செய்தார். அப்போது மன்னார் ஆயராக இருந்த ராயப்பு யோசெப்பின் உதவியை நாடினார். ராயப்பு யோசெப், விக்னேஸ்வரனை ஆதரித்தார். செல்வம் அடைக்கலநாதனை சமாளிக்கும் பொறுப்பு ஆயரிடம் போனது. செல்வத்தை அழைத்து பேசினார் ஆயர்.

விக்னேஸ்வரனை வேட்பாளராக கொண்டு வரவே கூடாது என செல்வம் அடைக்கலநாதன் விடாப்பிடியாக நின்றார். விக்னேஸ்வரனை ஆதரிக்கிறேன், அவர் வருவதில் பிரச்சனையொன்றுமில்லையென ஆயர் சொல்ல, செல்வம் இன்னொரு ரூட் விட்டார். அவர் சுத்த சைவப்பழம், அவரை கொண்டு வந்தால் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள், நல்லதுமல்ல என.

ஆயரான நானே ஆதரிக்கிறேன். மக்களை அதற்கு தயார் செய்யலாமென கூறிய ஆயர், ஒரு சின்ன டோஸ் விட்டார். “சரி… விக்னேஸ்வரனை ஆதரிக்க முடியாதென நீங்கள் வெளியில் போனால், அதற்கு பின்னர் வரும் விளைவுகளிற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். என்னிடமும் வரக்கூடாது“ என்றார். அதாவது, நீங்கள் கூட்டமைப்பிற்கு வெளியிலும் போக வேண்டி வரலாம், அப்படியொரு நிலைமை வந்தால் நான் தலையிட மாட்டேன் என்பதே அதன் மறைமுக அர்த்தம்.

அடுத்தது சுரேஸ் பிரேமச்சந்திரன். அவருடன் சம்பந்தரே நேரடியாக பேசினார். அப்போதுதான், விக்னேஸ்வரனை ஆதரித்தால், சர்வேஸ்வரனிற்கு அமைச்சு பதவி தரலாமென சம்பந்தன் வாக்களித்தார். ஆனால் பின்னர் அவர் அதை செய்யவில்லை.

இறுதியாக சித்தார்த்தன். அவருடன் வேறுவிதமாக அணுகினார். மாவையின் பலவீனங்களையும் சொல்லி, விக்னேஸ்வரனின் அவசியத்தையும் சொல்லி, விக்னேஸ்வரன் போட்டியிடுவதுதான் பொருத்தமென்றார். மாவை ஆசைப்படும்போது அவரை விட வேறொருவரை நியமிப்பது சரியில்லையென சித்தார்த்தன் சொல்ல, “தம்பி… மாவைக்காக நிற்கிறியள். நாளைக்கு அவர் இதிலிருந்து விலகினால் என்ன செய்வியள்?“ என ஒரு லொக் போட்டார். மாவை விலகினால், நீங்கள் யாரையும் நியமிக்கலாமென்றார் சித்தார்த்தன். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

அடுத்தது ஒப்ரேஷன் மாவை.

சம்பந்தன் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள்தான் மாவையுடன் பேசியது. மாவை போட்டியிட இது பொருத்தமான நேரமல்ல என தொடங்கி, அதையும் மீறி போட்டியிட முயன்றால் வரலாற்றில் ஒரு மோசமான இடமே கிடைக்குமென கொஞ்சம் அடைவைஸ், கொஞ்சம் மிரட்டல் பாணியில் பேச, மாவை பின்வாங்கி விட்டார்.

பிறகு எல்லாம் சுபம்.

சரி, இப்பொழுது விசயத்திற்கு வருவோம். ஐந்து வருடத்தின் முன்னர் தான் செய்த பாவமாக மாவை எதை குறிப்பிடுகிறார் என்றால், போட்டியிலிருந்து விலகியதையே. தான் விலகியிரா விட்டால் விக்னேஸ்வரனிற்கு இடம் கிடைத்திருக்காதென்பதே மாவையின் கருத்து.

ஆனால் அது முற்றிலும் சரியானதல்ல. மாவை விடாப்பிடியாக நின்றிருந்தால் கூட, அவரால் போட்டியிட்டிருக்க முடியாது. மாவை முதலமைச்சர் வேட்பாளரிற்கு பொருத்தமானவர் அல்லவென்பதுதான் சம்பந்தனின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும்!

கூட்டமைப்பின்- இரா.சம்பந்தனின்- முடிவை மீறி போட்டியிட போகிறேன் என அடம்பிடித்திருந்தால், அண்ணன் இப்பொழுது துரோகிகள் கூடாரத்தில், ஆனந்தசங்கரிக்கு அடுத்த சீற்றில்தான் உட்கார்ந்திருப்பார்.

ஆகவே, ஐந்து வருடத்தின் முன்னர் அவர் எந்த பாவமும் செய்யவில்லை. அதனால் பாவமன்னிப்பும் அவசியமில்லைத்தானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here