புளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 7

பத்திரிகையாளர் சிவராம் கொல்லப்பட்ட சம்பவத்தின் சில பகுதிகளை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானச்சாலையில் சிவராமும் சில நண்பர்களும் 28 ஏப்ரல் 2005 அன்று மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் விடுதியில் இருந்துள்ளனர்.

மது அருந்தி முடித்து வெளியேறிய சமயத்தில், வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார். பின்னர் மறுநாள் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாக சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த தகவல்கள் எல்லாம் எல்லோரும் அறிந்தவைதான்.

இதில் அறியாத தகவல்- யார் சிவராமை கொன்றார்கள்?

சிவராம் தனக்கு பிரச்சனை தரக்கூடிய தரப்பு என புளொட்டையும், கருணா குழுவையும் கருதினார். கருணாகுழுவின் “சிக்கலானவர்கள்“ லிஸ்றில் சிவராமின் பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அதற்கான காரணத்தை சொல்லிவிட்டோம். புளொட்டின் லிஸ்றில் கடைசிவரை சிவராமின் பெயர் இருக்கவில்லை.

மாணிக்கதாசன் தன்னை கொல்வார் என சிவராம் அச்சப்பட்டது உண்மை. ஆனால் மாணிக்கதாசன் வைத்திருந்த கொல்லப்பட வேண்டியவர்கள் கணக்கு புளொட்டின் லிஸ்ற் அல்ல. அதனால்தான், மாணிக்கதாசன் தரப்பிலிருந்து சிவராமிற்கு ஆபத்து ஏற்படாமல் புளொட் கவனித்துக் கொண்டது. 1998 இல் மாணிக்கதாசன் மரணமாகிவிட்டார்.  அதனால் பின்னாளில் அவருக்கு சிக்கல் இருக்கவில்லை.

கருணாவின் பிரிவு சமயத்தில் புலிகளாலும் தனக்கு ஆபத்தென சிவராம் நினைத்தார். ஆனால், கருணாவை விட்டு திரும்பி வந்தால் மன்னிப்பு என புலிகள் சொல்லியிருந்தனர். அதை சிவராம் நம்பினார். அதனால் கருணாவிடமிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்து விட்டார்.

முதல்வார பத்திரிகையொன்றில் கருணாவிற்கு சார்பாக கட்டுரை எழுதியவர், புலிகள் கொடுத்த டோஸில் பயந்து, அடுத்த வாரமே, கருணா பிரிவு பிழையானதென ஒரு நீண்ட கட்டுரை எழுதனார். அந்த கட்டுரையுடன் புலிகள் தன்னை மன்னித்து விடுவார்கள் என சிவராம் நினைத்தார்.

ஆனால், இன்னும் இரண்டு தரப்புக்களின் “சிக்கலானவர்“ லிஸ்றிலும் சிவராம் இருந்தார். அதில் ஒன்று- விடுதலைப்புலிகள்!

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். தமது சிக்கலானவர் லிஸ்றில் இருந்த ஒருவருக்கு எப்படி மாமனிதர் கௌரவம் கொடுத்தார்கள் என தலையை பிய்ப்பார்கள். இதற்கான காரணங்கள் உள்ளன. ஒருவர் உயிரோடு இருக்கும் போதோ, அல்லது மரணத்தின் பின்னரோ இரண்டு விதத்தில் கௌரவம் பெறுவார். முதலாவது, அவரால் அந்த தரப்பிற்கு கிடைக்கும் நன்மை. அந்த தரப்பில் அவர் செலுத்திய ஆதிக்கம். இரண்டாவது, இரண்டு தரப்பிற்கிடையிலான போட்டியில் நகர்த்தப்படும் காய்களாக சிலர் கௌரவிக்கப்படுவார்கள்.

சிவராம் விவகாரம் இரண்டாவது. அவர் பத்திரிகைதுறையில் ஜாம்பவான் என்பதெல்லாம் சரி. ஆனால், அவர் புலிகளிற்கு விசுவாசமானவர் அல்ல. அவருக்கென மனதில் சில கனவுகள் இருந்தன. அதன்படி இயங்கினார். சிவராம் தனக்கானவர் அல்லவென்பதை புலிகளும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், கருணாவுடனான மோதலால், அங்கிருந்து இழுக்கப்படும் ஒவ்வொருவரையும் முத்தாக புலிகள் கருதினார்கள்.

இரண்டாவது- கருணா குழுவால், தமது அமைப்பு சாராத பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் கொல்லப்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு பார்வைக்கு தெரிய, கொஞ்சம் தூக்கலாகவே காண்பிக்கும் உத்தியையும் கையாண்டார்கள்.

சரி, சிவராம் கொலை விசயத்தில், இன்னொரு பாதையால் விசயத்திற்கு நுழைவோம்.

இதுவரையான இணையத்தள, சமூக ஊடகவாசிகளின் கருத்துக்களை கேட்டுக்கேட்டு பழகிய உங்கள் மூளையில், இந்த கேள்விக்கான பதில் ஆம் என்றுதானே தோன்றியிருக்கும். ஆனால், உண்மை அதுவல்ல!

சிவராம் கொலையில் மிகப்பெரிய முரண்நகை, புளொட் இதில் இணைக்கப்பட்டது. சிவராமும்- புளொட்டும், கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களும்- சிவராமும் எப்படியிருந்தார்கள் என்பது சிவராமும் அவர்களும் மட்டுமே அறிந்தது. ஒருவகையில் சிவராமை அவர்கள்தான் பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றியும் இருந்தார்கள். இதெல்லாம் வெளியில் தெரியாத சங்கதிகள்.

அப்படியென்றால், இதற்குள் புளொட்டின் பெயர் எப்படி இழுக்கப்பட்டது?

இதுதான் மிக சுவாரஸ்யமான ஒரு விசயம்.

புளொட்டின் முக்கியஸ்தரான பீற்றர் (ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா) என்பவர்தான் சிவராம் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர். ஆனால் பின்னர் விசாரணை, நீதிமன்ற வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். ஆனால் தமிழ் ஊடகங்கள் சிலதான் புளொட்டை விடுவிக்கவில்லை!

சிவராம் கொலை வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியதும், இந்த வழக்கில் புளொட் மீது பழி விழ காரணமாக அமைந்ததும் சிவராமின் சிம் அட்டை.

சிவராம் கொல்லப்பட்ட சமயத்தில் சிம் அட்டைகளின் லொக்கேசனை கண்டறியும் தொழில்நுட்பம் இலங்கையிடம் இருக்கவில்லை. அமெரிக்காதான் சிவராமின் சிம்மின் லொக்கேசனை இலங்கைக்கு கொடுத்தது. அந்த லொக்கேசன்- பீற்றரின் வாகனம்!

சிவராமின் கைத்தொலைபேசியிலிருந்து சிம் கழற்றி வைக்கப்பட்டிருந்தாலும், அதன் லொக்கேசனை துல்லியமாக அறிந்து, பீற்றரின் வாகனத்தை பொலிசார் குறிவைத்தனர். பீற்றரின் வாகன டாஸ்போர்ட்டில் வைக்கப்பட்டிருந்த டயரிக்குள் அந்த சிம் இருந்தது. (ஆனால் உடனடியாக அதை பொலிசார் எடுக்கவில்லை) அனேகமாக சிம் லொக்கேசனை வைத்து இலங்கையில் ஒருவர் கைதான முதலாவது சந்தர்ப்பமாக இதுதான் இருக்கு வாய்ப்புண்டு.

ஒருநாள் இரவு புளொட் முகாமிற்கு சிவில் உடையில் சென்ற சிலர், பீற்றரை கைது செய்யப் போவதாக கூறினார்கள். அவர்கள் பாதுகாப்பு தரப்பினர் என தெரிந்தாலும், எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை முகாமிலிருந்தவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. கைதிற்கான காரணத்தையும் சொல்லவில்லை. பீற்றரை தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.

அப்பொழுது அந்த முகாமில் இருந்த இன்னொரு புளொட் முக்கியஸ்தரான ஆர்ஆர் என்ற இராகவனிற்கு இந்த கைதில் சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். பீற்றரை “போடுவதற்கு“தான் யாரும் இப்படியொரு செற்றப் செய்கிறார்களோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. பீற்றரை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தின் பின்னால், முகாமிலிருந்த வாகனமொன்றில் பின்தொடர்ந்தார். பீற்றரை அழைத்து சென்றவர்கள், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்கள். ஆர்ஆரும் தனது வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்.

பீற்றரை ஏன் கைது செய்தார்கள் என்பதை அறிந்துகொள்ளத்தான் வந்திருப்பதாக பொலிசாரிடம் கூறினார். அப்பொழுதுதான் பொலிசார் விடயத்தை சொன்னார்கள்.

பீற்றரை கைது செய்ததும், அவரது சிம் அட்டையை கைப்பற்றி விடலாமென பொலிசார் நினைத்தனர். ஆனால் முடியவில்லை. பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஆர்ஆர் திரும்பி சென்றால், தடயங்களை அழித்து விடலாமென்று நினைத்த பொலிசார், ஆர்ஆர் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அவர் கைது செய்யப்படவும் இல்லை. வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. (சிம் அட்டை கைப்பற்றப்பட்டிருக்காத நிலையில், அவர் உடனே திரும்பி செல்ல அனுமதித்தால், தடயங்களை அழித்து விடலாமென பொலிசார் கருதியதாக பின்னர் குறிப்பிட்டிருந்தார்கள்.

அவ்வளவுதான். மறுநாள் தமிழ் ஊடகங்களில் பீற்றர், ஆர்ஆர் கைது என கொட்டை எழுத்தில் தலையங்கம் போட்டார்கள்!

மூன்று நாளின் பின் சிவராமின் சிம் அட்டை பீற்றரின் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதன்பின்னர்தான் ஆர்ஆர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேற அனுமதித்தனர். பீற்றர் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட ஒரே காரணம் அந்த சிம் அட்டைதான். எப்படி அந்த சிம் அட்டை பீற்றரிடம் வந்தது?

அந்த சிம் அட்டையை பீற்றரிடம் கொடுத்தது, விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த ஒருவரும், புளொட் அமைப்பிலிருந்த ஒருவரும்!

இதையெல்லாம் கேட்க, இடியப்ப சிக்கலாக உங்களிற்கு தோன்றும். சில பெரிய கைகள் செய்யும் ஒப்ரேஷன்கள் இப்படித்தான் தலையை சுற்றவைக்கும் விதத்தில் இருக்கும்.

அவர்கள் இருவரும் புலிகள், புளொட் அமைப்புக்களில் இருந்தவர்கள் என்று சொன்னோம் அல்லவா. ஆனால், அவர்கள் அந்த சமயத்தில் அந்த அமைப்புக்களில் இருக்கவில்லை. விலகி வந்து விட்டார்கள்.

பீற்றரிடம் சிம் அட்டையை கொடுத்தவர்களில் ஒருவர் புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர் என்று சொன்னோம் அல்லவா, அவரது பெயர் சுரேஷ். இப்படி சொன்னால் சிலரிற்கு அவரை தெரிய வரும். பெரும்பாலானவர்களிற்கு மண்டைப்பீஸ் சுரேஸ் என்றால்தான் தெரியும். இவரை பின்னர் புலிகள் சுட்டுக்கொன்றார்கள்.

புலிகளில் இருந்து பிரிந்து வந்த பின்னர், புலிகளிற்கு சுரேஸ் பெரும் தலையிடி கொடுத்தார். மட்டக்களப்பில் புலிகள் மீது நடத்தப்பட்ட முதலாவது கிளைமோர் தாக்குதலிலும் சுரேஸின் பங்கு முக்கியமானது. சுரேஸை உயிரோடு இருப்பது தமக்கு பெரிய பிரச்சனையென்பதை புலிகள் அறிந்திருந்தார்கள். புலிகளின் புலனாய்வு அணியின் முக்கிய இலக்குகளில் ஒருவராக சுரேஸ் இருந்தார்.

அவரை சுடுவதற்கு புலிகள் ஒரு பெண்ணை தயார் செய்தார்கள். சுரேஷின் முன்னாள் காதலியான அந்த பெண் படுவான்கரையில் வசித்து வந்தார். அவரை புலிகள் கண்டுபிடித்து, கொழும்பிற்கு வேலைக்கு செல்பவரை போல தயார்படுத்தினார்கள். அந்த பெண் சுரேஸின் தொடர்பை மீள ஏற்படுத்தி, காதலியாக நடித்து, கொழும்பில் அறையொன்றுக்குள் வைத்து சுரேஷை சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். அப்பொழுது பத்திரிகைகளிலும் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here